ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் – ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஒரு இடதுசாரியப் பார்வை!

– சேனன்

பாகம் 1

இரண்டாம் உலக யுத்தத்தின் கொடிய அனுபவத்தின் பின்பு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் மேல் கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது.

அர்த்தமற்ற இந்த யுத்தம் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளுக்கான யுத்தமேயன்றி மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் ஏற்படுத்தவில்லை என்பது பொது அறிவாக இருந்தது.

மாறாக யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளைத்தான் மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இனிமேலும் இத்தகைய கொடுமை வேண்டாம் என்ற அடிப்படையில் அமைதிக்கான அவா மேலோங்கியிருந்தது.

இது மக்கள் மத்தியில் புரட்சிகர நடவடிக்கைகளைத் தூண்டுவதாயும் இருந்தது. ஆளும் வர்க்கத்தின் மேலான அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

மக்களின் தேவைகளுக்கு விட்டுக்கொடுத்து நகராவிட்டால் ஆளும் சக்திகளைப் புரட்சிகர அலை உடைத்துச் செல்லும் என்ற நிலையிருந்தது.

முதலாம் உலக யுத்தத்தின்போது ரஷ்யாவில் நிலவிய யுத்த மறுப்பும் அமைதி வேட்கையும் புரட்சிகர மாற்றத்தை நோக்கி அம்மக்களை நகர்த்தியதையும் அங்கு சோசலிச புரட்சி வெடித்ததும் அனைவரது நினைவுகளிலும் பசுமையாக இருந்த காலம் அது.

வளைந்து கொடுக்காமல் தமது அதிகாரத்தைத் தொடர முடியாதிருந்த முதலாளித்துவ வர்க்கமும் அரச சக்திகளும் பல விடயங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உட்பட்டனர்.

இலவச தேசிய மருத்துவ சேவை (NHS) மற்றும் இலவச கல்வி முதலான பல்வேறு மக்கள்சார் விட்டுக்கொடுப்புகள் இவ்வாறுதான் உருவாகின.

இதே சமயம் இனிமேல் யுத்தம் நடக்காமலிருக்க தாம் நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்ற பாவனையில் ஜக்கிய நாடுகள் சபை (UN) முதலான அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன.

ஜரோப்பிய நாடுகளுக்கிடையில் யுத்தம் நிகழாதவாறு அந்த நாடுகளுக்கு மத்தியில் ஒரு உடன்படிக்கை நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இருப்பினும் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த வலதுசாரிய முதலாளித்துவ அரசுகளுக்கு யுத்தம் முடிந்த கையுடன் இருந்த முதன்மைத் தேவைகள் வேறுபட்டதாக இருந்தது.

advertisement
இதில் இரண்டு விடயங்கள் முக்கியமாக கவணிக்கப்பட வேண்டியவை. யுத்தகாலத்தில் பேர்லின் வரை முன்னேறியிருந்த ரஷ்ய கம்யூனிச விரிவாக்கத்தை எவ்வாறு தடுப்பது என்பது தலையாயப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது.

யுத்த காலத்தில் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள் நிர்மானம் செய்வதற்கான மூலப் பொருட்கள் குறிப்பாக நிலக்கரி மற்றும் இரும்பு வளம் ஜரோப்பா எங்கும் பரந்து கிடந்தது. இவற்றை பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய முதலாளிகளுக்கிடையிலான போட்டியை நெறிப்படுத்த வேண்டிய தேவையும் இருந்தது.

1948ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்சலில் நடந்த ஒப்பந்தம் மூலம் ஜரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் கம்யூனிச ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இதன்மூலம் ஜரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்பு என்ற இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே “ஜரோப்பிய ஒன்றியத்துக்கான” நடவடிக்கைகளைத் துவக்கி வைத்தன. இவ்வாறு தான் யுத்தத்தை எதிர்க்கிறோம் என்ற பாவனையில் அவர்கள் இன்னுமொரு யுத்தத்துக்கான தயாரிப்புக்களைச் செய்தனர்.

பின்பு வந்த பனியுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தததும் பல்வேறு போராட்டங்களை முடக்கியதும் நாமறிவோம்.

மேற்கு ஜேர்மனியை மீள்நிர்மானம் செய்வதன் மூலம் மேலதிக லாபங்களை திரட்டும் நிலையில் இருந்த பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து ஐம்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு பொருளாதார உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன.

நிலக்கரி, இரும்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள வழியேற்படுத்தியதன் மூலம் விரைவில் மேற்கு ஜேர்மனிய முதலாளித்துவ அதிகாரம் கட்டி நிமிர்த்தப்பட்டது.

இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் பெரும் லாபமீட்டிய மேற்கு நாடுகள் குறிப்பாக மேற்கு ஜேர்மனியும், பிரான்சும் பல முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டன.

“ஜரோப்பிய ஒன்றியத்தில்” இருக்கும் பொருள் வளங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அதற்கான தனிப்பட்ட ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மிகப்பெரும் லாபம் ஈட்டும் அனுபவம் அவர்களுக்கு கிடைத்தது.

இங்கிலாந்து முதற்கொண்டு சில பொருளாதாரப் பலம் பொருந்திய நாடுகள் இத்தகைய ஒப்பந்தங்களில் கலந்துகொள்ளாமல் இருந்தமைக்கு முதன்மைக் காரணமும் லாபத்துக்கான போட்டி நோக்கிலேயே இருந்தது.

இங்கிலாந்து ஏகாதிபத்தியம் உலக நாடுகள் பலதை தமது காலனிகளை சுரண்டிச் சுரண்டித் தமது லாபத்தை பெருக்கிக்கொண்டன.

இந்த உலக ஆதிக்கத்தை ஜரோப்பிய நாடுகளுக்கு விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை. அதே சமயம் ஜரோப்பாவில் தமது லாப பங்கைப் பெற்றுக்கொள்ள தனிப்பட்ட ஒப்பந்தங்களை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டனர்.

இத்தகைய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட போதும்கூட ஒரு தனி ஒற்றைச் சந்தையாக (Single Market) ஜரோப்பிய பொருளாதாரம் இயங்கவில்லை.

பொருளாதாரப் பலம் பொருந்திய நாடுகளுக்கிடையிலான கடும் போட்டி நிகழும் சந்தையாகவே இச்சந்தை தொடர்ந்து இயங்கி வந்தது.

ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள்தான் இச்சந்தையை ஆதிக்கம் செலுத்தி வந்தன. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜரோப்பிய நாடுகள் இந்த பலமான நாடுகளால் சுரண்டப்பட்டன.

இவ்வாறிருந்த அதிகாரங்களுக்கு இடையிலான முரண்பாட்டை விட அதிக கூர்மையான முரண் இந்நாட்டு மக்கள் மத்தியில் வளர்ந்திருந்தது.

பலம் குறைந்த நாடுகளில் இருந்த மக்கள் மேலும் மேலும் வறுமை நோக்கித் தள்ளப்பட்டனர். முழு லாபத்தை அடைவதற்கு பெரும் முதலாளிகளுக்கு இது ஒரு தடையாகவும் இருந்தது.

ஏனெனில் தேசிய அரசுகள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளால் மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டிருந்தன.

இத்தேசிய அரசுகளின் நடவடிக்கைகள் தமது லாப நலனுக்கு எதிராகத் திரும்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டிய தேவை பெரும் தேசிய அரசுகளுக்கு (ஜேர்மனி, பிரான்ஸ்) இருந்தது.

அதே சமயம் பொருளாதாரப் பலமான இந்நாடுகளும் தமது சொந்த முதலாளித்துவ நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தமது தேசிய எல்லைகளைப் பலப்படுத்திக்கொண்டிருந்தன.

தேசிய எல்லைக்குள் சந்தையை பொதுமைப்படுத்தி பலமடையும் அதே சமயம் அந்த எல்லையைத் தாண்டி ஏனைய நாடுகளின் சந்தைகளையும் கைப்பற்ற வேண்டிய முரண்நிலையில் இருந்தது வேகமாக வளர்ச்சி பெறத் தொடங்கியிருந்த முதலாளித்துவம்.

இம்முரண்நிலை முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டும். உற்பத்தியும் லாப நோக்கும் தேசிய எல்லைகளைத் தாண்டிய உறவைக் கோரி நின்றபோதும் முதலாளித்துவத்தால் தேசிய அரசின் எல்லைகளை உடைத்து முன்னேறிவிட முடியாதிருக்கும் முரண்நிலை இது.

இதே சமயம் பலமான நாடுகள் பலம் குறைந்த நாடுகளை மிரட்டி கட்டுப்படுத்துவதையும் செய்தன. பலமற்ற நாடுகளின் சந்தையும் அங்கிருக்கும் மலிவான வேலையாட்களும் இவர்களுக்கு தேவைப்பட்டது.

உற்பத்தியைக் குறைந்த செலவில் செய்து பரந்த சந்தையில் விற்பது பெரும் லாபமீட்டலின் அடிப்படை விதி என்பது எமக்கு தெரிந்ததுதான்.

எல்லா உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிப்பது மனித உழைப்பு வளம் என்பதும் அதன் செலவு கூடிக்குறைதல் லாபத்தைக் கூட்டிக் குறைப்பதும் பலரும் அறிந்ததே.

இந்த அடிப்படையில் இருந்து எழும் பொருளாதார நடவடிக்கைகள்தான் மேற்சொன்ன நாடுகளுக்கு இடையிலான முரண் உறவு முதற்கொண்டு லாபப் போட்டி சார் பல்வேறு முரண்களைத் தோற்றுவிக்கிறது.

பலம் பொருந்திய நாடுகளுக்கும் பலம் குறைந்த நாடுகளுக்கும் இருக்கும் நவீன காலனித்துவ உறவுமுறையை இன்று உலகெங்கும் நாம் பார்க்கலாம்.

இத்தகைய உறவுமுறையைப் பலப்படுத்தும் நோக்கில் உலகெங்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆசிய நாட்டு அரசுகள் உருவாக்கிக்கொண்ட ஆசியான் சுதந்திர வர்த்தக உடன்பாடு, தென் அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்பாடு என பல்வேறு வர்த்தக பிராந்திய உடன்பாடுகளையும் அவற்றுக்கிடையிலான கடும் போட்டி நிலவுவதையும் நாம் உலகெங்கும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

சமீபத்தில் Transatlantic Trade and Investment Partnership (TTIP), Trans pacific partnership (TPP) ஆகிய கொடிய ஒப்பந்தங்களை உலக நாடுகள் மேல் திணிக்க முற்பட்டு வருகிறது அமெரிக்கா.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் தேசிய அரசுகள் பல்தேசிய கம்பனிகளைக் கட்டுப்படுத்தும் உரிமைகளை இழக்கின்றன.

இருப்பினும் சிறு லாபங்களுக்காக தேசிய முதலாளித்துவம் இதற்கான ஆதரவை வழங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால் இதில் பெரும் லாபமீட்டுவது பல தேசிய கம்பனிகள் செறிந்த அமெரிக்க முதலாளித்துவமாகவே இருக்கும்.

இந்த வகை பொருளாதார ஒப்பந்தத்தின் மூலம் 1992ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அடிக்கல் இடப்பட்டது (Maastricht treaty).

ஜ.எம்.எப் மற்றும் உலக வங்கி முதலியன தாம் கடன் வழங்குவதற்கு முன்னிபந்தகையாக பொதுச்செலவை குறைக்க தூண்டுவது அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற திட்டங்களை சட்டப்படியாக்கியே மேற்சொன்ன ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய பட்ஜட்டின் பற்றாக்குறையினை மூன்று வீதத்துக்கும் கூடாமல் வரையறுப்பது, அரச கடன் 60 வீதத்துக்கும் கூடாமல் வைத்திருப்பது முதலிய முதலாளித்து நடைமுறைகள் ஒன்றியத்தில் இருப்பதற்கான நிபந்தனைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சமீபத்திய பொருளாதாரச் சரிவு ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் கடன் வீதத்தை 60 வீதத்தை தாண்டி சென்று விட்டது என்பது வேறு விடயம்.

இந்த விதிகளை அவர்கள் தமது லாப நலன்களை பாதுகாக்க மட்டுமே ஏற்படுத்திக்கொண்டனரே தவிர அவற்றைத் தமது நலன் நோக்கி மற்றிக்கொள்ளும் உரிமையையும் வைத்துக்கொண்டனர்.

அத்துடன், பொது நாணயத்துக்கான விதிகளையும் ஏற்படுத்திக்கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறுதான் லாப நோக்கத்தின் அடிப்படையில் இருந்து உருவாகியது.

இது “மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ பொருளாதார உடன்பாட்டு ஒன்றியம்” என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த ஒன்றியம் முழுக்க முழுக்க முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நலன்களை நிலைநாட்டும், அவர்களின் பாதுகாப்பை நிலைநாட்டும் நோக்கு சம்மந்தப் பட்டது.

தவிர இது மக்கள் சார்ந்த அமைப்பாக உருவாக்கப்படவில்லை. ஐரோப்பாவில் இருக்கும் மக்கள் மத்தியில் வாக்கொடுப்பு நடத்தி இந்த ஒன்றியம் உருவாக்கப்படவில்லை.

மூடிய கதவுக்குப் பின் வங்கி முதலாளிகளும், பெரும் செல்வந்தர்களும், முதலாளித்துக்கு சேவகம் செய்துவந்த வலதுசாரிய அரசியல்வாதிகளோடு கூடியிருந்து கதைத்துப் பேசி அவர்களின் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்த “ஒன்றியம்”.

வேலைவாய்ப்பு உருவாக்குதல், மக்கள் நல சேவைகளை உருவாக்குதல், இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவை ஆகியவற்றைப் பாதுகாத்தல், தொழிலாளர் நலன்களையும் அவர்களது வேலை நிறுத்த உரிமைகளையும் ஆதரித்தல், என்ற எந்த மக்கள் நலன் அடிப்படையும் இந்த ஒன்றிய உருவாக்கத்தின் நோக்கமாக இருக்கவில்லை.

இவர்களின் நலன் மக்களின் நலனிலிருந்து எதிர் திசையில் நகர்கிறது. ஒன்றியம் தொழிலாளர் நலன்களை ஆதரித்த வரலாறு இல்லை.

மாறாக முக்கிய சேவைகளை தனியார் மயப்படுத்தச் சொல்லி தேசிய அரசுகளை வற்புறுத்திவரும் வரலாறுதான் இந்த ஒன்றியத்தின் வரலாறு.

இது ஒரு வகை நாணய ஒன்றியம், ஒருவகை வங்கி ஒன்றியம். மற்றபடி இந்த ஒன்றியம் மக்களை குறிப்பாக வேலைசெய்யும் மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பல்ல.

அத்தகைய மக்கள் இணைவுக்கு எதிராக இயங்கும் அமைப்ப இது. ஓற்றைச் சந்தை எனச் செல்லப்படும் ஐரோப்பிய சந்தை ஏதோ மக்கள் நலனுக்காக முன்வைக்கப்படுவதாக பேசப்படுவது போன்ற பச்சைப்பொய் வேறொன்றுமில்லை.

மேற்சொன்ன முரண்களைக் கொண்ட சந்தையின் போட்டிகள் மறைக்கப்படுவது மட்டமின்றி இச்சந்தையில் இருந்து விலகி நிற்பதால் மக்களுக்கு இழப்பு என்றும் பொய் சொல்லப்படுகிறது.

அமெரிக்க மேற்கு ஏகாதிபத்திய சந்தை சார் முன்னெடுப்புகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் வாழ்வு சிதைந்துவிடும் என பலமற்ற நவீன காலனித்து நாட்டு மக்கள் மிரட்டப்படுவது போன்ற வாதமே அது.

இத்தகைய வாதங்களைத் தாண்டி உண்மையான அறிதல் நோக்கி நாம் நகரவேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *