விமர்சனங்கள் உட்பட அனைத்து எழுத்துக்களும் அரசியல் சார்ந்ததே
– ஆக்காட்டி இதழ் 12 – யூலை –செப் 2016
தொண்ணுாறுகளில் பாரிஸில் ‘அம்மா’, ‘எக்ஸில்’ இதழ்களில் கலகக்குரலாக ஒலித்தவர் சேனன். அவ்விதழ்களில் விளிம்புநிலை உரையாடல்கள் தனித்துவமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளையும் எழுதியவர். ‘அம்மா’வில் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவரின் சிறுகதைகள் மையம் சிதைக்கப்பட்டவையாகவும், கட்டமைக்கப்பட்ட திருவுருக்களைக் கவிழ்ப்பதாகவும் இருப்பவை. அதிக விவரணைகளற்ற நேரடியான மொழியில் கதைசொல்லும் அக்கதைகள் சொல் முறையினாற் தனித்துவமானவை. வழமையான தொடக்கம் – நடு – முடிவு என்ற தமிழ்க் கதைகளின் சட்டகங்களிற்குள் அடங்கிவிட முடியாதவை. இந்தக் கதை சொல்லல் முறையிலிருந்து விலகித் துண்டுபிரசுரத்திற்கு அணுக்கமான மொழியில் அண்மையில் இவர் எழுதிய ‘லண்டன்கார்’ நாவல் இலங்கைச் சூழலில் அதிகம் கவனிப்பிற்குள்ளாகியது. லண்டன் கலவரமும் அதன் விளிம்புநிலை பங்காளர்களான உதிரிப்பாட்டாளிகள், புலம்பெயர்ந்த கருப்பர்கள், தற்பாலின விருப்பாளர்கள் என்பவர்கள் பற்றிப் பொதுமனநிலை கவனத்திற் கொள்ளாத கதையாடல்களை ‘லண்டன்காரர்’ நாவலிற் கவனப்படுத்தியிருக்கிறார். தற்போது பிரித்தானியாவில் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும் உரையாடல்கள் எனத் தீவிரமாக தொழிலாளர்களது உரிமைக்காக செயற்பட்டு வருகிறார். ஆயினும், இலக்கியமே தனக்கு உவப்பான அடையாளமெனத் தொடர்ந்தும் சிறுபத்திரிகைகள், இணையத்தளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் அரசியற் கட்டுரைகளை எழுதும் சேனன் HISTORY OF RESISTANCE என்ற இலங்கை அரசியல் வரலாறு தொடர்பான நுாலையும் எழுதியுள்ளார்.‘கொலை மறைக்கும் அரசியல்’ , ‘இனத்துவேசத்தின் எழுச்சி’ ஆகிய கட்டுரைத்தொகுப்புகளையும் ‘லண்டன்காரர் ’ என்ற நாவலையும் தமிழில் தந்திருக்கிறார். இவரைப் பாரீஸ் நகரில் கடந்த மார்ச் மாத மாலைப்பொழுதொன்றில் சந்தித்தோம். அவருடனான உரையாடல்கள் எதையும் தயக்கமின்றிக் கேள்விகேட்கவும் எது பற்றியும் பேசவும் நமக்கான இடத்தைத் தந்தது. அதன் தொடர்ச்சியாக ஆக்காட்டி குழுவினர் மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி ஊடாகவும் இந்நீள் உரையாடலைத் தொகுத்தோம்.
1.நாங்கள் இதிலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றோம். நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுதக்கூடாது?
இந்தக் கேள்வியைத்தான் நானும் கனகாலமாகக் கேட்டுக்கொண்டு திரிகிறேன். நாவல் என்றால் என்ன? என்பது பற்றிக் குழம்பிக்கொண்டிருக்கும் மனநிலையில் இருந்து கொண்டு நாவல் எழுதுவது எப்படி? இதனாற்தான் குறுநாவல் என்று எழுத வெளிக்கிட்டுப் படுதோல்வி அடைந்திருக்கிறேன்.
நீங்கள் இக்கேள்வியைப் ‘பொடி வைச்சுக்’ கேட்கின்றீர்கள் என்று தெரிகிறது. ‘ஒரு வடைக்கும், தேத்தண்ணிக்குமாக இப்பிடியான கேள்விகளைத் தாங்க வேண்டிய அவசியமில்லை’ எனத் திட்டித் தூரவிலத்தும், கவித்துவ மனப்பக்குவம் எனக்கு இன்னும் வயப்படவில்லை.
தற்போது நாவல் என்ற பெயரில் இன்னுமொரு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். வெறும் குப்பை வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்று கிட்டத்தட்ட ஒரு நூறு பக்கங்களைத் தாண்டிய பிறகுதான் தெரிந்தது. இது தவிர இன்னும் இரண்டு நாவல்களுக்கான வேலைகள் அரைகுறையில் மூலை முடுக்குகளில் காய்ந்து கொண்டு கிடக்கிறது. எனக்கு நாவல் எழுதத் தெரியாமல் இருப்பதற்கு நான் என்னைக் குறைசொல்லிக்கொண்டு கழிவிரக்கப்படத் தயாரில்லை. அதற்கு நீங்களும் பொறுப்பு. தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் காரணம்.
தமிழில் ‘நாவல்’ செய்துகொண்டிருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களைப் படிக்க முடியவில்லை. தமிழ் இலக்கியம் படிப்பதை வருசத்துக்கு வருசம் குறைத்துக்கொண்டே செல்கிறேன். படித்தவைகளை மறப்பதற்குத் தினமும் காலை நாலு மணியில் இருந்து நாலரை வரை தியானம் செய்து வருகிறேன். அப்படியாவது ‘நாவல்’ எழுதும் கலை கைவருகிறதா என்று பார்ப்போம்.
2. ‘லண்டன்காரர்’ நாவல் முயற்சி படுதோல்வி என்கிறீர்கள். அப்படியானால் நல்ல நாவல் எப்படி இருக்க வேண்டும்?
லண்டன்காரர் நாவல் படுதோல்வி என்று சொல்வதால் எனக்கு ‘நல்ல நாவல் என்றால் என்ன?’ எனத் தெரிந்திருக்கும் என்ற அவசியமில்லை. மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு நாற்பது பக்கம் தேறலாம் என்றார் ஒரு பிரபல எழுத்தாளர். சில விசயங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றது அவ்வளவுதான் என்றார் இன்னொருவர். வெறும் பிரச்சார நெடி வீசுகிறது என மூக்கைப் பொத்திப் பிடித்தபடி சிலர் விமர்சித்திருந்தனர். உயர் இலக்கியம் எதிர்பார்த்தோர் மத்தியில் ஏற்பட்ட இந்தத் தொய்வுதான் தோல்வி எனச் சொல்ல வைக்கிறது. ‘லண்டன் தமிழ் மக்கள் பற்றிய பைம்பலை’ எதிர்பார்த்தவர்களையும் இந்த நாவல் ஏமாற்றி விட்டது.
இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட குறுகிய வட்டங்களும் இருக்கின்றன. அப்படி ஒரு இன்னுமொரு சின்ன வட்டத்தை நோக்கித்தான் இந்த நாவல் மொழி பேசியது. விளிம்பில் இருக்கும் உயிர்நிலையில் இருந்து எழுதுவது அந்த உயிர்கள் படிப்பதற்கு அப்பாலான அழகியல் நோக்கி நகரகூடாது என எதிர்பார்த்தேன். அவர்களின் வாழ்வைக் கைப்பற்றி, பின்பு அதை அழகுபடுத்திப் பண்டமயப்படுத்தும் முறையில் இருந்து தப்பவேண்டும் என்ற உள்ளுணர்வில் இருந்து விடுபடமுடியாத வேதனையாகத்தான் வெட்டுதல் கொட்டுதலுடன் மாதங்கள் கழிந்தது. இங்கு வெற்றி தோல்வி என்பதில்லை. ரசித்தார்கள். புத்தகத்துக்குத் தூர நின்ற பலர் படித்தார்கள் என்பதில் நிம்மதிப் பெருமூச்சை விட்டுக்கொள்கிறேன். அவ்வளவுதான்.
இந்த அவதானங்கள் பயன்பாடு சார்ந்து நிகழ்கிறது. நுகர்வுத்தளத்தில் இருந்து பேசப்படுகிறது. தவிர ஆக்கமுறையின் அறுதியான அவதானங்கள் அல்ல. தோல்வி வெற்றி என்பதை வரையறுத்து வெற்றிகர நாவலுக்கான சூத்திரத்தைக் கண்டறிந்துவிட முடியாது. பதிப்புக்குப் பிறகு வருகிற விசயங்களை ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் அவற்றைப் பொருட்டாக எடுத்து மட்டும் ஆக்க முறையைத் தீர்மானித்துக்கொள்ள முடியாது. தொடர்ந்து தோல்வி பெற்ற ஆக்கங்களைப் படைத்துக்கொண்டிருந்தவர் காஃப்கா. அது போல் பல உதாரணங்கள் உண்டு. எழுத்தாளரின் தோல்விக்கும் படைப்பின் தோல்விக்கும் வித்தியாசமுண்டு. என்னைப் பொறுத்தவரையில் இலக்கிய வட்டத்துக்குள் ‘லண்டன்காரர்’ படுதோல்வியடைந்துள்ளது. ஃபெளஸர் , வாசன், சாரு நிவேதிதா போன்றோர் பாராட்டி எழுதியிருந்தாலும் அவை தனித்து நிற்கும் விமர்சனங்களாக மட்டுமே ஒதுங்கி நிற்பதாகப் படுகிறது. இலக்கியப் பிரக்ஞை இந்த நாவலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.
நான் எப்படி இந்த நாவலைப் பார்க்கிறேன் என்பதையோ அல்லது மேற்சொன்ன வேறு வட்டம் என்பது பற்றியோ தற்போது பேச விருப்பப்படவில்லை. அதற்குச் சற்றுக் காலம் கழியட்டும். நேரம் சில பல வெளிகளுக்கு இடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பேசுவோம்.
3. வருங்காலத்து ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு நாவல் எப்படி எழுதக்கூடாது என்பதை அறிய இது போன்ற நாவல்களைப் படிக்கவேண்டும் என்று லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவலைக் குறிப்பிட்டு இருந்தீர்கள். கானகனுக்கு இவ்வருடம் யுவபுரஸ்கார் விருது கிடைத்திருக்கிறதே?
விருது பெற்றால் என்ன? விருதுக்குப் பாராட்டிய விழாவில் மிஸ்கினில் இருந்து எஸ்.ரா, சாரு ஈறாகப் பேசித்தள்ளியிருக்கிறார்கள். பல விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இதை எதிர்பார்த்தும்தான் மேற்சொன்ன விமர்சனம் வைக்கப்பட்டது. சொல்லப்பட்ட விசயத்தின் ஒரு பகுதி இதோ –
‘கண்ட கண்ட பாட்டுக்குப் புத்தகங்கள் தூக்கி எறியப் படுவதும் – பப்பாவில் ஏற்றிப் பூசிக்கப்படுவதும் நிகழ்வதற்குப் பின்னால் ஒரு ‘சொறி’யும் அரசியல் இயங்குகிறது. சொறிமுறை மற்றும் சொறிதல் அளவுகள் ஆகியன வைத்து இலக்கியங்களின் பலம்- பலவீனம் பேசப்படுகிறது. சொறிமுறை அரசியலை ஊக்குவிக்கும் பிதாவாக சாருநிவேதிதா ஒரு அவாதாரம் எடுத்தியங்குகிறார். விற்பனையையும் விலாசம் காட்டுதலையும் முன்வைத்து இன்று சில ‘கூட்டுக் குடும்பங்கள்’ கலைக்கொலை செய்து வருகின்றன. இதுதான் கலை என இங்கு ஒரு வரைவிலக்கணம் வைப்பதற்கு ஒரு துணிவும் எமக்கில்லை. பிறகு ஆயிரத்தெட்டு ஆங்கிலப் பெயர்களுடன் சாரு நமக்குப் பொல்லெடுத்துக் கொண்டு வந்துவிடுவார்.’
கானகனுக்கும் – விருதுக்கும் தொடர்பு இருப்பதை அதன் ஆசிரியரே ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவசர அவசரமாகப் பக்கங்கள் நிரப்பியதை அவரே சொல்லியிருக்கிறார். இதைத்தான் அப்பவே சுட்டிக்காட்டினேன். ஆட்டன்பரா டாக்குமென்ரிகளைப் பார்த்து நீங்களும் எழுதுங்கள். உங்களுக்கும் விருதுகள் கிடைக்கும். இது ஒரு வகை ஆய்வு முயற்சி. நாவல் முயற்சி அல்ல என்பது தனிப்பட்ட கருத்து. பிரமைகளை ஏற்படுத்தி வருங்கால எழுத்தாளர்களை இத்தகைய சில்லறை உத்திகளுக்குள் முடக்கிவிடக்கூடாது.
4. லண்டன்காரருக்கு முந்திய உங்கள் கதைகளிலிருக்கும் உங்கள் துடுக்கான அல்லது பாசாங்கற்ற மொழியிலிருந்து – லண்டன்காராரில் பயன்படுத்திய – நேரடியான உரையாடும் பிரச்சாரத் தொனியிலமைந்த மொழியாக மாற்றமடைந்ததன் வித்தியாசத்தை உணரமுடிகிறது.ஏன் தங்களது மொழி அவ்வாறானது?
மொழி மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. மொழியின் பிடியில் இருந்து கருத்தை விடுவிக்க முடியாத நிலையில் இருந்து ஆடம்பரமாக எழுதும் முறையை விட்டொழிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதன் விளைவு அது. கவிதை எழுதுதல் – கவித்துவமாக எழுதுதல் – சிறுகதையை ஒரு கவிதா உணர்வுடன் நகர்த்துதல் என்ற ஆசைகள் முன்பிருந்தன. முன்பு வடிவத்தில் இருந்து உள்ளடக்கத்தை அணுகும் முறையிருந்தது. தற்போது உள்ளடக்கத்தில் இருந்து வடிவம் தோன்றவேண்டும் என விருப்பமாயிருக்கிறது. இது ஒரு பெருஞ்சவால். பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களுக்கு ‘தாமாக’ வருவதை எழுதுகிறார்கள். எல்லா எழுத்தாளர்களுக்கும் உள்ளுக்குள் ஒரு எழுத்தாணி இருக்கிறது என்றும் அது நீரோட்டமாக எழுத்தியக்கத்தின்போது மட்டும் இயங்குகிறது என்றும் – இதை எல்லா நல்ல எழுத்தாளர்களும் அறிவர் என்றும் ட்ரொட்ஸ்கி எழுதியிருப்பார். அதில் ஒரு உண்மையுண்டு. ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் எழுத்தை வர வைப்பதற்காக மரங்களையும் மலைசார் இடங்களையும் தேடித்திரிந்தார்கள். லஹரியில் எழுதுவதாக சு.ரா ஒருமுறை சொல்லியிருக்கிறார். எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்தக் கேள்வி நம்மைப் புடைத்தெடுத்துக்கொண்டே இருந்திருக்கிறது.
இது பற்றிய புரிதலில் தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. தமது உணர்வு நிலையில் இருந்து கடுதாசிக்கு வந்தவுடன் படைப்பு நிகழ்வு முடிந்துவிட்டது எனச் சில எழுத்தாளர்கள் கருதுவதற்கு இது உதவுகிறது. இந்தக் கருத்து நிலையால் எழுதுபவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்கிறார்கள். எனது உணர்வும் -அவதானங்களும் – அதைப் பதியும் மொழியும் தனித்துவமானது என எழுத்தாளர் எண்ண இது உதவுகிறது. அத்தகைய தனித்துவ உன்னதத்தை அனைவராலும் அடைய முடியாது என்றும் – இது ஒரு தனிப்பட்ட திறன் என்றும் ஏற்றுக்கொண்ட நிலையை இது கோருகிறது. இவ்வாறு புனித ஆன்மா கடுதாசியில் கசிவது படைப்பின் முடிவாகிறது. இதனால் தாம் எழுதிய ஒவ்வொரு வசனங்களும் அனைவரது வாசிப்புகளுக்கும் உகந்தவை எனச் சில எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.
படைப்பு மனநிலையில் மட்டுமின்றி வாசிப்பு மனநிலையிலும் மேற்கண்ட போக்குண்டு. இதனாற்தான் எழுத்தாளர்களுக்கு ‘வாசகர் வட்டங்கள்’ உருவாகின்றன.. உலரும் வசனங்களை அதே ‘லஹரியில்’ வாசிக்கக் காத்திருப்போர் இருக்கிறார்கள். ஆன்மாக்களின் இசையைப் பகிர்தலும் அதை நுகர்தலும் என்ற ஒரு வகை ஆன்மீகத்தனமான படைப்பியக்கமாக இது இருக்கிறது.
நீண்ட கதை – அல்லது நாவல் என்ற வடிவம் மேற்சொன்ன முறையைக் கேள்விகேட்பதாக இருக்கிறது. அகத்துக்குள் இருக்கும் பதிவுகளால் மட்டுமான புத்தகமாக அது வெளிவரக்கூடாது என நினைக்கிறேன். புறத்தோடு உறவாடும் எழுத்தின் அவசியம் இருக்கிறது. வெறும் ஆய்வுத் தளமாக இன்றிப் புறநிலை அனுபவத் தளங்களும் தேவை. டவுன் அன்ட் அவுட் இன் பாரிஸ் அன்ட் லண்டன் என்ற ஜோர்ஜ் ஓர்வலின் புத்தகத்தைப் படிப்பவர்கள் அந்தப் புத்தகம் எழுத அவர் என்ன செய்தார் என்றும் படிக்க வேண்டும். தனது கதாபாத்திரங்களின் நிலையில் இருந்து எழுத அவர் முயன்று எடுத்துக்கொண்ட வாழ்க்கை முறை அவரது எழுத்துகளில் வடிவதை அவதானிக்கலாம். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க அந்தக் கதாபாத்திரமாக வாழ்தல் என்ற முறையைச் சில நடிகர்கள் நடைமுறைப்படுத்தி வருவது அறிவீர்கள். அத்தகைய படைப்பு முறை தன்னிலையைப் பொதுமைப்படுத்திப் படைப்பைப் புறத்தில் முன்னிலைப்படுத்துகிறது. இதனால் உள்ளடக்கம் அதற்கேற்ற வடிவங்களைக் கோரி நிற்கிறது. எமது அகத்துக்கும் புறத்துக்குமான யுத்தமாக படைப்பு வடிய வேண்டும்.
நுணுக்கமான தளங்களை நோக்கி எழுத்தாளரை இதுதான் நகர்த்த முடியும். சுய விமர்சனமும் சுய செம்மைப்படுத்தலும் செய்யாமல் நிகழும் படைப்புகள் பற்றி நமக்குப் பல சந்தேகங்கள் உண்டு. இத்தகைய வெட்டுதல் கொட்டுதல்கள்தான் மொழியில் மாற்றத்தைக் கொண்டுவருகின்றன.. ஆனால் இது நிரந்தரமல்ல. லண்டன்காரர் இந்த மொழியில் இருப்பதால் அடுத்து வரும் நாவலும் அத்தகைய மொழியில் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. அடுத்ததாக நான் வேலை செய்து கொண்டிருப்பது யுத்தம் பற்றிய கதை. அதை உரையாடும் மொழியில் எழுத முடியாது. அதன் உள்ளடக்கம் மொழியை வேறு வேறு தளங்களுக்கு நகர்த்தக் கோருகிறது. கோபமும் குழப்பங்களுமற்ற வசனங்களுக்குள்ளால் யாராவது யுத்ததை விளக்க முடியுமா? நடைபெற்ற போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருடன் சில காலத்தின் முன்பு பேசினேன். விசயத்தை அறிவதற்குள் சீவன் போய்விட்டது. தலையில் செல் விழுந்தவரின் – மார்பில் தோட்டா துளைத்தவரின் இரத்தக்களறிகள் பக்கம் நின்று எழுத விரும்புகிறேன். இருப்பினும் நான் அவர்கள் இல்லை. என் யுத்தமறுப்புக் கோபமும் அந்த அரசியலும்தான் அவர்களை என் தசைகளில் இணைக்கிறது. அதைவிட்டுவிட்டு எப்படி எழுத முடியும்? எனக்கென ஒரு கற்பனை உண்டு என்றால் – அதில் குருதி வழியவேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஆக அந்த மொழி நிச்சயமாக லண்டன்காரர் மொழியில் இருக்கப்போவதில்லை. அதன் சாத்தியமில்லை. ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதன் உள்ளடக்கத்திற்கேற்ப மொழி மாறிக்கொண்டேதான் இருக்கவேண்டும். தற்போது யுத்தத்தின் மொழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். பின்பு அந்த மொழியை வெட்டிக் கொத்தித்தான் பேச இருக்கும் வாசகர் வட்டத்தை (கற்பனையில்) உருவாக்க வேண்டியிருக்கிறது.
யுத்தத்தில் இருந்து தப்பி வந்த குணா கவியழகன் சொல்லும் வேட்கையில் எழுதும் மொழி வேறு. அந்த மொழிக்குப் பின்னால் நியாயமும் – வெளிப்படையும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இலக்கியக்காரர்களின் ஆக்கினைகளால் உருவாகும் வேட்கையும் குழப்பங்களும்கூட அங்கு தோன்றத் தொடங்கியுள்ளன. சொல்வதற்கான சூத்திரத்தைத் தேடுவதை விட்டு விட்டு அவரால் சொல்ல முடியும். அது நம் போன்றவர்களுக்குச் சாத்தியமில்லை. ஷோபாசக்தி,சயந்தன்,தமிழ்நதி ஆகியோரும் யுத்தம் பற்றி எழுதியிருக்கிறார்கள். இவர்கள் யுத்தம் தள்ளியிருந்தும் அதற்கு நெருக்கமாக நின்றே எழுதியிருக்கிறார்கள். இவர்களது ஆன்மா யுத்தத்தோடு உறவாடிக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் இந்த நாவல்களிலும் இதயத்து வெகுளித்தனத்தைப் பார்க்கலாம். நேர்மையான எழுத்துகள் அவை. ஜெயமோகனும் யுத்தம் பற்றி எழுதியிருக்கிறார். அதில் எத்தகைய ஆன்மாவின் உறவுமுறையையும் நீங்கள் பார்க்க முடியாது. அத்தகைய உள்ளகத்துப் புலம்பல் கழுநீர் நுகர்தலை மறுத்தல் செய்யவேண்டும்.
5. ஆசிரியரின் மரணம் என்ற ரோலான் பார்த்தின் கோட்பாட்டின் ஊடாக இலக்கியவாதிகள் தங்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதிக்கொள்கிறார்கள் என்கிறீர்கள். ஆனால் ஒரு பிரதி மீதான வாசிப்பு பல தளங்களில் நிகழும் சாத்தியத்தினை எப்படி நிராகரிப்பீர்கள் ? படைப்பானது முடிந்தமுடிவாக இருக்கவேண்டும் என்கிறீர்களா ?
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆசிரியரைக் கொல்வதால் அகத்துக்கும் புறத்துக்குமான யுத்தத்தை நாம் சுருக்கி அறிந்துவிடலாம் எனக் கனவுகாண்பது தவறு. வாசித்தலும் புரிதலும் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன.. அந்த இயக்கம் ஆசிரியரைச் சாகடித்துச் செல்கிறது என்ற பிரமையை உருவாக்கலாம். புரிதலுக்கு ஆசிரியன் அவசியமில்லை என்று ரோலன் பார்த் போன்றவர்கள் வாதிடலாம். அது ஒரு பாதி உண்மை மட்டுமே.
நீண்ட கால நீரோட்டத்தைத் தாண்டி நிற்கும் ஆதி இலக்கியங்களை எடுத்துக்கொள்ளுங்கள். எகிப்திய பிரமிட் சுவர் கதைகளின் ஆசிரியர்கள் யார்? கிரேக்கத்து இலக்கியங்கள் பல ஆசிரியரைக் காலத்தில் இழந்துவிட்டன. இவை பற்றிய எமது புரிதல்கள் முற்றிலும் புதியவை. எழுதப்பட்ட காலத்தின் புரிதல் நோக்கில் இருந்து மாறுபட்டவை. இருப்பினும் அந்த ஆசிரியர்களைத் தேடுவதையும் இணைத்துத்தான் இன்றைய புரிதல்களும் நகர்கிறது. ஆதி ஆசிரிய இறப்பு கால நீரோட்டத்தால் நிகழ்ந்ததல்ல. மாறாக சமூகப் பக்குவப்படுத்தலின் போதாமையினால் நிகழ்ந்தது. ஆசிரியர் வாழும் சமூக வளர்ச்சிக் கால கட்டம் அவரது இலக்கிய இயங்கு தளத்தைத் தீர்மானிக்கிறது. ஆக்கத்துக்கும் சமூகத்துக்குமான தொடர்பு இருக்கும்வரை ஆசிரியர் சாவது சாத்தியமில்லை. அதேநேரம் வாசிப்பவர் கற்பனை செய்துகொள்ளும் ஆசிரியர் வேறு வேறான வடிவங்களை எடுக்கிறார். ஒரு படைப்புக்கு பல்வேறு விதமான மொழிபெயர்ப்புகள் சாத்தியம்.
நான் முன்பு எழுதியதைப் புதிய வாசகனாகவே படிக்க முடிகிறது. பழைய-எழுதிய மனநிலையில் இருந்து அதை வாசிக்க முடியவில்லை. அதற்கான சாத்தியம் இல்லை. எழுதிய ஆசிரியனுக்கே இது சாத்தியமில்லாத போது வாசகர்களுக்கு எப்படிச்சாத்தியப்படும்? ஆசிரியரும் வாசகரும் தொடர் மாற்றத்துக்குள்ளாகிக்கொண்டே இருக்கிறார்கள். அதே போல் ஆக்கங்களும் மாற்றத்துக்குள்ளாகிக்கொண்டே இருக்கின்றன. சொற்களும் படிமங்களும் கால நீரோட்டத்தில் புதிய அர்த்தங்களை எடுத்துக்கொள்கின்றன. இந்த அர்த்தத்தில் எக்காலத்துக்குமான இலக்கியம் என்பதன் சாத்தியம் பொய்யாவதைப் பார்க்கலாம். 1925ம் ஆண்டு சேர்கேய் ஐசன்ஸடெயின் இயக்கத்தில் உருவான படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பாட்டில்சிப் பொட்டெம்கின் என்ற அந்தத் திரைப்படம் வெளிவந்த பொழுது கலை உலகம் ஒரு குலுங்கு குலுங்கியது. உலகின் தலைசிறந்த படம் அது எனப் பல திரைப்பட வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் அப்படத்தை இன்று பார்க்கும் மாணவர் ஒருவருக்கு அத்தகைய மாபெரும் பிரமிப்பு இருக்கப்போவதில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. கலை சமூகமயப்படுவது அதில் முக்கிய காரணமாயிருக்கிறது. படங்களில் பல்வேறு உத்திகள் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட்டு இன்று அவை சாதாரணமாகி விட்டன. சமூகத்தால் கவிழ்க்கப்பட்டு விடுகின்றன பல சிறந்த கலைகள். காலம் ஊர்ந்து ஊர்ந்து அப்படத்தின் நுணுக்கங்களைப் பொதுமைப்படுத்திவிட்டது. அதனால் பிரமிப்புத் தன்மை குலைந்துவிட்டது. வரலாற்று ரீதியான பார்வைகள் மட்டும் படத்தை இன்றும் உயர்த்தி வைத்திருக்கின்றன. இத்தனைக்கும் அப்படம் ஒரு பிரச்சாரப் படமாக அக்காலத்தில் பார்க்கப்பட்டது என்பதையும் நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். மீள்பிரதி செய்யப்படும் உத்திகளை உருவாக்குவோர் மீது சமூக கவர்ச்சி ஏற்படுகிறது – அதனாலும்தான் அவர்கள் அழிகிறார்கள். இதிலிருந்து தப்பும் அதே வேளை ரசிக்கப்படும் படைப்பை உருவாக்குவது எவ்வாறு? அத்தகைய சூத்திரத்தை வாலாயப்படுத்துபவருக்கு சாவும் இல்லை! வாழ்வும் இல்லை!
இயங்கு தளத்தில் வைத்துத்தான் கலையைப் புரிவது நகர்கிறது. ஆக்கமும் அவ்வாறுதான் நகரவேண்டும் எனக் கருதுகிறேன். இங்குதான் ரோலன் பார்த்தின் போதாமையை நாம் உணர்கிறோம். தோல்வியில் இருந்து பிறக்கின்றன அவரது பல கருத்துகள். கலையை அறியும் சாத்தியம் இருக்கு என்று நகர்பவர்கள் அனைவரும் தோல்வியில் வந்து நிற்பதும் அதை நியாயப்படுத்த அறிதலைச் சுருக்கி நிறுவ முற்படுதலும் அடிக்கடி நிகழ்வதுதான். படைப்பை இயங்குதளத்துக்கு நகர்த்துவது பற்றித்தான் அழுத்திப் பேச விரும்புகிறேன். அதுதான் ஆசிரியரை நுணுக்கமான தளங்களை நோக்கி நகர்த்துகிறது. இங்குதான் உள்ளடக்கம் முதன்மைபெறுவது நிகழ்கிறது. முழுமையான புரிதல்கள் – முழுமையான படைப்புகள் ஆகியவற்றின் சாத்தியங்கள் இங்கு இல்லாமற் போய்விடுகின்றன.
6. நேர்மையான எழுத்துகள்– என்ற ஒரு சொல்லாடலைக் குறிப்பிட்டீர்கள். யாருக்கு நேர்மையான எழுத்துகள் ?இன்றைய ஈழத்தவர் எழுத்துகள் பல
தமிழ்நாட்டின் வாசகர்களைத் திருப்திப்படுத்தவும், போரின் முடிவோடு ஈழத்தவர்களின் மனங்களில் உருவாகிய ஏக்கத்தை வியாபார மற்றும் புகழினை நோக்கி உருவாகியவையாகவும் தானே இருக்கின்றன?
உங்கள் கேள்வியில் கொப்பளிக்கும் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கோபத்தை நானும் பகிர்ந்துகொள்ள அனுமதியுங்கள். எந்தக் குறிப்பிட்ட புத்தகத்தையும் வக்காலத்து வாங்கும் நோக்கில் நான் ”நேர்மை” பற்றிப் பேசவில்லை. தயவுசெய்து அதை ஒழுக்கத்தின் அர்த்தத்திலும் புரிந்துகொள்ள வேண்டாம். பிரணவம் என்ற மூல எழுத்தின் முதன்மை அடையும் எழுத்து -ஆன்ம சுத்தி எழுத்து என்பதாக சித்தர்காலத்தில் பேசித் திரிந்த வகைப் பேச்சில்லை இது. அத்தகைய பேச்சுத்தான் இன்று அடிப்படை நேர்மை அற்ற பேச்சாக – எழுத்தாக இருக்கிறது. நேர்மை சமூகம் சார்ந்து நிறுவப்படும் சொல். பிரணவ இசைக்குப் பின்னால் முடக்கப்பட்ட சத்தங்கள் இன்று மேலெழத் தொடங்கியுள்ளன. ஏதோ ஒரு வகையில் அந்த ஒடுக்கப்பட்ட குரல்களின் பக்கங்களில் நிற்க எத்தனிக்கும் எழுத்தாளர்களை நேர்மையானவர்கள் எனச் சொல்ல விரும்புகிறேன்.
ஒடுக்குதல் மீறி எழும் இரைச்சல்களுக்கு மேலால் தனது ஆறு உறுப்புகளையும் வைத்து அடக்கி எழுதுபவர்களின் எழுத்துகள் கசப்பும் வெறுப்பும் தருவதாக இருக்கின்றன. அவற்றைப் படிக்கும் பக்குவமும் தியானமும் வாய்க்கவில்லை. சாகித்திய முனி சனாதனிகளின் ஆச்சாரியங்கள் அவர்களின் ஆறு உறுப்புகளையும் தாண்டிப் போவதில்லை. நீட்சே குறிப்பிட்ட சுயஊம்பல்களாகச் சுருங்கி நிற்கும் அவை எங்களுக்குமான பண்டங்களாகத் தரப்படுகிறது. அந்தப் பிரசாதங்களுக்குப் பின்னால் அவர்களின் சுத்த சைவ சுயநலங்கள் மட்டுமே தெரிகின்றன. சாகிற காலத்தில் சங்கரா போடும் இவர்கள் இலக்கியத் “தீர்ப்புகள்” வழங்கி, பிரணவத்தை நிறுவ முயல்வது எவ்வகையில் நேர்மையானது?
இந்தப் பிற்போக்குவாதிகளின் எதிர் திசையில் பல எழுத்தாளர்கள் நிற்கிறார்கள். அவர்களின் ‘எழுத்துத் திறமை‘ பற்றி நீங்கள் வரையறுக்கலாம். ஆனால் அவர்கள் நிற்கும் திசையில் நேர்மை இருக்கிறது. அதை அவதானிக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறேன். அந்த எழுத்தாளர்களுடன் அல்லது அவர்கள் எழுதியவற்றுடன் முழு உடன்பாட்டைக் கோரும் கோரிக்கையல்ல இது. மாறாக அவர்கள் நிற்கும் நிலத்தின் கால நியாயத்தையும் நாம் அவதானிக்க வேண்டும். இந்தச் சில எழுத்தாளர்களின் போதாமைக்குப் பின்னாலும் “நேர்மையான” கோபம் ஒன்றுண்டு. இது ஒரு வகைப் பக்கச் சார்பு வாதமே. பக்கச் சார்பின்றிய பார்வை சாத்தியமில்லை.
வறுமையை விற்றல் – யுத்தத்தின் கொடுமைகளை விற்றல் என இலாப நோக்கில் ஏராளமான நடவடிக்கைகள் நிகழ்கின்றன என்பது உண்மையே. ஆனால் எல்லா எழுத்தாளர்களையும் எல்லாப் படைப்புகளையும் அப்படிப் பார்க்க முடியாதுதானே.
7. சேனன் – லண்டன்காரர் – இடதுசாரிய அரசியற் செயற்பாட்டாளர் – இவற்றைக் கடந்து ஒரு இலக்கியவாதியாக உங்களை எப்படி அடையாளப்படுத்துவது?
அடையாளப்படுவதில் எப்பொழுதும் ஒரு அதிகார அரசியல் உண்டு. அனைத்து அதிகாரங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் அடையாளமற்ற ஒன்றின் தேடுதலை -இருத்தலை விரும்புவதாக இருப்பது கடினமான வேலைதான்.
வேண்டுமானால் சோசலிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளுங்கள். ‘நான் யார்?’ என்ற ஆதிக்கேள்விக்கு எந்தப் பதிலுமில்லை. ‘இடதுசாரிய அரசியற் செயற்பாட்டாளர்’ என்பது அடையாளமல்ல. அது அனைவரிடமும் அடிவாங்கும் தொழில். தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துப் பாலின்பம் காண்பவர்கள் போன்றதொரு மனநிலையாகத்தான் அது தமிழ் இலக்கியச் சமூகத்தில் இருக்கிறது. இதுகளை வெளியில சொல்லிக்காட்டி இலக்கியத்துக்குள் மிஞ்சி இருக்கும் உறவுகளையும் அறுத்துப்போடும் வேலையைப் பார்க்கிறீர்கள். பரவாயில்லை.
8. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற வகையீட்டினை எப்படி எதிர்கொள்கிறீர்கள் ?
முதன்முதலாக வெளிநாட்டில் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியபோது கேட்ட முதற் கேள்விகளில் இதுவும் ஒன்று. இன்று வரை பதில் கிடைக்கவில்லை. எனக்கும் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை. எல்லாரும் பயன்படுத்துகிறார்கள் என்பதால் அச்சொற்களை நானும் பயன்படுத்தியிருக்கிறேனே தவிர அதன் முழு அர்த்தம் அறிந்த பயன்படுத்தல் அல்ல அது.
பொதுவாக ஈழத்தில் இருந்து அகதியாக ஓடிவந்து பல மேற்கு நாடுகளில் இருப்பவர்கள் எழுதுவதைதான் இதுவரை காலமும் புலம்பெயர் இலக்கியங்கள் என்று வரையறுத்து வந்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம். மலேசியா, ஆபிரிக்கா பக்கங்களுக்கு புலம்பெயர்ந்து சென்று எழுதியவர்கள் ஏன் இதற்குள் வரவில்லை?அல்லது புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு மற்றைய மொழிகளை – மொழிபெயர்ப்புகளை ஏன் உள்வாங்க முடியவில்லை? வேற்றிடத்தில் இருந்து கொண்டு ஈழத்தை நினைத்துக்கொள்ளும் நனவிடை தோய்தல்களாக ஏன் கதைப்பரப்புகள் பல சுருங்கிக் கிடக்கின்றன? வெளிநாட்டவர்கள் – நாம் என்ற பிரிதலை வைத்து ‘நம்மவர்கள்’ கதைகளாக தரப்படுபவை எவ்வாறு ‘புலம் பெயர்ந்த’ என்று பொதுமைப்படுத்த முடியும்? ஏன் இன்னும் ‘புலம் பெயர்ந்தோர்’ இலக்கியத்துக்குள் ஆழமாகப் புகவில்லை? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் தான் இருக்கின்றன. அதில் நீங்கள் கேட்கும் கேள்வியும் ஒன்று. இக்கேள்விக்கு இப்போதைக்கு விடை கிடைக்கும் எனவும் நாம் எதிர்பார்க்க முடியாது. வெளிநாட்டில் இருந்து தமிழில் எழுதும் கடைசித் தலைமுறை பற்றிய கேள்வியாகவும் இது இருக்கிறது. அகதி வருகை ஓய இலக்கிய மையம் மீண்டும் ஈழம், தமிழ்நாடு என்று மாறிவிடும். இதன்பிறகு பல்மொழியில் வரும் இலக்கியங்களை எப்படிப் பார்க்கப் போகிறோம்? மியாவை புலம்பெயர் பாடகி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? அத்தகைய அடையாளங்களை அக்கலைஞர்கள் ஏற்கத் தயாரா? இனிவரும் வரலாறுதான் இதற்கான விடைகளை அவிழ்க்கும். ஆனால் அகதியாகத் தப்பி ஓடி வாழ்ந்தோரின் எழுத்துகள் என்ற ஒரு வகையறை – ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாகிய எழுத்துகள் – தொடர்ந்து தமிழ் இலக்கியத்தின் பகுதியாக இருந்துகொண்டுதானிருக்கும்.
9. புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்படும் படைப்புகளில் புலம்பெயர்திணைகள் வலுவாக முன்வைக்கப்படாமைக்குக் காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும்?
இது ஒரு முக்கியமான கேள்வி. ஆய்வுக்குரிய கேள்வி.
யுத்தத்தாலும் மற்றும் சமூக பொருளாதாரக் காரணங்களுக்காகவும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பல பொதுப் பண்புகளை அவதானிக்கலாம். நினைவுகளைப் பேணுதல் முதற்கொண்டு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதை அவதானிக்கலாம். இதன் ஒரு பகுதியாகவும்தான் நீங்கள் குறிப்பிடும் புலத்து திணைகளில் இலக்கியம் புகவில்லை எனத் தோன்றுகின்றது. தவிர தாண்டிவிட முடியாத கலாசார மற்றும் மொழி இடைவெளி போன்ற காரணங்களும் உண்டு. இவற்றுக்கு அப்பால் பின்தங்கிய நிலையில் இருக்கும் அரசியற் பிரக்ஞையும் முக்கிய காரணமாக இருக்கிறது.
பிரான்சில் ‘ஸோன் பப்பியே’ என்ற விசா அற்றவர்களின் அமைப்பு ஒன்றுண்டு. எத்தனை புலம்பெயர்ந்தவர்கள் அத்தகைய அமைப்பில் பங்கு பற்றியிருக்கிறார்கள்? விசா அற்ற வாழ்வின் கொடுமை பிரெஞ்சு நீரோட்டத்தில் இணையவில்லை. துவேசத்துக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் பேசுவோர் பங்களிப்பு இருக்கிறதா? இத்தகைய உரையாடலின்றி எவ்வாறு இலக்கிய உள்வாங்கல்கள் நிகழும்? இத்தளத்தில் உரையாடலின்றி மேலோட்டமான பயணக் கட்டுரைகள் போன்ற எழுத்துகள்தான் சாத்தியம்.
இதே சமயம் – மேலிருந்து கீழான ஒரு வித மேலோட்டக் கலப்புத் திணிக்கப்படுகிறது. பாரிஸ் பல்கலாசார மையம் என்றும் அங்கு அனைத்து இனத்தவர்களும் ஒந்றுகூடி வாழ்கிறார்கள் என்றும் பேசப்படுவது உங்களுக்கு தெரிந்ததே. கலப்பு புனிதப்படுத்தி பேசப்படுவது மேலிருந்து கீழாகத் திணிக்கப்படுகிறது. பல்கலாச்சாரம் காத்தல் என்ற பெயரில் வெவ்வேறுக் கலாச்சாரக் குழுக்கள் தனித்து, தனித்து வாழும் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். பல்கலாச்சாரம் என்பது பிற்போக்குத்தனமான அதிகாரக் கொள்கை. கலாச்சாரக் குழுக்கள் தனித் தீவுகளான இருப்பதை கட்டிக்காப்பதன் மூலம் குழுக்களுக்கிடையில் அமைதி காக்கலாம் என்ற நோக்கம் இதன் பின்னணியில் இருக்கிறது. அரசுக்கெதிரான போராட்ட இணைப்புகளை தவிர்த்து அமைதி காக்க இது உதவுகிறது. ஆசியர், ஆபிரிக்கர், அரேபியர் என மக்கள் பிரிந்து பிரிந்து வாழ்கின்றனர். அந்தப் பிரிவுகளுக்குள்ளும் பல்வேறு தனித்தீவுப் பிரிவினைகள் உண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமக்கெனப் பிரதேசங்களைப் பிரித்து வைத்து ஒதுங்கி வாழ்கின்றனர் மக்கள்.
இவ்வாறான நடவடிக்கைகளால் இந்தக் கலாசாரக் குழுக்களுக்குள் இருந்து எழும் “தலைமை” – அல்லது முக்கிய ஆளுமைகள் மட்டும் அரசுடனும் அடுத்த கலாசாராங்களுடனும் உறவாடுகின்றன. அதுவும் போராட்டங்களைச் சாந்தப்படுத்தவும், லாப நோக்குக்காகவும் நிகழ்கிறது. ஆக உரையாடல் மேலிருந்து கீழாக அறிமுகமாகிறது. தமது தலைமைகளையும் – தாமாகத் தெரிவித்துக்கொண்ட ஆளுமைகளையும் எதிர்க்கும் பொது மக்கள் மேலிருந்து அறிமுகமாகும் உறவுகளையும் எதிர்க்க நிர்பந்திக்கப்படுகின்றனர். அது ஒட்ட முடியாத உறவு. கனத்த கோர்ட்டுகளைக் காவிக்கொண்டு ஆதரவுப் பிச்சை எடுக்கும் கனவான்களால் அறிமுகமாகும் பிரெஞ்சுக் கலாச்சராம் எப்படி ஒட்டும்? அடித்தளத்தில் உறவின்றி எப்படிப் புலம்பெயர்ந்த திணை எமக்குள் புகும்?
இந்தக் பல்கலாசார அடக்குமுறை உடைக்கப்படவேண்டும். இதனால் எந்தக் கலாசாராத்துக்கும் லாபமில்லை. கலாசார உறவு ஏற்படுவதால் உங்கள் கலாசார அடையாளங்கள் அழிந்துவிடும். அதனால் தனித்தனியே தீவுகளாக வாழுங்கள் என்று சொல்வது மிகப்பெரும் கலாசாரர வன்முறை. அதே நேரத்தில் ஜேர்மனியில் சில இடங்களில் நிகழ்வது போல் வலிந்து கலப்புத் திணிக்கப்படுவதும் வன்முறையே. வெளிநாட்டவர் கலந்து ஜேர்மனியராகத் திரிபடைய வேண்டும் என இந்த மக்கள் நாடெங்கும் பிரித்து விதைக்கப்படுவது மகா தவறு. அதுவும் ஒரு வகை பல்கலாசார திட்டமிடலே. இங்கிலாந்தில் பல்கலாசார திட்டமிடல் நிறுவன மயப்படுத்தப்பட்டு இயங்குகிறது. ஒவ்வொரு கலாசாரக் குழுக்களுக்கும் தலைமைகளை உருவாக்கி அதை அரசு சார்பில் கட்டுப்படுத்த அரசே பணம் பொருள் வழங்குகிறது. இந்தக் கலாசார “தலைமை” அமைப்புக்கள் அரசு சார்பில் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பாடுபடுகின்றனர். மக்கள் அவர்களைப் புறக்கணிக்க முன்வந்தாலும் அவர்களை அரசும், அரச கலாசார மையங்களும் தூக்கித் தூக்கி நிறுத்துகின்றன. பிரான்சில் இவ்வளவுக்கு நிறுவனமயப்படாததினால் அரசின் வங்குரோத்து மக்களுக்கு ஓரளவு தெரியும். சபாலிங்கம் தனது குடும்பத்துக்கு முன்னால் சுடப்பட்ட சம்பவம் ஏனைய சூட்டுச் சம்பவங்கள் போல் விசாரிக்கப்படாததற்குக் காரணமும் இதுதான்.
இது தகர்க்கப்படவேண்டுமானால் மக்கள் தமது உறவுகளைக் கீழிருந்து மேல் நிமிர்த்த வேண்டும். கலாசார அடையாளங்கள் உட்பட அனைத்துவித சுய காத்தலும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல. மாறாகப் பாதுகாத்தலுக்கான அனைத்து அசைவுகளினதும் இணைவே சிதைவுகளில் இருந்து தனித்துவங்களைக் காக்க வல்லது. குறைந்த பட்சம் இலக்கியவாதிகளாவது அந்த நீரோட்டத்தில் இணையவேண்டும். அரசியல் மற்றும் இலக்கியப் பத்திரிகைகள் இதற்கான முன் முயற்சியைச் செய்ய வேண்டும். ஃபிரான்சிலிருந்து வரும் பத்திரிகை அங்கு நடக்கும் கொடும் கொலைகள் – துவேசங்களைக் கண்டும்காணாமல் வரமுடியாது. இத்தகைய உரையாடல்தான் இலக்கியப் பரப்பை விரிக்கும்.
10. புலம்பெயர்ந்தவர்களது இலக்கியம் தமிழகத்து இலக்கியவாதிகளுக்கும் எழுத்துகளுக்கும் சவாலாக இருக்கும் நிலையை அடையமுடியுமா அல்லது அடைந்து விட்டதா?
இது யார் பெரிது என்ற போட்டி சம்மந்தப்பட்ட விசயமில்லை. நீங்கள் அந்த அர்த்ததில் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன். இலக்கியத்தில் எத்தகைய அரசியல்-கலாசாரம் மேலோங்கி நிற்கிறது என்பது சம்மந்தப்பட்ட விசயமிது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் தமிழகத்தில் பக்கங்கள் நிரப்பும் அவதி வியாதியொன்று அனைத்து எழுத்தாளர்களையும் பிடித்துப் பேயாட்டம் ஆட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு புத்தகம் வந்திருக்கு என ஒரு எழுத்தாளர் சொன்னால் எத்தனை பக்கத்தில் வந்திருக்கு என்ற கேள்விதான் முதற்கேள்வியாக வருகிறது. இந்தப் புதினத்தை விளங்கிக்கொள்வது கடினம். குறிப்பாகப் புதிய எழுத்தாளர்கள் சிறு குறிப்புகள் எழுதிப் பழகித்தான் எழுத்தாளர்கள் ஆகிறார்கள். எந்தப் பாடசாலைகளும் பெரும் கட்டுரைகள், கதைகள் எழுதப் பழக்குவதில்லை. ருவிட்டரில் அல்லது ஃபேஸ்புக்கில் குறிப்பு எழுதும் மனப்பான்மை மேலோங்கியிருப்பவர்கள் மத்தியில் பக்கங்களை நிரப்புவது கடினமாக இருக்கிறது. இதே சமயம் வாசிப்பவர்கள் கனத்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் குறைந்துவிட்டது. சிறு புத்தகங்களையே விரும்பி வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. எழுத்துகளை வாசகர்கள் முழுமையாகப் படிக்க வைப்பது என்பது எழுதுபவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இலக்கிய விலாசம் காட்ட எனக் கனத்த பக்கங்களுடன் புத்தகங்கள் விடக் கட்டாயப்பட்டிருப்பதாக பல எழுத்தாளர்கள் உணர்கிறார்கள். இந்தப் போக்கு எல்லா மொழிகளிலும் இருக்கும் பிரச்சினை. அறுபதாயிரம் சொற்களுக்கு குறைந்த கதையை எந்த ஆங்கிலப் பதிப்பகமும் நாவல் என்ற பெயரில் வெளியிடாது. பதிப்பகங்கள் பிரித்து, மேய்ந்து, வெட்டிக்கொத்தி நாவல் வெளிவருவதற்குள் மாசக் கணக்காகிவிடும். தமிழ்ப் பதிப்புலகம் ஒரு ஆழக்கிணறு மாதிரி. தப்பித் தவறிச் சாதாரண எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியவைகளை அதற்குள் போட்டுவிட்டால் அவ்வளவுதான். அதுக்குப் பிறகு இருட்டுத்தான். என்ன நடக்குது? ஏது நடக்குது? என்ற விபரமற்று நிர்க்கதியாக நிற்கவேண்டியதுதான். சமூக வலைத்தளங்களில் குறிப்புகளை எழுதுவதோடு குதூகலப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். சிறு பத்திரிகைச் சூழல் மாறிவிட்டது. பெரும் பதிப்பகங்கள் தமிழ் இலக்கியத்தைக் கைப்பற்றிவிட்டன– அல்லது இலக்கியம் சார்ந்த பதிப்பகங்கள் பெரும் பதிப்பகங்களாக மாறிவிட்டன – எனச் சொல்லலாம். இதனால் எழுத்து – வாசிப்பு மனநிலைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. புத்தகத் திருவிழாக்களும் இந்த வியாபார ஊக்குவிப்பைப் பலப்படுத்துகின்றன. விற்பனையை நோக்கித் திரும்பி நிற்கும் எழுத்து தனது பண்புகளை மாற்றிக்கொண்டு செல்வதைப் பார்க்கலாம். எழுத்தாளர்கள் சுய விளம்பரம் மற்றும் புத்தக ஊக்குவிப்புகளைச் செய்வதற்குக் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதைத் திறம்படச் செய்பவர் யார் என்பது நல்ல எழுத்து எது – நடைமுறை அழகியல் எது என்பவற்றைத் தீர்மானிக்கின்றன.
வியாபார எழுத்துகள் எல்லாக் காலங்களிலும் இருந்தவைதான். ஆனால் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றம் புதியது. இலக்கிய சூப்பர் ஸ்டார்கள் இது தான் இலக்கியம் என்று உலா வருவதும், சினிமா சூப்பர் ஸ்டார்கள் அவர்கள் புத்தக வெளியீட்டில் பங்குகொள்ளுவதும் தற்போதுதான் நடக்கத் தொடங்கியிருக்கிறது. இது எவ்வாறு லாப நோக்கோடு சம்மந்தப்பட்டதாக இருக்கிறது என்றும் – எவ்வாறு சந்தை நுழைந்துள்ளது என்பதையும் அவதானிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உள்ளடக்கத்தில் ஏற்பட்டுவரும் மாற்றத்தை இந்த அடிப்படையில் இருந்தும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. சாரு நிவேதிதாவின் எழுத்தை விகடனுக்கு முன், விகடனுக்குப் பின் எனப் பிரித்துப் பார்த்தால் சில உண்மைகள் புலனாகும். வாசிக்க வைக்க வேண்டும் என்ற அவா ஒரு எழுத்தாளனை எங்கெல்லாம் தள்ளும் எனப் பார்க்கலாம். வாசக ஆதரவின்மை சாரு போன்ற ‘கலகக்காரனை புரவலர்களை நாட வைத்துள்ளது’ என ஒரு எழுத்தாளர் சுட்டிக்காட்டியிருந்தார். நல்லி குப்புசாமி செட்டியாரின் காலில் அவரை விழ வைத்துவிட்டார்கள் எனவும் – சொந்தக் காசில் புத்தகம் போட வைத்து விட்டார்கள் எனவும் பலர் நொந்து கொண்டது நினைவிருக்கும். ஆனால் இது வாசிப்பவனின் பிரச்சினை அல்ல. புத்தகச் சந்தை சார்ந்த பிரச்சினை. பொதுவாக எல்லா மொழிகளிலும் இலக்கியக்காரர் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினை.
தமிழகம் சந்தைக்கு வந்துவிட்ட அளவுக்கு ஈழம் வரவில்லை. இந்த அடிப்படையில் இருந்துதான் சில வித்தியாசங்களும் பிறக்கின்றன. சந்தையை முதன்மைப்படுத்தாத தேடல் இங்கு இன்னும் இருக்கிறது. சில ஈழத்து எழுத்தாளர்கள் படுக்கும்போது தமிழ்நாட்டுப் பக்கம்தான் தலை வைத்துப் படுக்கிறார்கள். ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் தன்னைப் பற்றிச் சொன்னதை மிகுந்த அலங்காரங்களோடு சொல்லிக் குதூகலித்திருந்தார் ஒரு எழுத்தாளர். அந்தப் போக்கு தமிழ்நாட்டு தோய்வு இவர்களின் உள்ளடக்கத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. தமிழ்நாட்டுச் சந்தைக்கு – இலக்கியத் தோய்வுக்கும் ஒரு உறவு உண்டு.
இது தவிர எழுத்தாளர் அனுபவங்கள் -மற்றும் கலாசாரத் தாக்கம் பற்றியும் நாம் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அங்கிருக்கும் எழுத்தாளர்கள் கரித்துண்டு நாவல் சூத்திரத்தைத் தாண்டிச் செல்ல மறுத்து வருவதற்கு ஒரு காரணம் உண்டு. ஒடுக்கப்பட்டு கடை நிலையில் வைக்கப்பட்டிருப்பவர்களின் போராட்டங்கள் அரசியற் தளத்தில் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தாலும்கூட குறிப்பிடத்தக்க முறையில் அதிகாரத்தின் அடிமட்டம் அசைக்கப்படவில்லை. இலக்கியத்துக்குள் மாற்று இலக்கியங்கள் அனுமதிக்கப்படுவது என்பது ஒரு விசயம் – ஆதிக்கம் செலுத்துவது என்பது மறு விசயம். பிராமணியச் சொற்களுடன்-ஆணாதிக்கப் பார்வையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பல ரஷ்யப் புத்தகங்களை இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். அவர்கள் ஆங்கிலத்தில் படித்துக் கொண்டாடவில்லை – தமிழில் படித்துத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதைக் கவனிக்க. அந்த அதிகாரத்தின் அழகியல்தான் இன்னும் கோலோச்சுகிறது. யுத்தத்தால் நொறுக்கப்பட்ட – அகதியாகத் துரத்தப்பட்ட – அழகியல் மாற்று எழுத்தை தொடர்ந்து தேடுவதில் இருந்து இது மாறுபட்டது. ஒரு சில தமிழகத்து எழுத்தாளர்கள்தான் இந்த அந்தரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்களை மையமாக வைத்த இலக்கியக் கதையாடல் இல்லை.
இத்தகைய புள்ளிகளின் அடிப்படைகளில் இருந்துதான் பிரித்துப் பார்த்தலையும் சேர்த்துப் பார்த்தலையும் நாம் செய்யவேண்டியிருக்கிறது. தமிழகத்தில் புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் எழுத்தாளர்கள் தம்மைச் சுற்றிக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இலக்கிய ஆச்சிரமங்களை உடைக்க வேண்டும். இல்லையேல், அவர்களும் அந்தச் சூறாவளிக்குள் இழுபட்டு நாசமாய் போய்விடும் ஆபத்திருக்கிறது. அந்த எதிர்ப்பு எழுத்தாளர்களுக்குமாகச் சேர்த்துத்தான் நாம் ஈழத்து எழுத்துகள் சிலதைத் தூக்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.
11. புத்தகச்சந்தை வாசிப்பைப் பரவலாக்கியிருக்கிறது என்கிறார்கள் – அல்லது அச்சு – இணைய ஊடகங்களின் பெருக்கம் எழுத்தாளர்களின் தேவையை அதிகரித்துள்ளது போன்ற சூழல் தீவிர இலக்கியச் செயற்பாட்டிற்கு எதிரானது என்கிறீர்களா?
நாம் புத்தகக் கண்காட்சிகளுக்கு எதிரியல்ல. புத்தக உற்பத்தியில் இருக்கும் முரணையே சுட்டிக் காட்டுகிறோம். லாபத்தை முன்னிலைப்படுத்திய உற்பத்தி படைப்பைப் பண்டமாக மட்டுமே பார்க்கிறது. இருப்பினும் ‘பிரபலமாகும்’ தகுதியுடைய உள்ளடக்கம் இலாபத்தை உறுதியளிக்கும். ஆனால் அத்தகைய உள்ளடக்கத்தை இலாபத்தால் மட்டும் ஊக்குவிக்க முடியாது. சந்தையால் உந்தப்பட்ட குப்பைகளுக்குள் இரத்தினத்தை கண்டுபிடியுங்கள் என வாசகர்களை ஏவி விடும் திருவிழாக்களாகக் கண்காட்சிகள் குறுகிப் போய்விடுவதை எதிர்க்க வேண்டியுள்ளது. படைப்பு விலையில் இருந்து விடுதலையடைய வேண்டும்.
அதை நோக்கி நகரும் எழுத்தாளர்கள் பல சுயதியாகங்களைச் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்குகிறது மேற்கண்ட முரண் நிலை. சந்தையின்றிப் படைத்தலும், நுகர்தலும் வளரும் சாத்தியமற்ற அதே சமயம் சந்தை படைத்தலையும், நுகர்தலையும் குறுக்குகிறது என்ற முரண் நிலை பற்றியே நாம் இங்கு பேசுகிறோம்.
12.
1990 களின் பிற்பகுதியில் பாரிஸில் நண்பர்களுடன் இலக்கிய–அரசியல் கலகக் குரலாக ஒலித்தீர்கள் என்பதை அப்போதைய உங்களது எழுத்துகளைப் படிக்கும் போது தோன்றுகிறது. இப்போது அந்தக் கலகச் செயற்பாடுகளை எப்படி மதிப்பிடுகின்றீர்கள்? இலக்கியத்தில் அவற்றின் இடம் என்னவாக இருக்கிறது ?
கலகம் செய்யாமல் எழுத முடியாதிருக்கும் நிலைதான் அக்காலத்திலும், இக்காலத்திலும் இருக்கிறது. சுய தடைகள் – கலாசாரம் சார்ந்த தடைகள் போன்ற பல்வேறு தடைகளைத் திணித்த பிறகுதான் கலை செய்யலாம் என்ற நிலை உடைய வேண்டும். அதற்கு கலகம் தேவை. அப்பா-அம்மா,சொந்தக்காரர்கள் மற்றும் சமூகம் என்ன சொல்லும் என்றெல்லாம் சிந்தித்து எழுதுபவர் எழுதாமல் இருந்து விடுவதே மேல். இந்தச் சொல்லை எழுதலாம் – அந்தச் சொல்லை எழுத முடியாது எனச் சிந்திப்பின், மொழியின் எல்லைகளைத் தொட முடியாது. அதற்கும் கலகம் வேண்டும்.ஓரினச் சேர்க்கை என்பது முதலாளித்துவ சதி என எழுதப்பட்டுக்கொண்டிருந்ததை கேள்வி கேட்காத சூழ்நிலையில் – சாதியம் புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழர்களால் பார்க்கப்படுவதில்லை என்பதை சொல்லிக்கொண்டிருப்பதிலும் அர்த்தமிருக்கிறது எனப் பேசப்பட்ட காலத்தில் – அனைத்து மதிப்பையும் மறுக்கும் கதைகள் பிரசுரத்துக்கு தகுதியில்லை என்று சொல்லப்பட்ட காலத்தில் – எழுத்துக்கு வரும் ஒரு ஆள் எப்படிக் கலகம் செய்யாமல் இருக்க முடியும்? ஒருவன்– ஒருத்திக்கு- காதல் புனிதம் என்றெல்லாம் எழுதும் ஆசை இருந்திருந்தால் வைரமுத்து மாதிரி கோடம்பாக்கத்தைச் சுத்தி, சுத்தி வந்திருப்போம். அப்படியான பிற்போக்கு ஆசை ஒரு காலத்திலும் இருந்ததில்லை. அதனாற்தான் கலகத்துக்குத் தள்ளப்பட்டோம். தனிமைப்பட்டு வாட ஆசைப்படும் வித்தியாசமான வியாதி அது.
இலக்கியத்துக்கு என்று ஒரு தனி வாழ்தல் இல்லை. எழுத்தாளரும், அவரைச் சுற்றிய சமூகமும் அற்ற எழுத்து என்ற ஒன்றில்லை. தொட முடியாத திசைகளைத் தொட அவாப்படுவோர் அதை மறுக்கும் அனைத்து மதில்களிலும் முட்டித்தான் ஆகவேண்டும். தொடுவதற்கு வசதியானவைகளைத் தள்ளி வைத்தும் இயங்கவேண்டியிருக்கிறது. இவ்வாறு புடம் போடப்படாத சொற்கள் நமக்குத் தேவையில்லை என்று தனிப்பட்ட எண்ணங்கள் இன்றும் உண்டு. வருகுதா?இல்லையா? என்பது வேறு விசயம். ஆனால் அத்தகைய உடைந்த இலக்கியத்தை வருவிக்கப்படும் பாடுகளிவை. நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். கலகம் செய்வது எழுத்தாளர்களுக்கு அழகு!
13. ஆனால் இப்போது காத்திரமான விமர்சனங்களைப் பெரிதாகக் காணமுடியவில்லையே? பரஸ்பரம் பாராட்டிக் கொள்வதில்தானே முனைப்போடு இருக்கிறார்கள்? வரும் ஓரிரு விமர்சனங்களும் அரசியல்சார்ந்ததாகவே இருக்கிறது? இது நம் மதிப்பீடுகளின் வீழ்ச்சியா? அங்கீகாரங்களிற்கான அலைச்சலா?
விமர்சனங்கள் உட்பட அனைத்து எழுத்துகளும் ஏதோ ஒரு வகை அரசியல் சார்ந்தது தான். ஆய்வுகளை முன்வைத்து ஊக்குவிக்கவேண்டிய பல்கலைக்கழகங்கள் தனிமைப்பட்டு நிற்கின்றன. ஒவ்வொரு வருடமும் எத்தனையோ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறன்றன. எத்தனையோ விமர்சனங்களும் ஆய்வுகளும் பல்கலைக் கழகச் சுவர்களுக்குள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஆய்வுகளுக்கும், விமர்சனங்களுக்கும் குறைவில்லை. ஆனால் இந்த அக்கடமியாவுக்கும், ஆக்க இலக்கியத்துக்கும் தொடர்புகள் இல்லை. பல்கலைக்கழகப் பிதா மக்கள் இதைத் திட்டமிட்டு அறுத்துக்கொண்டு இருக்கிறார்களோ எனச் சந்தேகப்படும் அளவுக்கு சுத்த சுயநலனுடன் இயங்குகிறார்கள். ஒரு வகையில் முதலாளித்துவம் இங்கு இன்னும் முழுமையாகப் புகவில்லை எனச் சொல்லத் தோன்றுகின்றது. நிலப் பிரபுத்துவ உறவு முறைபோன்ற மாமன்-மச்சான் உறவு முறையில் நகரும் இந்த நிலைப்பாடு தோய்வு உணர்வை ஏற்படுத்துகிறது. அங்கீகாரங்களின் அலைச்சல் – கல்விசார் விருப்பு எனப் பல காரணங்களை நீங்கள் அடுக்க முடியும்.
இலக்கியம் சார்ந்த இயங்குதளங்கள் உருவாகி இதை உடைக்க முடியும். சிறு பத்திரிகைகள் இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி வந்திருக்கின்றன. ஆக்காட்டியும் அதைச் செய்ய வேண்டும்.
14. முன்னர் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிய நீங்கள் இப்போது முழு நேர அரசியற் செயற்பாட்டாளர். இலக்கியவாதிக்கு நேரடியான அரசியற் செயற்பாடு அவசியமானதா?
எம்மைச்சுற்றி நடப்பவற்றை உன்னிப்பாகப் பார்ப்பது அவசியமானது. அந்தப் பார்வை உங்களை அரசியல் மயப்படுத்துகிறது. ஏற்றத் தாழ்வுகளையும் மனிதக் கொடுமைகளையும் எழுதுவது மட்டும்தான் என் வேலை எனப் பல எழுத்தாளர்கள் ஒதுங்கி விடுகிறார்கள். ‘அந்த’ மக்களுக்கு தாம் ஒரு ‘குரலாக’ மட்டும் இருந்து விடுகிறோம் என்கிறார்கள். இந்தப் போக்கைப் பல்வேறு சமூக காரணங்கள் தீர்மானிக்கின்றன. அதை ஒற்றைப் பரிமாணப் பார்வையில் நாம் பார்க்க முடியாது. அதே சமயம் யாரும் இந்த முரண் நிலைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூகம் இயங்கும் விதம் பற்றி அறிதலை நகர்த்துபவர்கள் தாமும் செயற்பாட்டின் பகுதியாக இருக்கமுடியுமே தவிர அதைத் தனிமைப்படுத்த, எழுத்தும் ஒரு ‘செயற்பாடுதான்’ என்று பேச முடியாது. எல்லா எழுத்தாளர்களும் ஏதோ ஒரு வரலாற்றுப் போக்கின் – ஏதோ ஒரு வர்க்கப் போரின் பகுதிகளாகத்தான் இருக்கிறார்கள். சிலர் தாம் எப்பக்கம் நிற்கிறோம் என்பதைப் பிரக்ஞையுடன் தெரிவு செய்துகொள்கிறார்கள். சிலர் காற்றின் போக்கில் இழுபடுகிறார்கள்.
கட்சி ரீதியான செயற்பாடு பற்றி இங்கு பேசவில்லை. தாம் அரசியற் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல எழுத்தாளர்கள் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் இது அதிகமாக இருப்பதற்குக் காரணம் யுத்தம். யுத்தம் வரலாற்றுப் போக்குகளையும் – பிரக்ஞையையும் செறிவடையச் செய்யவல்லது. அரசியல் சார்ந்த இலக்கியம் எழுதாத ஒரு ஈழத்து எழுத்தாளரை நீங்கள் காட்ட முடியாது. யுத்தம் பற்றிய பல நாவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது விபத்தல்ல. விரும்பியோ, விரும்பாமலோ எழுத்தாளர்கள் அரசியலுக்கு இழுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நிலை – அல்லது நடுநிலை என்ற எதுவும் கிடையாது. அப்படி எதுவும் இருந்தால் சொல்லித்தாருங்கள். நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்ற முடிவை பிரக்ஞா பூர்வ முடிவாகச் சிலர் எடுக்கிறார்கள். அதையே நானும் செய்வதால் அது சரி என நினைக்கிறேன். இதன் தொடர்ச்சிதான் அமைப்புச் சார்ந்த செயற்பாடும் – முழு நேர அரசியற் செயற்பாடும்.
அமைப்பு மயப்படுவது மூளையை மந்தப்படுத்திவிடும் என்று விசர்த்தனமாகக் கதைக்கிறார்கள் சிலர். தங்கள் மூளையை அகல விரித்து வைத்துக்கொண்டா அதைப் பேசுகிறார்கள்? எல்லா விதத்திலும் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு – கலாசாரத்தின் ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகளுக்கு அடிமைகளாக இருந்து கொண்டு – சுய தடைகளைச் செய்து கொண்டு வாழும் இவர்களிற் பலர் அமைப்பு மயப்படுவதை மந்தைக்கூட்ட நடவடிக்கையாகப் பார்ப்பது நகைப்புக்கிடமானது. அதுவும் ஒரு அரசியல்தான். ஒடுக்குதலுக்கு எதிரான அமைப்பு மயப்படுதல் என்பது முழுச் சுதந்திரத்துக்கான அவாவில் இருந்து பிறப்பது என்பதை இவர்கள் அறிதல் வேண்டும். கட்டுக்கடங்காத மனம் தான் சோசலிஸக் கட்சியை நோக்கி நகர்த்துகிறது. அந்த வேலையை உருப்படியாகச் செய்வதானால் முழு உழைப்பையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில்தான் முழு நேர அரசியலில் ஈடுபடவேண்டியதாயிற்று. இதை எல்லோரும் செய்யவேண்டிய அவசியம் என்று சொல்லவில்லை. ஆனால் அது நோக்கிய நகர்வு எப்படி நிகழ்கிறது என்பதைச் சொல்கின்றேன்.
வரலாற்று ஓட்டத்தில் தன்னை வைத்துக்கொள்ளும் எந்தக் கலைஞரும் தப்ப முடியாத அசைவுகளில் இதுவும் ஒன்று. வலதுசாரிய – அதிகாரச் சக்திகள் மீது கவர்ச்சி கொண்டு தங்களைத் தாங்களே தணிக்கை செய்து அதிகாரத்தின் அங்கீகாரத்துக்காக இரகசியமாக ஏங்கும் எழுத்துகள் எதுவும் கால ஓட்டத்தில் நின்று பிடிப்பதில்லை என்ற உண்மையை எழுதுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அரசியற் செயற்பாட்டில் இருந்தால் எழுத முடியாது என்ற அச்சத்தை அவர்கள் துடைத்தெறிய வேண்டும். அரசியற் செயற்பாடு எழுத்தைச் செம்மைப்படுத்த வல்லது. இலக்கியவாதிக்கு அரசியற் செயற்பாடு அத்தியாவசியமானது என்று கூடச் சொல்லலாம். முழு நேர அரசியல் தேவையில்லை. ஆனால் அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலை என்ற பாவனையும் தேவையில்லை. உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் ஊடுருவாத இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதா?
செயற்பாடு என்பது அறிதல். நல்ல கலைஞருக்கு மந்த நிலை சாத்தியமில்லை. சமூக ஓட்டத்தில் சரிவது தவறில்லை. ஓடிக்கொண்டு எழுதுவதுதான் எழுத்து. இவ்வாறு திட்டவட்டமாகச் சொல்வது சிலருக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். அது இலக்கியமில்லையா? இது இலக்கியமில்லையா? எனப் பல உதாரணங்களைக் காட்டலாம். இங்கு சொல்லப்படும் கருத்து விரித்துப் பேசப்படாமல் முழு விளக்கத்தை நோக்கி நகர்தல் சிரமம். இது பற்றிய விவாதம் வேண்டும்.
15. ஆனால் நம் சூழலில் அமைப்பாகிச் செயற்படும் போக்கு குறைந்துள்ளதே? இது மக்கள் உதிரிகளாக்கப்பட்டதன் விளைவா? அல்லது அதற்கான தேவை இப்போது இல்லையா?
எங்கே குறைந்துள்ளது. நாற்பதுபேர் இருக்கும் இடத்திலும் நாலு அமைப்பிருக்கும் நிலைதான் இருக்கிறது. இலக்கியச் சந்திப்பு என்று இயங்குவதும் அமைப்பு சார் செயற்பாடுதான். ஏதோ ஒரு அமைப்புச் சார்ந்துதான் பெரும்பான்மையானவர்கள் இயங்குகிறார்கள். இது ஒருவகையில் அரசியற் பிரக்ஞை அதிகரித்த நிலையைச் சுட்டி நிற்கிறது. ஒரு இடது சாரிய அல்லது சோசலிச அமைப்பு என்பது வேறு விடயம். பொதுவாக மக்கள் மத்தியில் இத்தகைய அமைப்புக்கு எதிரான போக்கு இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. வரலாற்றுக் காரணங்கள் அதில் முதன்மையானவை. சோசலிஸம் என்ற பெயரில் நிகழ்ந்த சனநாயக மறுப்புகளும், கொலைகளும், ஏமாற்றுக்களும் சோசலிஸ்டுகளின் தலையில் கனத்துக்கொண்டிருக்கும் வரலாற்றுச் சுமைகள். இன்றும் என்ன நடக்கிறது எனப் பாருங்கள். சோசலிஸ்ட் என்ற பெயரில் பழைய லங்கா சம சமாஐ கட்சியும், கம்பியூனிஸக் கட்சியும் மகிந்த ராஐபக்ஷவைத் திரும்பவும் அதிகாரத்தில் இருத்தப் படாத பாடுபட்டு வருகின்றன. தன்னைச் சோசலிஸ்ட் என்றும் ட்ரொட்ஸ்கிஸ்ட் என்றும் சொல்லிக்கொள்ளும் வாசுதேவ நாணயக்கார படும்பாட்டைப் பாருங்கள். மார்க்ஸியவாதிகள் எனத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் ஜே.வி.பி யினர் எவ்வாறு இனவாதம் குளிர்காயும் இடமாக இருக்கிறார்கள் என்றும் பார்க்கலாம். இப்படியிருக்கும் நிலையில் இந்த அமைப்புகளை நோக்கி மக்கள் எப்படிப்போக முடியும்? இது தவிர பல்வேறு கம்பியூனிசக் கட்சிகள், சனநாயகம் மறுத்த கட்சி முறையைக் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. இன்றும் அவ்வாறே. இக்கட்சிகளுக்குள் சனநாயகம் இருந்ததில்லை. சனநாயக மத்தியத்துவம் என்ற பெயரில் இவர்கள் அதிகாரத்தைப் பாதுகாத்து வந்திருக்கின்றனர். இதுவும் ஒரு பெரும் பலவீனம். 1989ம் ஆண்டு ஸ்டாலினிய சரிவின் பின்பு ஏற்பட்ட முதலாளித்துவத்தின் வெற்றிக் கொண்டாட்டக் களிப்பு கடுமையான பிரச்சாரத்தைச் சமூகத்துக்குள் விதைத்துள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைதான் மீண்டும் சமூகம் சார்ந்த அமைப்புகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ஆரம்ப காலத்தில் அமைப்புகள் அற்ற திரட்சியைத்தான் மக்கள் முதலில் நாடி நிற்கின்றனர். கிரேக்கத்தில் ‘சிறிசா’ ஒரு கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அதேபோல் ‘ஸ்பானிய இன்டிக்னாடா’ இயக்கம் தெரு இயக்கமாகவும்,அமைப்புகள் மற்ற மக்கள் சனநாயக இயக்கமாகவும் முன்னிறுத்தப்பட்டது. ஃபிரான்சில் நடக்கும் நுயி டெபு – இரவின் எழுச்சி நிகழ்வுகளிலும் இந்தப் பண்பைக் காணலாம். இதைத்தான் தெரு ஒழுங்கமைக்கும் என்று தத்துவமாக்க முயன்றிருந்தனர் பழைய சின்டிகலிஸ்டுகள். ஆனால் இதன் தொடர்ச்சி எப்படி நகருகிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஒரு கட்சியாகி இறுகிய சீரமைப்பின் தொடர்ச்சியாகவே சிறிசா கிரேக்கத்தில் ஆட்சியைப் பிடித்தது. இன்டிக்னாடா இயக்கம் பொடிமஸ் அமைப்பாகியது. தற்போது ஃபிரெஞ்சு சனாதிபதியைவிட மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவராக இருக்கிறார் மெலன்சோன். போர்த்துக்கலில் பலம்பெறும் இடதுசாரிய ஒன்றியம் – இங்கிலாந்து முமன்ரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். தானாக இயங்குவோம் என்ற ஒவ்வொரு முனைப்பும் எவ்வாறு அமைப்பு மயப்படுகிறது என்பதை வரலாறு முழுக்க நாம் பார்க்கலாம்.
மக்கள்,அமைப்பு மயப்படாமல் அரசியல் எதிர்ப்பு – முனைப்பு குவிவது சாத்தியமில்லாமல் இருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கேட்டு நாம் சிந்திக்கவேண்டும். தோமஸ் கோப்சின் லெவியாத்தானில் இருந்து பல சிந்தனையாளர்கள் இந்தப் போக்கு பற்றி ஆராய்ந்திருக்கின்றார்கள். தனிமனித அரசியல் என்று எதுவும் கிடையாது. அரசியல் என்பது ஏதோ ஒரு அடிப்படையில் பலர் கூட்டாக இணைவதாகவும் இருக்கிறது. இதுதான் அமைப்பாகிறது. அதே சமயம் இவ்வாறு அமைப்பாகும் குழுச் சுதந்திரத்தை இழக்கக்கூடாது என அதற்கு எதிரான விதிகளையும் உள்வாங்கவேண்டும் என இடதுசாரிகள் வாதிடுகிறார்கள். அமைப்பு மயப்படும் அதே சமயம் தனிமனிதக் கருத்துச் சுதந்திரங்களின் – வெவ்வேறு அரசியற் கேள்விகளின் சுதந்திரங்களின் உரிமைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதே வேளையில் தாம் இணைவதற்குக் காரணமான புள்ளியை அடையும் நோக்கிலும் அமைப்பு திட்டவட்டமாக நகரவேண்டியிருக்கு. இந்தச் சிக்கலைச் சனநாயக மத்தியத்துவம் என்ற பெயரில் ஒழுங்குபடுத்த முயற்சித்தார் லெனின். கையைத் தூக்கும் குறுகிய சனநாயக வடிவத்துக்கு அப்பால் பங்குபற்றும் சனநாயக முறைகளையும் விவாதங்கள் உரையாடல்கள் மூலம் கொள்கை நகர்த்தும் முறையையும் – முன்னோக்கைத் தயாரிப்பதன் மூலம் மாற்றங்களுக்கு ஏற்ப கட்சியின் திசைகள் ஒவ்வொருபொழுதும் புதுப்பிக்கும் தன்மை பற்றியும் இன்று பல இடதுசாரிய கட்சிகள் சிந்தித்துச் செயற்படுகின்றன. ஒரு சொட்டு சனநாயகத்தையும் தமது உறுப்பினர்களுக்கு வழங்காத முதலாளித்துவ கட்சிகள் இடதுசாரிகள் மத்தியில் இருக்கும் சனநாயகப் பாரம்பரியம் பற்றிப் பேச அனுமதிப்பதில்லை. அதனால் இதுபற்றி மக்கள் மத்தியில் விளக்கங்கள் இல்லை. சனநாயக மறுப்பு முதலாளித்துவ கட்சிகளில் இணைவதோ அல்லது அவற்றுக்கு வாக்களிப்பதோ கேள்விக்கு அப்பாற்பட்ட சமூகச் செயற்பாடாக –ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக – பொது அறிவாகக் கருதப்படுகிறது. அதே சமயம் முதலாளித்துவ ஒழுங்குமுறையைக் கேள்வி கேட்கும் அமைப்புப் பற்றிப் பேச்சு எழும்பொழுது கொடிய பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்தப் பிரச்சாரங்களை அவர்களின் ஊடகங்கள் செவ்வனே செய்கின்றன. முழுக்க முழுக்க முதலாளித்துவக் குப்பைகள் கொட்டப்படும்பொழுது வெறுமனே ஏற்றுக் கொள்ளும் மனம் – இடதுசாரியக் கருத்துகள் வைக்கப்படும்பொழுது மட்டும் அதை ஏன் பிரச்சாரம் எனப் பார்க்கிறது?
சமூகத்துக்குள் இருக்கும் இந்தப் பிரக்ஞை போதாமைதான் இடதுசாரிய அமைப்புகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது. போராட்டத் தருணங்கள் உண்மைகளை உடைத்துக்காட்டி இந்த அமைப்புகளை வளர்த்தெடுக்கின்றன. சேவைகளுக்கு எதிரான போராட்டங்கள் தான் ‘ஜெரமி கோர்பின்’ என்ற இடதுசாரியை இங்கிலாந்தில் எதிர்க்கட்சி ஆக்கியது. ஆக அமைப்புச் சார்ந்த கேள்வி வெறுமனே அகம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல. பல்வேறு புறநிலைக் காரணிகளின் தாக்கத்துக்கு தொடர்ந்து உள்ளாக்கப்படும் சமூகத்தின் அசைவு சார்ந்த கேள்வியாகவும் அது இருக்கிறது.
16. வரலாற்றில் மார்க்ஸியத்தின் பணி முடிந்துவிட்டது. தற்போது தாராளமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகம் தோன்றி இருக்கிறது. இதன் விளைவாக இனி உலகளாவிய ஜனநாயகமும் சுகந்திரச்சந்தையும் தொன்று இது ஒரு நற்செய்தி என்கிறாரே பிரான்சிஸ் புகாயாமா?
“ஆம் நான் சொன்னது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கருத்தே” என 61 வயதில் 2004ம் ஆண்டில் புகாயாமா ஏற்றுக்கொண்டிருக்கிறார். “வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்” என்ற அவரது புத்தகம் மில்லியன் கணக்கில் அள்ளிக் கொட்டியிருந்தது. எங்கே அந்தக் காசு? புத்தகம் வாங்கிய அனைத்து வாசகருக்கும் அவர் பணத்தைத் திருப்பிக்கொடுக்கவேண்டும்.
சில மனிதர்களின் பெயரைக் கேட்டால் மூக்கின்மேல் கோபம் பொத்திக்கொண்டு வந்துவிடுகிறது. பிரான்சிஸ் புகாயாமா என்ற பெயரும் அதில் ஒன்று. சுயநலம்- சுயலாபம் என்பதற்கு அப்பால் இவரது சிந்தனை சென்ற வரலாறு இல்லை. ஸ்டாலினிய சோவியத் ரஷ்யாவின் சரிவு 1989களில் ஆரம்பித்த பொழுது அங்கிருந்து மாபெரும் வளங்களைச் சூறையாடப் பல கழுகுகள் பறந்து கட்டி ஓடின. அவர்களின் ஈவிரக்கமற்ற நடைமுறைகளை நியாயப்படுத்த எழுந்த பொருளாதாரக் கருத்துகளின் பிதாமக்கள் சிலர் அனைத்து முதலாளித்துவ ஊடகங்களிலும் கடுமையாக ஊக்குவிக்கப்பட்டனர். ஒரு இரவில் பில்லியனர்கள் உருவாகிக் கொண்டிருந்த நிலைமை –சோவியத்தின் சரிவு ஆகியன சந்தைப் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தியவர்களின் பலத்தைக் கூட்டியது. ‘நாம் வென்றுவிட்டோம்’ என வோல் ஸ்றீற் ஜேர்னல் அறிவித்துக்கொண்டது. முதலாளித்துவ வெற்றிப்பெருமிதம் ஒரு பக்கம் சூறையாலை முடுக்கிவிட்டது. மறுபக்கம் முற்போக்காளர் மீது தத்துவார்த்த முற்றுகை நிகழ்த்தப்பட்டது. லாபம் என்ற ஓரே ஒரு காரணத்துக்காக இதைச் செய்த பிற்போக்குவாதிகளில் ஒருவர்தான் புக்காயாமா. நியோகொன்சர்வேட்டிவ் என அழைக்கபட்ட அதி வலதுசாரிய குழுவின் சார்பிலேயே இவரது பிரச்சாரங்கள் ஆரம்பித்தன. அவர்களுக்காகப் பேசுகிறார் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இவர் உலகளவில் தூக்கி நிறுத்தப்பட்டார்.
நயோமி கிலைனின், ‘ஷொக் டொக்ரின்’ (அதிர்ச்சி. தத்துவம் /வைத்தியம்) என்ற புத்தகத்தைத் தயவு செய்து படியுங்கள். அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகமது. புத்தகம் முடிவதற்குள் உங்கள் மனம் கனத்து வெடித்துவிடும் அபாயம் உள்ளது. நியோகொன்களின் கேவலத்தின் குறுக்கு வெட்டு முகத்தைக் காட்ட முயன்றிருப்பார் நயோமி கிலைன்.
சனநாயகம் என்ற பெயரில் பினாத்திக்கொண்டு திரிந்த புகாயாமா ஏன் சர்வாதிகாரி கடாபியின் ஆலோசகராக இருந்தார்? எதற்காகப் பெரும் பெரும் வியாபாரங்களிடம் இருந்து பணம் பெற்றார் என்றெல்லாம் இவர்களைப் பார்த்து நாம் கேட்டுவிட முடியாது. இவர்கள் சுரண்டுவதும் பொய்களால் அதை மறைப்பதும் தமது பிறப்புரிமைபோல் நடந்துகொள்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் இந்தப் பிசாசு மார்க்ஸியத்துக்கு அடி போடுகிறது. இன்னொரு விதத்தில் இது மார்க்ஸியத்தின் வெற்றி. முதலாளித்துவம் இருக்கும் வரையும் தன்னை யாரும் மறந்துவிட முடியாது என மார்க்ஸ் தெனாவட்டாகப் பேசியது இதை அறிந்துதான் போலும். வரலாறு பற்றிய பழைய பார்வையைக் கேள்வி கேட்டவர்களில் முதன்மையானவர் மார்க்ஸ். தத்துவத்தின் வரலாற்றை முடித்து வைத்து அதைச் செயலுடன் இணைத்தவர் மார்க்ஸ். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு கருத்துகளை வளர்த்தெடுத்த பெரி ஆன்டர்சன் போன்றவர்கள் இருக்கிறார்கள். இவற்றை வெட்டி ஒட்டித் தனது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிக்கொள்ள முனைந்தவர் புகாயாமா. அவரது அசல் கருத்து என்று ஒன்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
முதலாளித்துவ அமைப்புக்கு அப்பால் இனி வேறு வகை அமைப்பு கிடையாது என்ற அர்த்தத்தில் வரலாறின் முடிவை அறிவித்த இதே புகாயாமா இன்று முதலாளித்துவத்தின் போதாமைகள் பலதை ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். வரலாறு அந்தப் பணியை நிறைவேற்றியிருப்பது ஒருவித முரண்நகை தான். முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி இன்று பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்களின் உள்ளசைவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இன்று அதிகம் விற்பனையாகும் பொருளாதாரம் சார் புத்தகங்கள் எவை? தோமஸ் பிக்கட்டியின் புதிய புத்தகத்துடன் பழைய ஆடாம் சிமித், கார்ல் மார்க்ஸ், கயாக், கெயின்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பொருளாதார நெருக்கடியை விளங்கிக்கொள்ள இவர்களிடம் திரும்பிச் செல்லப் பணிக்கப்பட்டிருக்கிறோம். மீண்டும் மார்க்சியத்தை படிப்பிக்கும் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்து என இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் மாணவர்கள் போராட்டம் செய்யும் அளவுக்கு நிலைமை வளர்ந்துள்ளது.
உலகின் முதன்மை முதலாளித்துவ நாடுகளாகக் கருதப்படும் இங்கிலாந்திலும் ,அமெரிக்காவிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தைப் பாருங்கள். வர்க்க அடிப்படையில் சமூகம் பிழந்து கிடப்பதை இங்கிலாந்தில் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. வறிய மக்கள் சார் கொள்கைகள் முன்னெடுக்க இருப்பதாக பாசாங்கு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார் வலதுசாரியக் கட்சித் தலைவரான தற்போதைய பிரதமர். முதலாளிகளைத் தாக்கி இந்தளவுக்குப் பேசிய வரலாறு கன்ஸர்வேட்டிவ் கட்சிக்கு முன்பு இருந்ததில்லை. வலப்பக்கம் இருந்து நடுப்பக்கம் நோக்கி அவர்கள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனச் சில வலதுசாரியக் கருத்தாளர்கள் கவலைப்படும் அளவில் இருக்கிறது நிலவரம். நான் ஒரு சோசலிஸ்ட் – முதலாளித்துவத்துக்கு எதிரானவன் என்று பகிரங்கமாகச் சொல்லும் ஜெரமி கோர்பின் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறார். அவரது பதவியைப் பறிக்கப் போட்டியிடும் ஓவன் சிமித், தான் சோசலிஸப் புரட்சிக்கு ஆதரவானவன் எனப் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். கோர்பினை விட தான் அதி தீவிர இடதுசாரி எனக்காட்டிப் பதவியைப் பிடிக்க முயற்சிக்கிறாரவர். அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு பெருங் கூட்டம், தன்னைச் சோசலிஸ்ட் எனப் பகிரங்கமாக அழைக்கும் பெர்னி சான்டர்சுக்குத் திரளுகிறது. அவரின் ஆதரவை முதன்மைப்படுத்தி டெமொகிராட் கட்சியை காப்பாற்றி வைத்திருக்க முயற்சிகள் செய்கிறார் கிளாரி கிளின்டன். அடுத்த அமெரிக்கச் சனாதிபதியாகுவார் எனச் சொல்லப்படும் அவர் சராசரி ஊதிய உயர்வு, பெரும் வங்கிகளைக் கட்டுப்படுத்தல் என்பது பற்றிப் பேசக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் அதி வலதுசாரியான பில்லியனர் டொனால்ட் டிரம்பின் மொழியைக் கவனித்துப் பாருங்கள். தான் அதிகாரச் சக்திகளுக்கு எதிரானவன் என்கிறார் அந்த பில்லியனர்.
எங்கே நியோ கொன்கள்? மார்க்சியத்தின் காலம் முடிந்து விட்டது என்று அறிவித்துக்கொண்டவர்கள் எந்த குகைக்குள் ஒழிந்துக் கிடக்கிறீர்கள். முடிந்தால், வெளியில் வந்து மக்களைத் திரட்டிக் காட்டுங்கள்.
நியோ கொன்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலவரத்தைப் பழைய கார்டியன் ஊடகவியலாளரும் தற்போது ஜெரமி கோர்பினின் ஆலோசகராகவும் இருக்கும் சேமஸ் மிலின் அழகாகச் சுருக்கிக் கூறியிருப்பார். – ‘வரலாற்றின் பழிவாங்கல்’.
17. முற்போக்கை நோக்கிச் சரியாத தமிழ்தேசியத்திற்கு எதிர்காலம் இல்லை என்கின்றீர்கள். நாம் எழுபதுகளிலேயே முற்போக்கான சோசலிஸத் தமீழீழத்தை நோக்கித்தானே ஆரம்பித்தோம்?
பலருக்குச் சினமூட்டக்கூடிய கருத்தாக இருப்பினும் சில விசயங்களைத் தெட்டத் தெளிவாக – வெளிப்படையாகப் பேசியாக வேண்டியிருக்கிறது. தமிழில் மட்டும் படிக்கும் ஒருவர் மார்க்ஸியத்தை அறிந்துகொள்வதோ – அல்லது சோசலிஸம் என்றால் என்ன என்பது பற்றிய விஞ்ஞானபூர்வ விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதோ சாத்தியமில்லை. ஏராளமான பிழைகளோடு இருக்கும் மொழி பெயர்ப்புகள் – தங்கள் தங்கள் புரிதிதலுக்கு ஏற்ப விளங்கிக்கொண்ட அரை குறை விளக்கங்கள் என்பவை தான் மலிந்து கிடக்கின்றன. கடுமையான உரையாடல்களுக்கு உட்படாத மொழி பெயர்ப்புகள் நிகழும்போது இப்பிரச்சினை எழுகிறது. ஆங்கிலத்தில் இருக்கும் மார்க்ஸிய மொழி பெயர்ப்புகள் பல உரையாடல்கள் – ஆய்வுகளுக்கு உட்பட்டுத் திருத்தப்பட்டவையாக இருக்கின்றன. அப்படியிருந்தும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழில் இது பற்றி எந்த உரையாடல்களும் நிகழ்வதில்லை. இந்தப் போதாமை இடது சாரிய மொழியையே சீரழித்துள்ளது. மொழிபெயர்ப்பு மொழியில் எழுதுவது இடதுசாரிய மொழியாக இருக்கிறது. சில கறாரான ஸ்டாலினிஸ்டுகள் எவ்வாறு ஆணாதிக்க மொழியில் எழுதுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
இடதுசாரிகள் மத்தியில் இவ்வளவு பிரச்சினை இருக்கும் பொழுது அமிர்தலிங்கம் சோசலிஸத்தைத் தெரிந்து ஏற்றுக்கொண்டவர் எனப் பார்ப்பது பெரிய பிழை. இளசுகளைத் தங்கள் தேர்தல் வேலைகளுக்காக வளைத்துப்போட வட்டுக்கோட்டையில் சோசலிஸம் என்ற சொல்லை மூக்கைப் பொத்திக்கொண்டு உச்சரித்தற்காக அவர்கள்மேல் அநாவசியப் பழியைப்போடாதீர்கள். இதெல்லாம் அந்தக் காலத்தில் யோசிச்சது யாரப்பா என அவரே பின்பு கனடாவில் பேட்டி வழங்கியிருக்கிறார். கூட்டணி முற்போக்குப் பக்கம் கொஞ்சம் தலை சாய்ந்திருந்தாலே போதும், வரலாறு வேறுவிதமாக இருந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்
இயக்கங்கள் கட்டத்தொடங்கிய பலருக்கு ஆரம்பகாலத்தில் சோசலிஸம் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய – உரையாடக்கூடிய வாய்ப்புகள் அதிகமிருக்கவில்லை. அவசர, அவசரமாக ஆயுதம் தூக்க வைக்கப்பட்டு விட்டார்கள். இந்தியத் தலையீடும், வரலாற்று நிகழ்வுகளும் அரசியல் வளர்ச்சியை முடக்கி விட்டன. இலங்கையும் இன்றுவரை சோசலி்ஸக் குடியரசு என்றுதான் அழைக்கப்படுகிறது. அதன் ஒருவித எதிர்வினையாகத்தான் சோசலிசத் தமிமீழமும் பேசப்பட்டது. இவற்றுக்கு முறைப்படியான அர்த்தங்கள் எதுவும் கிடையாது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முற்போக்கான பல இளைஞர்களை உள்வாங்கியது. தமது வேலைத்திட்டம் பற்றி ஒரு புத்தகம்கூட இவர்கள் வெளியிட்டார்கள். புளட் இயக்கம்கூட சோசலிஸம் பற்றிய வகுப்புகளுக்கு இளைஞர்களை அனுப்பியது. புலிகள் இயக்கத்தினர் உலக இளையோரை நோக்கிய வேண்டுகோள்கள் வைத்துச் சிறு ‘சோசலிஸ’ அறிக்கையையும் வெளியிட்டார்கள். கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்த நிலவரங்கள் மற்றும் பனி யுத்தம் நடந்த காலகட்டம் ஆகிய வரலாற்றுக் கட்டத்தில் வைத்து இந்நிகழ்வுகளைப் பார்க்கவேண்டும். வரலாற்று விசையால் உந்தப்பட்ட இச்செயல்கள் நிகழ்ந்தபோதும் சோசலிஸம் சம்மந்தமாக என்ன புரிதல் இருந்தது? அரசியற் பலவீனம் எவ்வளவு ஆழமாக இருந்தது என்று. அக்காலத்தில் வெளியான வேலைத்திட்டம் மற்றும் ஏனைய வெளியீடுகளை இன்று படிப்பவர்களுக்குத் தெரியும். அக்காலத்து இடதுசாரியத் தலைமைகளிடம் இருந்த பலவீனங்களும் இந்த போக்குகளில் வடிந்து செல்வதைப் பார்க்கலாம். இதுதான் இளைஞர்களைக் குறுகிய பார்வை நோக்கியும் குறுக்கு வழிப் போராட்டம் நோக்கியும் நகர்த்தியது.
சோசலிசத் திட்டமிடலுடன் தெளிந்த பிரக்ஞையுடன் இயங்கின என எந்த ஒரு அமைப்பையும் குறிப்பிட்டு விட முடியாது. அதே சமயம் இயக்கங்களில் இணைந்துகொண்டிருந்த பல இளையோர்கள் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களாக இருந்தனர். அந்தச் சக்தி, விரயம் செய்யப்பட்டு விட்டது. ஆயுதம் தாங்குவது முதன்மைப்பட்டு ஆளுக்காள் அடிபடத் தொடங்கியது அரசியற் செயற்பாட்டு வளர்ச்சியைத் தடுத்து முடக்கிவிட்டது.
ஆயுதமயப்படுத்தல் பற்றிய எந்தத் தெளிவுமற்ற சண்முகதாசன் போன்றோர் ஆயுதம் தாங்கிச் சுடுவதை ஒரு முற்போக்கு நடவடிக்கையாகப் பாராட்டிய நிலைதான் ஏற்பட்டது. ஜே.வி.பி யின் ஆயுதம் தாங்கிய எழுச்சியை எதிர்த்தவர்கள் தமிழ் இளையோரின் எழுச்சிகளை முற்போக்காகப் பார்த்தனர்.
இருப்பினும் இந்த ஆரம்பகாலத்து நடைமுறைகள், இயக்கங்கள் முழுமையான பிற்போக்கை நோக்கித் தாவுவதை ஓரளவு தடை செய்தன என்பது உண்மையே. அவர்கள் தீவிர மேற்குலக முதலாளித்துவ ஆதரவுச் சக்திகளாக இயங்கவில்லை. மேற்குலகின் சேவைக்காக அவர்கள் இயங்கவில்லை. அல்லது இந்திய அரசு எதிர்பார்த்தது போல் அவர்களின் கைக்கூலிகளாகவும் இயங்கவில்லை. தீவிரவாதத் தாக்குதல்களை மக்கள் மத்தியில் செய்வதை மட்டும் முதன்மைப்படுத்தி இயங்கவில்லை. ஆனால் இதற்காக முற்போக்குக் கருத்துகள் உள்வாங்கப்பட்டு அவற்றை மையமாகக் கொண்டே போராட்டத் திட்டமிடல் நடந்தது என நாம் முடிவுக்கு வருவது தவறு. போராட்டத்துக்கிருந்த பெரும் பலவீனமாக இது தொடர்ந்து இருந்து கொண்டேயிருந்தது.
புலிகள் இயக்கத்துக்குள் இருந்த அரசியற் போராளிகள் பலர் லெனின் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படிக்கப் வைக்கப்பட்டனர். அது மட்டுமின்றி மேற்கத்தேய அரசு- பிராந்திய நிலவரங்கள் எனச் சிறு பாடங்களும் எடுக்கப்பட்டன. ஜே.வி.பி எப்படி நாலு பாடங்களுக்குள் தமது உறுப்பினர்களின் அறிவை முடக்கினரோ அவ்வாறுதான் இந்தப் பாடங்களும் முழுமையான அறிதல் நோக்கி இளையோரை நகர்த்தவில்லை.
முற்போக்கான போராட்டத் திட்டமிடல்கள் என்றும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. முற்போக்கு அம்சங்களை அங்கும், இங்கும் நீங்கள் சுட்டிக் காட்டலாம். ஆனால் அவை விதிவிலக்குகளாக எஞ்சி நின்றவையாகத்தான் பார்க்க முடியும்.
ஆனால் இன்றிருக்கும் நிலவரம் மிகக் கேவலமான திசையில் நகர்கிறது. எவ்வளவு முற்போக்குச் சாயம் பூசினாலும் தேசியம் என்பது எப்போதும் பிற்போக்கானதே என்று நீங்கள் கூறலாம். இன்று தேசியம் பேசுபவர்கள் அக்கூற்றுக்கு அர்த்தம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பிற்போக்கான அரசியலுடன் இணைந்துகொண்டு அதனை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். அமெரிக்கா எங்களின் மனித உரிமைக்காகப் பாடுபடுகிறது என மக்கள் மத்தியில் எந்த இயக்கமும் முன்பு பிரச்சாரித்தது கிடையாது. இந்தியாவின் நட்புக்காகச் சம்பூர் மக்கள் சாவது சரி என்ற நிலைப்பாட்டை முன்பு யாராவது எடுத்திருப்பார்களா? மிக மோசமான வலதுசாரிய மரபுவாதக் கட்சித் தலைவர் டேவிட் கமரோன் போன்றவர்களை ‘எங்கள் தலைவன்’ எனப் பிரச்சாரிப்பது முன்பு சாத்தியப்பட்டிருக்க முடியுமா? இத்தகைய வலதுசாரியம் பலப்பட்டு வருகிறது. தமிழ் பேசும் மக்கள் இயற்கையிலேயே மரபுவாதிகள் என வாதிக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
யுத்தம் முடிந்து இயல்பு திரும்பிய நிலையில் இத்தகைய வலதுசாரிப் போக்குகள் தங்கள் தலையைத் தூக்குவதும் – தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவ முயல்வதும் தவிர்க்க முடியாததே. ஆனால் நாம், போராட்டச் சக்திகளை அவர்கள் பிடியில் இருந்து விடுவிக்க விரும்புகிறோம். அவர்கள் சார்ந்து நின்று ‘போராட்டம்’ என்ற சொல்லை உச்சரிப்பதன் போலிப் பித்தலாட்டத்தை வெளிச்சப்படுத்த விரும்புகிறோம். இதனாற்தான் தேசியவாதிகளை இரண்டாகப் பிரித்து அணுகும் திட்டமிட்ட அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் இடதுசாரியத் தேசியம் என்ற ஒன்றை நோக்கிப் போராட்டக் கதையாடல் திரும்பவேண்டும் என எதிர்பார்க்கிறோம். அயர்லாந்து- குர்திஸ்தான் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிலவரம் போல் இடது சார்ந்து தேசியத்துக்குள் நுழைவது போராட்டம் சார்ந்த செயற்பாடுகளை தொடர்ந்து நிலைநாட்ட அத்தியாவசியமாக இருக்கிறது. ஆனால் அத்துடன் திருப்திப்பட்டுக்கொள்ளும் நோக்கு நமக்கில்லை. சரியான முற்போக்குத் திட்டமிடல் என்பது – தேசிய உரிமை உட்பட அனைத்துச் சனநாயக உரிமைகளையும் வென்றெடுக்கும் திட்டமிடல் என்பது – அதையும் தாண்டி நகர வேண்டும் என்ற தெளிவு எமக்குண்டு. ஆனால் மக்களை அத்திசை நோக்கித் திருப்பும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அனைத்துத் தேசியவாதிகளையும் நோக்கி நாம் வைக்கும் கோரிக்கை தான் மேற்சொன்ன முற்போக்குத் தேசியம் நோக்கித் திரும்பச் சொல்லிக் கேட்கும் கோரிக்கை. போராட்டம் பற்றிப் பேசுபவர்கள் இத்திசையில் திரும்பாவிட்டால் பிற்போக்கின் கை ஓங்கிப் போராட்டக் கதையாடலை முடக்கும் என்ற உண்மையை மக்களுக்குச் சொல்லுகிறோம். போலிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவிக்கும் முதல் முயற்சி இது.
18. இலக்கியத்தை அளக்க முடியாது என்கின்றீர்கள்.ஆனால் இலக்கியம் ஒருபக்கச் சார்பானவர்களால் ஒரு விதமாகவும், மறுபக்கச் சார்பானவர்களால் இன்னொரு விதமாகவும் அளக்கப்படுகிறதே…
அளக்க முடியாது. ஆனால் அளந்து பார்க்கிறார்கள். அளக்க முடியாத பிரச்சினையால் வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு சிக்கலான கேள்வி. ஏனெனில் அளவுகோலற்ற பார்வை என்று இலக்கியத்தைப் புனிதப்படுத்தும் கருத்து நிலைக்கு நாம் சென்றுவிடக்கூடாது. நாம் சொல்வது வேறு அர்த்தத்தில். இலக்கியம் என்பது அகம் சார்ந்த விசயமாகவம் இருக்கிறது. இரவு கறுப்பு ஆட்டுக்குட்டி என்றும் -அதன் கழுத்து அறுந்த கதை பற்றியும் கவிஞர் மு.நாவாஸ் எழுதுகிறார். இரவு கறுப்பென்பது பொது அறிவு. பள்ளிவாசலில் பாங்கொலி கேட்டுகும்போது அறுபடும் ஆடு என்பது நிறத்தையும் நிகழ்வையும் இணைக்கிறது. இது சாத்தியப்படுவதற்கு ஆடறுப்பது பற்றிய பொது அறிவும் தேவை. ‘கறுப்பு என்பது பொது அறிவு – ஆடறுப்பது அவ்வாறல்ல. அதனால் கவிதைப் புரிதல் நிலை அனைவராலும் அறியப்படாதபடி குறுக்கப்படுகிறது’ என ஒருவர் வாதிடலாம் – அளவிடலாம். இதில் ஒரு போதாமை இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?
பொது அறிவின் மேல் இடித்துத்தான் தான் சொல்லவரும் அகோரத்தின் படிமத்தைச் செதுக்குகிறார் கவிஞர். குறுக்குதல் இன்றி – அரூபமயமாக்கல் இன்றி இது சாத்தியமில்லை. சமூகம் சார்ந்த இந்தப் பொது அறிவுக்கும் – நீதி, நியாயம் கேட்கும் படிமத்துக்கும் – தனிமனித அகத்துக்கும் இருக்கும் தொடர்பைப் படிமத்தின் கூர்மை மங்க வைத்துவிடுகிறது. அந்த மங்கலில் – படிமத்தில் நாம் மயங்கிவிடுகிறோம். அந்த மயக்கத்தில்தான் அளந்து பார்த்துவிடலாம் என்ற கொலை வெறி பிறக்கிறது. நிறம் என்பது அகவயப்பட்டது. மனிதரல்லாத மிருகங்கள் நிறத்தைப் பார்ப்பது வேறுவிதம் என்பது அறிவோம். இருப்பினும் ஒரு புறவய யதார்த்தம் நிறம் என்ற பாவனையில் இலக்கியம் நகர்கிறது. மொழி இயக்கத்தின் இருப்பு – நிறைய அரூப நிகழ்வுகளை உள்வாங்கி அவற்றை யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதாகவே நகர்கிறது. அதனாற்தான் இது என்றைக்கும் இறந்தகாலத்திலேயே நிகழ்கிறது. அன்றேல் இத்தகைய அரூபமாக்கல் சாத்தியமில்லை.
உங்கள் வீடுகளில் இருக்கும் அகராதிக்குள் நீங்கள் அறியா ஆயிரம் சொற்கள் இருக்கலாம். ஆனால் அகராதிக்கு அண்டங்களின் நுணுக்கங்களை அறிந்துகொள்ள முடியாது. சொற்களின் அர்த்தங்கள் புறவய உண்மைகளாக அன்றி வாழ்தல் சாத்தியமில்லை. சொற்கள் என்பது ஒரு வகை இயக்கம். ஒரு வகை விசை. ஒரு வகை இசை. ஒரு வகை விஞ்ஞானம். அந்த வகை அகவயத்து உணர்தலைப் புறநிலை நிஜமாக்க உதவுவதாக இருக்கிறது. சொற்களின் இணைவுகள் தேவை தோன்றி ஓசை மயப்படுகின்றன. அந்தச் சொல்லிசைப்பாட்டுக்குள் இருக்கும் நுணுக்கங்களை நாம் அளப்பது மாபெரும் விஞ்ஞானம். வெற்று அழகியற் கருத்துநிலைகள் – சிறு அளவுகோல்கள் அளக்கப் போதுமானதல்ல. ஆகையால் நாம் திணிக்கிறோம். அளப்பது என்பது எம் அறிவுக்கெட்டிய திணிப்பாக இருக்கிறது. அளப்பதும் ஒருவகை அரூபமாக்கும் செயற்பாடே. ஆனால் அது சாத்தியமில்லை. இருப்பினும் அது நிகழ்கிறது.
ஒவ்வொரு அளவுகோலிலும் எழுத்தாளரின் அகநிலை இருத்தலும் வெளியாகிறது. அவரது சமூக இருத்தலும் வெளிப்படுகிறது. இந்த இழுக்கும் நூலில் இருந்து தப்பித் தனியே நின்று பார்க்க முடியாது. இதனாற்தான் இலக்கியம் தெரிவு செய்யப்பட்ட சமூக நிலைப்பாட்டில் இருந்து பிரக்ஞையுடன் எழ வேண்டுமென அவதிப்படுகிறோம். பொதுப்படைப் படைப்பு சாத்தியமில்லை. அது இன்றி இரவின் கழுத்தறுக்கும் படிமம் சாத்தியமில்லை. மேற்படிப் படிமத்துடன் பார்க்கும் போது தொண்டையிற் கனக்கும் எச்சிலுக்கும் வெறுமனே ‘இரவின் கழுத்தறுப்பு’ என்று சொல்லும்போது எழும் ஊறலுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. இந்தத் தனிப்பட்ட அறிதல் அற்றவர் – பொதுமையைப் பற்றிக் கவலையற்று எழுதுபவர்தான் சிறந்த இலக்கியவாதியாகப் பார்க்கப்படுகிறார் –அளக்கப்படுகிறார். பொதுவாகப் போற்றப்படவும் செய்கிறார். இந்த முரண்நிலையைக் கவனியுங்கள்.
இந்த அறிதல்களுடன்தான் அளப்பதன் சாத்தியமின்மை பற்றி நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது. எழுத்தைச் சிறு குழுக்கள் நோக்கி நகர்த்த வேண்டியிருக்கிறது. ‘நாவல்’ எழுதுபவர் ஒரு பத்து –அல்லது இருபது பேருக்கு மட்டுமே எழுத முடியும். உலகம் படிக்கட்டும். நினைத்தபடி அளக்கட்டும். அது பற்றிய அக்கறையில் எழுத முடியாது. குறி வைக்கப்பட்ட ஒரு இருபது பேருக்கு எழுத்தைக் கொடுப்பதுதான் ஆசிரியரின் நோக்காக இருக்கமுடியும் என்ற சிந்தனை நமக்குள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இருபதே பெருந்தொகை இலக்கம். அதுவும் ஒரு உரையாடல்தான். ஐம்பது பேர் இருக்கும் ஒரு இலக்கியச் சந்திப்பில் உரையாடலைச் சாத்தியமாக்குவது எவ்வளவு சிக்கல் என்பதை அறிகிறோம். அப்படியிருக்க ஆறு பில்லயன் மக்களுடன் உரையாடலைச் சாத்தியப்படுத்துவது பற்றிக் கனவு காண்பது தவறல்லவா? எழுத்து உரையாடலை அரூபமாக்கி இறந்த காலத்தில் வைப்பதால் அது சாத்தியம் என்று போலியான கருத்தை நமக்கு நாமே சொல்லி ஆறிக்கொள்கிறோம். இதிலிருந்து விடுபடவேண்டும். அது இன்றி பன்முகப்பட்ட அழகியல்களை அனுபவிக்கும் ஆற்றல் இழந்துவிடுகிறோம்.
19. முன் முடிவுகளை வைத்துக் கொண்டு விமர்சனங்களை வைக்கும் இந்த அளவீடுகள் தட்டையாகத் தமிழ்த்தேசிய ஆதரவு – எதிர்ப்பு என ஆகி வருவதைப்பற்றி என்ன சொல்வீர்கள்?
‘புலி எதிர்ப்பு மையம்’ சார்ந்து இயங்குபவர்களின் அதிகாரம்தான் இலக்கிய உலகத்துக்குள் அதிகமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இவர்களின் இருத்தல்களுக்கு முற்போக்குக் காரணங்கள் இருந்தன. இன்று அப்படி எதுவுமில்லை. இவர்கள் தங்கள் இருத்தலை நிறுவுவதற்காக மட்டும் பேய்விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குருட்டுப் பார்வையில் பல இலக்கியங்கள் பதுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு எதிராகக் கடுமையான போக்கை நாம் முன்னெடுக்கவேண்டியிருக்கிறது.
இதே சமயம் இலக்கியம் பற்றிய ஈடுபாடு கடும் புலி ஆதரவு சக்திகள் மத்தியில் மிகக் குறைவாகவே இருக்கிறது. புலிகளைப் பற்றி ஒரு வசனம் அங்க, இங்க பிழையாக எழுதிவிட்டால் அதை முற்றாக எதிர்க்கும் போக்கு இன்றும் தொடர்கிறது. ஃபிரான்சிஸ் ஹரிசன் மற்றும் கலம்மக்கரே போன்றோர் கூடக் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தமிழில் எழுதுபவர்கள் சிலர் இந்தச் சூறாவளி தங்களை நோக்கித் திரும்பக்கூடாது என்ற பயத்தோடு எழுதுகிறார்கள். இது தவறு. நியாயமான சொற்களை எழுதுபவர்களுக்கு எந்தப் பயமும் இருக்ககூடாது. யாருடைய ஆதரவையும் நம்பி என் எழுத்தில்லை என்ற ஒருவித ‘தெனாவட்டுப்’ போக்கு தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்டால் தான் இந்த எதிர்த் திசையில் வீசும் காற்றிலிருந்து தப்ப முடியும். இந்த அலைக்குள் அடிபட்டுத் தாண்டிவிடுவோம் என்ற பயத்துடன் எந்த எழுத்தாளரும் எழுத்து நீச்சல் போட வரக்கூடாது. தங்கள் எழுத்தில் நம்பிக்கையுடன் அவர்கள் எழுத முன்வரவேண்டும்.
இந்தப் போக்குத்தான் தட்டையான பார்வைகளை உடைக்கும். எந்தச் சமரசமும் இன்றி மக்கள் பக்கம் நிற்கும் எமக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் செய்யும் கடும் வேலையை அவர்கள் பார்வைக்கு வைத்துக்கொண்டுதான் எமது கருத்தை முன்வைக்கிறோம். அதனால் கருத்தை வைப்பதில் எமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இதை இனிவரும் எழுத்தாளர்கள்தான் செய்ய முடியும். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியச் சந்திப்பு சார்ந்த கலைஞர்கள் பிளவுகளின் கூட்டாக ஒற்றைப் பார்வைகளுடன் நீண்ட காலமாக இயங்கி விட்டார்கள். இந்தப் போக்குகள் முற்றாக மாறும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் விமர்சனங்களும் அப்படித் தட்டையாகத்தான் இருக்கப் போகின்றன. அத்தகைய போக்குக்கும் ஒரு வரலாற்று இடமிருக்கு – என அந்த வரலாற்றுக் கட்டத்தில் வைத்து விமர்சனங்களைப் பார்த்துக்கொண்டு நகரவேண்டியதுதான். வேறு வழியில்லை.
இதைப் படித்ததும் கோபப்படாது சிந்திக்கவேண்டும் எனப் புலி எதிர்ப்பு மையவாதிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அடிமனங்களில் கிடக்கும் நியாயத்தைத் தெண்டி எடுங்கள். தெனாவட்டுப் போக்குகளைக் கைவிடுங்கள். உங்களுக்காகவும்தான் உங்களை நோக்கி இந்தக் கோரிக்கையை வைக்கிறோம். தனிப்பட்ட முறையில் மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கை இல்லை – இருப்பினும் இக்கோரிக்கை பொதுவாக வைக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில், இலக்கியம் மட்டுமல்ல அரசியலும் இவர்களைப் பின்னுக்கு விட்டு விட்டு நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் விலத்தி வந்துவிட்டார்கள். ஆகையால் இது பற்றி அதிகம் கவலைப்பட்டுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை.
20. நவீன ஈழத்துச் இலக்கியச் செயற்பாடுகளில் நம்பிக்கைக்குரிய போக்காக எவற்றை அடையாளம் காண்கிறீர்கள்?
இது பற்றிப் பொதுப்படையாகப் பேசவே விரும்புகிறேன்.
ஈழத்து இலக்கியத்தை வடக்கைச் சேர்ந்த எழுத்தாளர்கள்தான் இதுவரை ஆக்கிரமித்து வந்திருக்கிறார்கள். இந்நிலை மாறத் தொடங்கி விட்டது. கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் எழுத்துகள் மொழியின் தளத்தை விரித்துக்கொண்டிருக்கின்றன. கிழக்கு எழுத்துகளைத் தேடித்தேடிப் படிக்கவேண்டியிருக்கிறது.பல எழுத்தாளர்கள் எந்த ஆடம்பரங்களுமற்று ஆங்காங்கே படிமங்களை எறிந்துவிட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துத் தேடித்திரிவது அவசியமில்லை. ஆனால் அவர்களின் எழுத்துகளைத் தவிர்த்து, தமிழ் வாசிக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கிருந்து கொதித்துக்கொண்டிருக்கும் எழுத்து வெடித்துக் கிளம்பிக்கொண்டே இருக்கிறது. இது போல்தான் மலையகத்து எழுத்தின் அசைவும் வேறு தளங்களுக்கு நகர்ந்துள்ளதைப் பார்க்கலாம். யாழ்ப்பாணத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமைகள் இதை மீறி எழுந்து மீண்டும் வடக்கின் அதிகாரத்தை நிலைநாட்டுவது சாத்தியமில்லை. இந்தப் போக்குத்தான் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இவர்கள் தமிழ்நாடு நோக்கித் திரும்பும் சலனத்தை மறுத்துச் செயற்படவேண்டும் ஈழத்து இலக்கியத்துக்குள் தோன்றியுள்ள இழுபாடுகள் சும்மா முடிவுக்கு வராது. ஒன்றிரண்டு அதிசயங்களையாவது ஏற்படுத்தித்தான் இது ஓயும்.
ஆக்காட்டியைப் போல் வரும் சிறு பத்திரிகைச் சூழலும் வளர்வதற்கான சூழ்நிலைகள் இன்று அதிகம். சிறுபத்திரிகைச் சூழல் ஒரு இயக்கமாக இயங்க வேண்டும். இலக்கிய – அரசியல் முரணின் முனைப்பில் அவை நிற்கவேண்டும். சமகாலத்தின் அனைத்துக் கேள்விகளுக்கும் இப்பத்திரிகைகளின் பக்கங்கள் திறக்கப்படவேண்டும். அத்தகைய ஒரு வெறி இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வெறி தலைக்கேறும் என்ற நம்பிக்கையிருக்கிறது.