இங்கிலாந்தில் சாதிய ஒடுக்குமுறைக்கெதிர்ப்பு
இந்த ஆண்டு (2013) ஏப்பிரல் மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நாளாக மாறியிருக்கவேண்டிய நாள். அன்று ஆயிரக்கணக்கிற்கு மேற்பட்ட தலித்துகள் இங்கிலாந்துப் பாராளுமன்றம் முன் கூடி நின்றிருந்தனர். நாம் தீண்டத் தகாதவர்கள் இல்லை. உடனடியாக சாதிய ஒடுக்குமுறையை சட்டத்துக்கு புறம்பானதாக்கு என்ற கோசங்களுடன் அவர்கள் கூடியிருந்தனர். இதே சமயம் பாராளுமன்றத்துக்குள் இது பற்றிய விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
சாதி முறை ஒடுக்குமுறைகளை பிரித்தானியச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருவதா? இல்லையா? என்ற விவாதத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பீற்றிக்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்துகொண்டிருந்தனர். முடிவைத் தமக்குச் சாதகமாக எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கில் பாராளுமன்றத்துக்கு வெளியே மக்கள் கூடியிருந்தனர்.
இருப்பினும் பாராளுமன்றம் இச்சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த மறுத்துவிட்டது. 310 உறுப்பினர்கள் எதிர்த்தும் 244 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். ‘ஆதாரங்கள் இல்லை” என்பதே எதிர்வாதத்தை முன்னெடுத்த வலதுசாரிய கன்சவேட்டிவ் கட்சியூம் லிபரல் கட்சியும் தமது நிலைப்பாட்டுக்கு வழங்கிய முக்கிய காரணம்.
இங்கிலாந்தில் நிகழும் சாதிய ஒடுக்குமுறைபற்றி பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாராளுமன்றத்துக்கு வெளியே உயிர்ப்பான ஆதாரங்களாக ஆயிரக்கணக்கான தலித்துகள் நின்றிருந்தனர். இதே நாள் வெளிவந்த பி.பி.சி மற்றும் கார்டியன் செய்திகள் பல்வேறு ஆதாரங்களை எழுத்தாகவூம் ஒலி-ஓளியாகவூம் வெளியிட்டிருந்தன.
(1). சாதிய ஒடுக்குமுறை சார்ந்த வழக்கு பற்றிய விபரம் பெப்பிரவரியில் வெளியாகி இருந்தது. இவை எல்லாவற்றையூம் கண்மூடி மறுத்தபடி ஆதாரம் இல்லை என விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் வலதுசாரிய கன்சவேட்டிவ்-லிபரல் டெமொக்கிரட் கட்சிகளின் எதிர்ப்புக்கு தலைமை தாங்கிய ஜோ சுவின்சன் (Jo Swinson).
சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு
மேற்கு நாடுகளில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்ற வாதம் பெரும்பாலும் ஆதிக்க சாதி-ஆதிக்க வர்க்க பின்னணியில் இருப்பவர்களிடம் இருந்து வருகிறது என்பதை உற்று நோக்குபவர்கள் அவதானிக்க முடியும். தமது அன்றாட வாழ்க்கையில் இக்கொடுமையை எதிர்கொள்ளும் மக்களிடம் இருந்து சாதியத்தின் இருத்தல் பற்றி எந்தச் சந்தேகங்களும் கிடையாது. சாதியம் மங்கிக் கொண்டு போகிறது அதையேன் தூக்கி வைத்து பெரிதுபடுத்துகிறீர்கள் என்று தட்டிக்கழிக்க முயற்சிப்போரும் உண்டு. இவர்களிற் சிலரிடம் உண்மையான நோக்கங்களும் சாதியத்துக்கெதிரான எதிர்ப்பும் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் சாதியக் கொடுமை பற்றியோ அல்லது அது எவ்வளவு தூரம் தெற்காசிய சமூகத்துக்குள் ஊறிக்கிடக்கின்றது என்பது பற்றியோ போதிய அறிதல் இருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட நவ இந்துத்துவ எழுச்சிக்கான அடிப்படை வேலைகளைச் செய்யும் அதிகார சக்திகளின் வாதங்களும் நடவடிக்கைகளுமே பேராபத்தானவையாக இருக்கின்றன. இந்தச் சேவையில் பல ஆதிக்கசாதிப் பேராசிரியர்கள் – பெரும் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் லொபி நடவடிக்கைகளின் பலம் பாராளுமன்றத்துக்குள் வலதுசாரிய உறுப்பினர்கள் மூலம் பலப்பட்டிருப்பது பற்றிய சில விபரங்களை பின்பு பார்ப்போம். சாதியத்தில் இருந்து இந்துத்துவத்தை பிரித்துப் பேசுவதன் மூலம் இந்துத்துவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி வைத்திருப்பது – சாதிய ஒடுக்குமுறைக்கு ஆதாரமில்லை என்ற வாதத்தை பலப்படுத்துவது – என்ற நடவடிக்கைகளுக்கூடாக அவர்கள் நகர்வதை இங்கு குறித்துச் செல்லவேண்டியிருக்கிறது.
பழைய இந்துத்துவம் விழுங்கிக் கக்கும் தொழிலை செய்யும் ஆயிரத்தெட்டு சந்நியாசிகள் தெற்காசியா எங்கும் உலாவுவது – அல்லது மப்பில் இருப்பது – எமக்குத் தெரியும். ஆனால் இதே வேலையைப் பல்கலைக்கழகங்களிற் செய்து பேராசிரியர் என்ற பெயரிலும் சிலர் உலாவி வருகின்றனர். அந்த வகையறாவைச் சேர்ந்த குருக்களில் ஒரு முக்கியமான குரு தான் அரவிந்த் சர்மா (Arvind Sharma) என்ற ஆதிக்கசாதி பேராசிரியர். இந்தியா என்பது இந்துத்துவ நாடு என்றும் – உலக கலாச்சாரத்தில் இந்துத்துவம் பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டதென்றும் பிரச்சாரித்து வருபவர் இவர்.
(2). சாதியம் அழிகிறது என்பதை ‘ஆதாரபூர்வமாக” பேசுபவர்களில் இவரும் ஒருவர். கலப்பு மணத்துக்கு உயர் சாதியினரிடம் இருக்கும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ‘கீழ்” சாதியினருக்கு இல்லை என்பது இவரது வாதம். இவரது வாதங்களை தலைமேற்கொண்டு இயங்குபவர்கள் பலர். இவரது புத்தகத்திற்கு முன்னுரை வழங்கும் அனில் பனோட் (Anil Bhanot) யூ.கே இந்துக் கவூன்சிலின் பொதுக் காரியதரிசியாகவும் இருக்கிறார். புதிய தலைமுறைக்கு சாதி தெரியாது என்று வாதிப்பவர் அனில்.
இந்த பிரித்தானிய இந்துக் கவுன்சில் ஒரு மோசமான அமைப்பு. இதேபோல் -பிரித்தானிய இந்துபோறம் -என்ற இன்னுமொரு இந்துத்துவ அமைப்பும் உண்டு. ஆனால் இந்த இரண்டு அமைப்புகளும் கிட்டத்தட்ட ஓரே வேலைகளை செய்வது மட்டுமின்றி இவற்றுக்கிடையில் நெருங்கிய தொடர்புகளும் உண்டு. அதனால் இந்து கவுன்சில் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுவோம். மில்லியன் இந்துக்களைத் தாம் பிரதிநிதிப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு இவ்வமைப்பு இச்சட்டத் திருத்தத்துக்கு எதிராக தனது முழுப் பலத்தையும் திரட்டியிருந்தது. பாராளுமன்ற விவாதம் பற்றி இவர்கள் விட்டிருந்த பத்திரிகையாளர் அறிக்கையில் ‘நவீன இந்துக்கள் ஒருவர் எச்சாதியில் இருந்து வருகிறார் என்பதில் அக்கறையற்றவர்கள்” என்று வாதிட்டிருந்தார்கள்.
(3). எவ்வித ஆய்வோ, ஆலோசனையோ இன்றி இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதால் தான் ஆதங்கமடைந்துள்ளதாக அறிவித்துக்கொண்டார் அனில். டிசம்பர் 2010ல் வந்த அரச சார் ஆய்வு நிறுவனம் நீசர் (NIESR- ) வெளியிட்ட அறிக்கையையூம் அவர்கள் ஆதாரபூர்வமற்றவை என்று தட்டிக்கழித்தனர். ஆனால் அந்த ஆய்வு அனிலுக்கும் அடிக்காமல் ஒரு அடி அடித்திருந்தது அவருக்கு உறைத்திருக்க வேண்டும். இவர்களின் சாதிய கொடுமைக்கு ஆதாரமில்லை என்ற விதண்டாவாதத்தை அவ்வறிக்கை ஆதாரபூர்வமாக மறுத்திருந்தது.
இங்கிலாந்தில் சாதிய ஒடுக்குமுறை
2010ல் வெளிவந்த ஆய்வு
(4) பாடசாலைகள், வேலைத்தளங்கள், வழிபாட்டிடங்கள், பொதுச்சேவையிடங்கள் என்று பல்வேறு இடங்களில் சாதிய ஒடுக்குமுறை இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது.
சிறுவர்கள் எவ்வாறு சாதியம் சார்ந்து நிந்தைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பதற்கு இவ்வறிக்கையில் பல ஆதாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் விடுதல் -மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றை அறிக்கை சுட்டியிருந்தது. சாதியம் காரணமாக ஒரு மாணவர் பாடசாலையில் அனுமதிக்கப்படாததையும் அறிக்கை சுட்டியிருந்தது.
ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு சில இடங்களில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது தொடங்கி அவர்கள் எவ்வாறு வேலையிடங்களில் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதற்குப் பல ஆதாரங்களை உதாரணமாக அவ்வறிக்கை காட்டியிருந்தது. தேவைக்கேற்ப விடுமுறை எடுக்க முடியாத நிலை, வேலையுயர்வு பெறுவது தடுக்கப்படுவது, குறைந்த அந்தஸ்துள்ள வேலைக்குத் தள்ளப்படுவது, வேலையில் இருந்து நிறுத்தப்படுவது என பல ஆதாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. சமூக சேவை சார்ந்த துறையில் இதன் கோரம் இலகுவாக வெளிப்படுவதையும் அறிக்கை சுட்டியிருந்தது. அரசியல் உட்பட பல துறைகளில் இருக்கும் பல்வேறு ஒடுக்குமுறைகளை இவ்வறிக்கை சுட்டியிருந்தது. சுருக்கம் கருதி இங்கு முழுவிபரங்களைத் தவிர்த்துக்கொள்கிறோம். ஆனால் அவ்வறிக்கையை இணையத்தில் அனைவரும் இலவசமாகப் படித்துக்கொள்ள முடியும். இருப்பினும் ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சவூத்கோல் கோயிலில் தனது கை பட்டுவிட்டது என்பதற்காகக் குடிக்கும் பாத்திரத்தை உடனடியாகக் கழுவுவதற்கு கோயிற்காரர் அனுப்பியதை பற்றி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இது சாதி சம்மந்தப்படாதது நாம் சாதாரணமாக எல்லாப் பாத்திரங்களையும் சுத்தம் செய்வதுண்டு என கோயில் உரிமையாளர்களும் பூசாரிகளும் வாதிடலாம். ஆனால் அதன் தாக்கத்தை அனுபவிக்கும் ஒடுக்கப்பட்டோர் அதை இலகுவில் தட்டிக்கழித்துச் செல்ல முடியாது. இங்கிலாந்தில் இருக்கும் அனைத்து இந்துக்கோயில்களிலும் ஏதோ ஒரு வகையில் சாதியம் பேணப்படுகிறது.
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உட்படுபவர்கள் அதை வெளியிட வழியின்றி திணறும் நிலை – அவர்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய இடமின்மை – இதனால் அவர்கள் ஒடுக்குதலை மௌனமாக ஏற்றுக்கொள்ளப் பணிக்கப்பட்டிருந்தமை பற்றியும் அறிக்கை சுட்டியிருக்கிறது.
இது தவிர இந்த ஆண்டு பெப்பிரவரி மாதம் கலப்பு மணம் செய்த தம்பதிகள் எவ்வாறு சாதிய ஒடுக்குமுறைக்குள்ளானார்கள் என்ற செய்தியைக் கார்டியன் பத்திரிகை வெளியிட்டிருந்தது.
(5). விஜய் பேக்ராஜ் (Vijay Begraj) தான் வேலையிடத்தில் சாதிய முறையால் துன்பத்துக்குள்ளாக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நாச வேலைகள் மூலமாக துhக்கியெறியப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட போலீஸ் உத்தியோகத்தரை வைத்து இவ்வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிபதிக்கு செய்திகள் வழங்கியதன் மூலமாக வழக்குத் தள்ளிப்போட வைக்கப்பட்டது. இன்று வரை இத்தவறைச் செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வழக்கில் சாட்சி சொன்னவர் வீட்டிற்கு கல்லெறி விழுந்ததும் நிகழ்ந்தது.
இப்படியிருக்க ஆதாரம் போதாது என்று வாதிடுகிறது இந்துக் கவுண்சில். அறிக்கையிற் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் நீண்டகாலத்துக்கு முன்பு நடந்தவை என்றும் – ஆதாரம் வழங்கியவர்களை பகுதி பகுதியாகப் பிரித்து அவர்களின் வாதங்கள் சாதி சார்ந்ததல்ல என்றும் வாதிட்டிருந்தது அவர்களின் அறிக்கை. மேலும் ஆதாரம் வழங்கிய ஒருவர் தனது வர்க்க வித்தியாசத்தை சாதி வித்தியாசமாகக் குழப்பிக்கொண்டுள்ளார் என்றும் சாடியிருந்தது. ஆக மொத்தத்தில் – நாம் மில்லியன் இந்துக்களின் பிரதி நிதியாக சாதியம் இல்லை என்று சொல்கிறௌம் அதனால் இத்திருத்தச் சட்டம் வேண்டாம் – என்பது இந்து கவுன்சிலின் பிரச்சாரத்தின் சாரமாக இருந்தது.
ஒரு மில்லியன் இந்துக்களைப் பிரதிநிதிப்படுத்துவதாக விடும் அவர்களின் கட்டுக்கதையை அவர்கள் 2012ல் நடத்திய வருடாந்த பொதுக்கூட்டம் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது.
(6). 50 பேர்களுக்கு மேல் பங்குபற்றாத இக்கூட்டம் இந்துசமய ஆதிக்கசாதிப் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு இங்கிலாந்தில் இந்துக் கோயில்களை வளர்ப்பதற்கு முக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு முடிவடைந்தது. இந்த இந்துக் கவுன்சிலை நடத்துபவர்களிற் பெரும்பான்மையானவர்கள் ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள். இதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜ் பண்டிட் சர்மா (Dr Raj Pandit Sharma) சாதி முறை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
(7) இந்த அறிக்கை பற்றி சில புள்ளிகளைப் பின்பு பார்க்கலாம். ஆனால் இந்தியாவைப் பிடித்த வெளிநாட்டவர்களால்தான் சாதியம் தக்கவைக்கப்படுகிறது என்றும் இஸ்லாம் முதலான மத மாற்றக் காரணங்களால் இறுகியதே அன்றி சாதியம் இந்துத்துவ கருத்தாடல் இல்லை என்றும் அவர் அறிக்கை வாதிடுகிறது என்பதை மட்டும் இங்கு குறிப்போம். இந்துக் கவுன்சில் இந்து மதத்தை வளர்க்கும் சேவை மட்டும் செய்வதில்லை என்பதைக் கவனிக்க.
சாதிய ஒடுக்குதலுடன் இருக்கும் வர்க்கத் தொடர்பு
சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள். புதிய லேபர் கட்சி என்ற பெயரில் பழைய தொழிலாளர் கட்சி கொள்கைள் அனைத்தையும் மூட்டை கட்டி எறிந்துவிட்டு மோசமான வலுதுசாரி கட்சியாக தொழிலாளர் கட்சியை மாற்றிய பெருமை முன்னாள் பிரதமர் டோனி பிளேயரைச் சாரும். புதிய தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது தொடங்கி கல்வியைத் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. டோனி பிளேயருக்கும் ஜோர்ஜ்புஷ்க்கும் இருந்த நெருக்கம் – அவர்களிடம் மறைந்துகிடந்து மத அடிப்படைவாதத் தன்மைகள் இன்று உலகத்துக்கு வெளிச்சம். அவர்களின் கொள்கைகளுக்கு ஆயிரக்கணக்கில் ஈராக்-ஆப்கானிஸ்தான் மக்கள் பலியானதும் தொpயூம். அவர்கள் தமது மதஞ்சார் முன்னெடுப்புகளை நோரிடையாக ஒருபோதும் செய்யவில்லை. எல்லாக் கொள்கைகளிலும் அதை அவர்கள் மறைமுகமாகப் புகுத்தினர்.
டோனி பிளேயரின் ஆட்சியின் கீழ் சமயம் சார் பாடசாலைகளின் தொகை வேகமாக அதிகரித்தது.
(8). கிறித்தவப் பாடசாலைகள் மட்டுமின்றி இஸ்லாமிய- சீக்கிய- இந்துத்துவ பாடசாலைகளும் திறக்கப்பட்டன. எல்லாச் மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது – கிறித்தவர்கள் மட்டும் பாடசாலை நடத்தும் உரிமை வைத்திருப்பது தவறு என்று சிலர் வாதிக்கலாம். கிறித்தவப் பாடசாலை வரலாறு பழையது. இருப்பினும் தேசியப் பணம் இப்பாடசாலைகளுக்கு முற்றாக வழங்கப்பட்ட வரலாறு அண்மைக்கால வரலாறே. தவிர இதற்குப் பின்னால் டோனி பிளேயர் அரசின்இ தனியார் மயப்படுத்தும் கொள்கையை வளர்க்கும் நோக்கிருப்பதையும் அவதானிக்க. பாடசாலைகளை ஏலத்துக்கு விடத் தொடங்குவதற்கு மதப் பாடசாலைகளை உருவாக்குவது ஒரு நல்ல முதற்படி. பள்ளி வாசல்கள் மற்றும் கோயில்கள் என்று பணம் கொழுத்த பல வழிபாட்டுத் தளங்கள் இருப்பதும் தெரிந்ததே. தவிர இந்த வழிபாட்டுத் தளங்கள் சார்ந்தவர்களின் ஆதரவை வெல்வதன் மூலம்இ தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக வரும் எதிர்ப்பையும் கட்டுப்படுத்தலாம் என்பதை சரியாக அனுமானித்தே அரசு இயங்கியது.
இம்முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது இந்துப் பாடசாலைதான் ‘கிருஸ்ணா-அவாந்தி பிறைமறி ‘(Krishna-Avanti Primary). பிரச்சார நடவடிக்கையாக மட்டும் மற்றைய மதத்தோரும் படிக்கலாம் என்று கூறும் இந்த முழு இந்துப்பாடசாலை சமஸ்கிருதம் போதிப்பதை முக்கியமாகக் கருதுகிறது. அதற்கு வேடிக்கையான காரணமும் சொல்கிறார்கள். ‘கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளிற் தோன்றிய அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து வருபவை. தெய்வீகத்தன்மை வாய்ந்தது. மாசு மறுவற்ற இலக்கணம் கொண்டது. உயரிய கிழக்குப் பிரதிகளான பகவத்கீதை போன்றவற்றை அணுக வழியேற்படுத்துகிறது.” என்று விபரிக்கிறது இப்பாடசாலை. எந்த ஆய்வின் அடிப்படையில் பேசுவதாகவும் -ஆதாரங்களோடு பேசுவதாகவும் அவர்கள் பாசாங்கு காட்டவேண்டிய தேவைகூட இல்லை. ஆதாரமாக விக்கிப்பீடியா தொடுப்பொன்றை நீங்கள் பார்க்கலாம் – அவ்வளவு தான்! மொழியின் அடிப்படையை படிப்பதன் மூலம் குழந்தைகள் பின்பு பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வல்லமை பெறுகிறார்கள் என்றொரு பினாத்தல் வேறு! சின்னஞ்சிறுசுகளின் மண்டைக்குள் என்ன நஞ்சை இவர்கள் ஊற்றி வளர்க்க விரும்புகிறார்கள் என்று பாருங்கள். சமஸ்கிருதத்தில் இருக்கும் நியூட்டனையா அவர்கள் படிப்பிக்கிறார்கள். சாதிய முறை போதிக்கும் மதச்சடங்கு பிரதிகள் மூலம் தானே இவர்கள் சமஸ்கிருதத்தைக் காப்பாற்ற முடியும். சாதி புதிய தலைமுறைக்குள் இருக்காது என்று கதை விடுபவர்கள் இந்த படிப்பித்தல் முறை பற்றிக் கேள்வி கேட்பதில்லை.
இந்த இந்துப் பாடசாலைகள் எதுவும் தலித்துகளால் நடத்தப்படுவதில்லை. அங்கு தலித்துகளின் கொண்டாட்டங்கள் அவர்கள் சமய சடங்கு முறைகள் பற்றியும் போதிக்கப்படுவதில்லை. மாறாக சாதி காப்பாற்றும் சனாதன முறைகள் மறைமுகமாக போதிக்கப்படுகின்றன. இந்தப் பாடசாலைகளில் ஏழை இந்துக்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஏனெனில் இவை தனியார் கல்விக்கூடங்களாக இயங்குகின்றன. இங்கிலாந்தில் புழக்கத்தில் இருக்கும் இலவச – பொதுப் பாடசாலைகள் என்ற சொல்லாடல்கள் குழப்பம் தர வல்லன. இந்தியாவில் இலங்கையில் பொதுப் பாடசாலை அல்லது தேசிய பாடசாலை என்றால் அரச செலவில் நடக்கும் பாடசாலைகள் என்று அர்த்தம். இந்திய அரசு பாடசாலைகளுக்கு செலவு செய்யும் பணம் குறைவு என்பதால் மிக மோசமான வசதியுடைய பாடசாலைகளாக இருக்கின்றன அரச பாடசாலைகள். அதனால் தனியார் பாடசாலைகள் பெருகிப் புழுத்து நிற்கின்றன. ஆதிக்கசாதி – ஆதிக்க வர்க்கப் பெற்றோரின் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வசதிகளும் ஏழை ஒடுக்கப்படும் சாதி மக்களுக்கு படிப்பு வசதிகளின் குறைபாடும் இவ்வாறுதான் ஏற்படுகிறது. இலங்கையில் கல்வி தேசியமயமாக்கப்பட்டதால் அரச பாடசாலைகள் சிறந்த பாடசாலைகளாக இருக்கின்றன. இதனாற்தான் ஒடுக்கப்பட்டோரும் ஓரளவாவது கல்வி வசதியை அங்கு பெறக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும் அங்கும் பல்வேறு வகையில் வர்க்க சாதிய ஒடுக்குதலை செய்யும் உயர் வர்க்க பாடசாலைகளும் அரச பணத்தில் இயங்கும் மதப் பாடசாலைகளும் உண்டு. அதேபோல் அரச பாடசாலைகள் என்று இங்கிலாந்திற் சொல்லப்படுவன எல்லாம் மிகவும் பணக்காரப் பாடசாலைகள். இங்கு யாரும் படிக்கலாம் என்ற ஒரு பம்மாத்தை காட்ட பாவிக்கும் சொல் தான் -பொதுப் பாடசாலை- என்ற பதம். அரச அல்லது பொதுப் பாடசாலையான ஈட்டன் பாடசாலையில் இருந்துதான் வலதுசாரி இங்கிலாந்து ஆளும் வர்க்கம் உருவாக்கப்படுகிறது. இங்கு ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் அது ஒரு பெரும் பகிடிக்கதை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். அதே போல் தான் இந்த மதப்பாடசாலைகள். இவை தனியார் மயமாக்கத்துடனும் உயர் வர்க்க உறவுகளைப் பேணுவதும் சம்மந்தப்பட்டவை. சீக்கியர்கள் பலர் உயர்வர்க்கத்துடன் இணைந்தவர்கள். அவர்களின் ஆதரவு வலதுசாரியான கன்சவேட்டிவ் கட்சிக்குண்டு. அதேபோல் உயர் வர்க்க பல இந்துக்கள் வலதுசாரிய அரசியலுக்குள் இருப்பவர்கள். இவர்களிற் பலர் இந்துத்துவ வாதிகளாகவும் இருக்கிறார்கள். மூன்று முக்கிய அரசியற் கட்சிகளும் வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பண அன்பளிப்புக்குமாக இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடத் தயாராக இருக்கின்றன. ஆக இவர்களது லொபி பாராளுமன்ற கட்சிகளுக்குள் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. நடந்த விவாதம் பற்றிய சில நுணுக்கமான விசயங்களை அவதானிப்போமானால் இது தெளிவாகும்.
பாராளுமன்ற விவாதம்.
அரசின் பண ஆதரவோடு இயங்கும் சமத்துவ-மனித உரிமை அமைப்புத் தான் நாம் முன்பு குறிப்பிட்டிருந்த 2010ம் ஆண்டு ஆய்வைச் செய்திருந்தது (நீசர் அறிக்கை). அவர்கள் சாதி ஒடுக்குமுறை பற்றிய ஆய்வுகள் நடவடிக்கைகளுக்கு செய்து வந்த செலவுகளை தற்போதைய அரசு நிறுத்திவிட்டிருக்கிறது. சமத்துவ கமிசனுக்கான பண ஒதுக்குதலில் 60வீத வெட்டுதலைச் செய்திருக்கிறது அரசு. இந்த இலட்சணத்தில் எவ்வாறு அவர்கள் சாதி ஒடுக்குதலை எதிர்க்க பண ஒதுக்குதல் செய்யப் போகிறார்கள்?
பாராளுமன்றத்தில் விவாதம் நடப்பதற்கு முதலே சில பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையாலும் – வெளியே நுhற்றுக்கணக்கில் ஒடுக்கப்படுவோர் கூடிக் கொண்டிருந்தமையாலும் உறுப்பினர்கள் தமது பேச்சை அளந்து பேசவேண்டியிருந்தது. மிக மோசமான வலதுசாரிய லிபரல் டெமொக்கிரட் கட்சி மந்திரியான ஜோ சிம்சன் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை என அரசு நினைக்கிறது என்று சொல்லி விவாதத்தை தொடங்கி வைத்தார்.
சாதி ஒடுக்குமுறை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களில் மட்டுமே நிலவி வருகிறது – இது முழுச் சமூகத்தினதும் பிரச்சினையில்லை. ஆகையால் சட்டம் கொண்டுவரத்தேவையில்லை என்று கேவலமான வாதத்தை வைத்த அவர் தமக்கு பல இந்திய சமூக அமைப்புக்களின் ஆதரவு உண்டு என்று சொல்லி அந்த அமைப்புகளை வரிசைப்படுத்தினார். அவர் வரிசைப்படுத்திய அமைப்புக்களைப் பாருங்கள்.
1. குஜாராத் சூரிய சாஸ்திரிய மகா சபா
2. சீக்கியர் கவூன்சில்.
3. தேசிய இந்து மாணவர் பேரவை.
4. தேசிய இந்துக் கோயில்களின் கூட்டமைப்பு
5. ரீத்தா டிரஸ்ட்
6. பிரித்தானிய இந்து போறம்.
7. விஸ்வ கிந்து பாpசத்
8. இந்து சுவாயம்சேவாக் சங்கம்
இவை எதுவுமே தலித்துகள் சார் அமைப்புகள் அல்ல. மாறாக மிக மோசமாக இந்துத்துவம் காப்பாற்றும் அமைப்புக்கள். இந்த அமைப்புகள் தான் சாதியத்தை தூண்டும் அமைப்புகளாக இருக்கின்றன என்பதை ஆன்ரியூ ஸடனல் (Andrew Stunell) உம் – பல சனாதனிகள் தான் 1933ல் மகாத்மா காந்தி சாதியத்துக்கு எதிராக எடுத்த முயற்சியை முறியடித்தனர் என்பதை ஜோன் மக்டொனால்டும் (John McDonnell) சுட்டிக் காட்டிய பிறகு தமக்கு ‘கீழ்” சாதி அமைப்புக்களின் ஆதரவும் இருக்கிறது என்றார் அமைச்சர். அதற்கு ஆதாரமாக அவர் சொன்ன அமைப்பின் பெயர் -குஜாராத் சூரிய மகா சபா! குஜாராத் சமூகத்துக்குள் மட்டும் இயங்கும் இவ்வமைப்பைத் தலித் அமைப்பு என்றோ அல்லது கீழ் சாதி அமைப்பு என்றோ அமைச்சர் முத்திரை குத்துவதை அவர்கள் ஏற்கப்போவதில்லை.
கீழ் சாதி அதாவது லோ காஸ்ட் என்ற பதத்தையே அமைச்சரும் பல வலதுசாரிகளும் தொடர்ந்து பாவித்து வருவதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தலித் என்ற சொல்லை தம்மைக் குறிக்க பாவிக்க வேண்டாம் என சில ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் தங்களை கீழ் சாதி என்று அழைக்கும் படி கேட்கவில்லை. அமைச்சரினதும் அவர் பிரதிநிதிப்படுத்தும் அரசினதும் அறியாமை இவ்வாறு பல தளங்களில் வெளியாவதைக் காணலாம்.
தவிர தமது வலது சாரிய அரசு இந்துத்துவ லொபிக்கு கட்டுப்பட்டு நிற்பதை தெட்டத் தெளிவாக்கினார் அமைச்சர். இதை எதிர்ப்பதாக பாவனை செய்தது எதிர்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைமை. தொழிலாளர் கட்சிக்குள் இன்னும் எஞ்சியிருக்கும் இடதுசாரிய உறுப்பினர்கள் அரச பரிந்துரையை எதிர்த்தனர். இது மட்டுமின்றி ஏராளான தலித்துகள் வாழும் தொகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு கட்சி சார் உறுப்பினர்களும் எதிர்த்தனர். இந்நிலையிற்தான் தொழிலாளர் கட்சித் தலைமை தமது எதிர்ப்பை ஏனோதானோ என முன்வைத்தது. இங்கிலாந்து ஓபாமா என்று சில ஊடகங்களால் வர்ணிக்கப்படும் சுக்கா உமுனா (Chuka Umunna) தொழிலாளர் கட்சி சார்பில் பேசும்போது அரசின் குற்றச் சாட்டுகளுக்கு சரியான எந்த எதிர்ப்பையும் வைக்கவில்லை. உமுனா எந்த சிக்கலான கேள்விகளையும் அரசு நோக்கி நகர்த்தவில்லை. ஆனால் அரசுக்கு மேலும் பலம் சேர்க்க நீண்ட உரையைச் செய்தார் அலோக் சர்மா (Alok sharma).
அலோக் சர்மா மிக மோசமான வலதுசாரி. பாடசாலைகளைத் தனியார் மயமாக்குவது உட்பட பல்வேறு பொதுச் சேவைகள் மேலான தாக்குதலுக்கு நுhறுவீத ஆதரவை வழங்கி வருபவர். ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை மதிக்கும் சட்டங்கள் கொண்டுவருவதை எதிர்த்தவர். மாணவர்களின் கட்டண உயர்வு மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் முதலானவற்றுக்கு ஆதரவை வழங்கி வருபவர். இவர் இச்சட்டம் கொண்டுவருவதற்கு ஆதாரங்கள் போதாது என்பதை அடித்துப் பேசினார். நீசர் அறிக்கை பழைய சம்பவங்களைத் தொகுத்துள்ளது – அவை புதிய ஓடுக்குமுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். அவர் வாதிட்ட புள்ளிகள் அப்படியே இந்து கவுன்சில்.-இந்து போறத்தின் பத்திரிகை அறிக்கையை ஒத்திருந்ததைப் பார்க்கலாம். தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் ஒரு சாதி ஒடுக்குமுறைகூட முறையீடு செய்யப்படவில்லை என்றார்.
ஒடுக்குதல் எங்கு நடக்கிறது என்பதல்ல முக்கியம். எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் – யார் ஒருவருக்கு நடந்தாலும் – அது தடுக்கப்பட வேண்டியது தானே என தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுட்டிக் காட்டியதற்கு எல்லா ஒடுக்குமுறைகளையூம் அரசு தடுக்க முடியாது என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அலோக் சர்மா. வர்க்க ஒடுக்குமுறை இருக்கிறது அதற்கெதிராகவும் அரசு சட்டம் இயற்ற முடியுமா என கேட்டு மடக்கினார்! நிற ரீதியான ஒடுக்குதல்கூட ஒட்டுமொத்த சமூகமும் அனுபவிக்கும் ஒடுக்குதல் அல்ல. ஆனால் அது அனுமதிக்கப்படமுடியாதது. 70களில் நிற ஒடுக்குதலுக்கு எதிராக சட்டம் கொண்டுவர முதல் நிற ஒடுக்குதல் பற்றிய உத்தியோக பூர்வ முறையீடுகள் மிகக் குறைந்தளவிலேயே நிகழ்ந்ததும் சுட்டிக் காட்டப் பட்டது. அமைச்சர் இது இந்து சமூகப் பிரச்சினை – எங்கட பிரச்சினையில்லை என்று ஒதுக்க முயன்றதை சர்மா ஒரு படி மேலே தூக்கி இந்த ஒடுக்குமுறைக்கு பாரிகாரம் செய்யமுடியாது என்று மறுத்தார். சேவைத்துறையில் வேலை செய்யும் சில உயர் சாதியினர் ஒடுக்கப்படும் சாதியினருக்கு பராமரிப்புச் செய்ய மறுப்பது பற்றி கலிட் மகமூட் கேட்டபோது போதுமான ஆதாரம் இல்லாமல் சட்டமியற்ற முடியாது என புலம்பினார் சர்மா. நீசர் அறிக்கையில் இருக்கும் ஆதாரங்களைப் பார்த்து அழுதுவிட்டேன் என சர்மாவின் கட்சிக்காரரான ரிச்சர்ட் புளர் (Richard Fuller) பதில் சொன்னார். அவரது தொகுதியில் ஏராளமான ஒடுக்கப்படும் சாதியினர் இருப்பது மட்டுமின்றி அவர்கள் சட்டம் கொண்டுவருவதற்கு ஆதரவாக ரிச்சர்ட்டை லொபி செய்திருந்தனர். 300 பேர் கையெழுத்திட்ட கோரிக்கையையும் வழங்கியிருந்தனர். தனது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ள ரிச்சர்ட் அனைத்துக் கட்சிகளையும் ஒரு வாங்கு வாங்கிவிட்டு உட்கார்ந்தார்.
சாதி ஒடுக்குமுறை இந்து சமயத்துக்குள் மட்டுமின்றி தெற்காசிய சமூகத்துக்குள் அனைத்து மதத்துக்குள்ளும் இருக்கிறது என்பதையூம் – சாதி இருக்கிறதா இல்லையா என்பது கலியாண வீட்டில் தொpயூம் என்றும் – தனது புள்ளிகளை அழுத்தி வைத்தார் இடதுசாரி உறுப்பினரான ஜெரமி கோபின் (Jeremy Corbyn). இதற்கு முன்பு சட்டம் கொண்டுவர அரசு பஞ்சிப்பட்டபோது ஆய்வைச் செய்யச் சொல்லி ஏற்க வைத்தவர் இன்னுமொரு இடதுசாரியான ஜோன் மக்டொனால்ட். ஆய்வின் ஆதாரங்களை முன்வைத்தால் சட்டமியற்றுவதாக முன்பு அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. மூன்று கட்சித் தலைமைகளும் சட்டமியற்றுவதற்கு முன்பு எதிர்ப்புத் தொpவித்திருந்தமையால் தான் தான் ஆய்வைக் கோரியதையூம் அதனடிப்படையில் சட்டமியற்றக்கோரியதையூம் பகிரங்கப்படுத்தினார் ஜோன் மக்டொனால்ட். ஆதாரங்கள் இருக்கிறது. இன்றே சட்டமியற்ற அனுமதி வழங்கப்படவேண்டும் – ஆனால் மீண்டும் வீண்கதை பேச்சு நடத்தி அரசு தட்டிக்கழிக்கிறது என்ற ஆதங்கத்தை அவர் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
இப்போதைக்கு சட்டம் கொண்டுவரப்போவதில்லை என்ற உறுதிமொழியை அரசிடம் அலோக் சர்மா கேட்டிருந்தார். தான் அவருக்கு அந்த உறுதிமொழியை வழங்குகிறேன் என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார் ஜோ சுவான்சன். பின்பு 310 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மறுப்பின் மூலம்
மிகவும் போரடிக்கும் இந்த விவாதத்தை மேலே வரைந்திருந்தமைக்கு ஒரு காரணமுண்டு. சாதிய ஓடுக்குதலை காலா காலத்துக்கு தக்கவைக்கும் நகர்வுகள் எப்படி தற்சமயம் புதிய வடிவங்கள் எடுக்கின்றன என்பதை நாம் அவதானிக்க வேண்டும். முதலாளித்துவ சனநாயக புரட்சி நடந்ததாக சொல்லப்படும் இங்கிலாந்தில் – சனநாயகத்துக்கு உதாரணமாக காட்டப்படும் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் நடந்த வாதம் இது. முதலாளித்துவ சனநாயகத்தின் எல்லைகள் – மனித உரிமைகளை முழுமையாக நிவர்த்திக்க முடியாமை – என பல புள்ளிகளை இவை தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறு முதலாளித்துவக் கட்டுமானம் பழைய நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்கள் உட்பட பல்வேறு பிற்போக்குத்தனங்களையும் தனக்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தக்கவைத்துக் கொள்கிறது என்பதையும் நீங்கள் இந்த உதாரணத்தில் பார்க்கலாம்.
சாதிய ஒடுக்குதல் இருக்கிறதா? இல்லையா? என்பதோ அல்லது சாதிய ஒடுக்குதல் சாரியா? பிழையா? என்பதல்ல இன்றைய முக்கிய பிரச்சனை. சாதிய ஒடுக்குமுறை இருக்கிறது அது அநியாயம் என்பது இன்று பரந்த உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அறிவற்றவர்கள் – சமூகத்தின் எதிரிகள் என்று நோக்கப்பட்டு ஒதுக்கப்படுவர் என்பதால் சமூகம் சார்ந்து இயங்க நினைக்கும் அரசியல்வாதிகள் – கலைஞர்கள் – வியாபாரிகள் – அறிஞர்கள் என்று யாரும் இத்தவறைச் செய்து தப்பிவிட முடியாது. நிறத் துவேஷக் கருத்துக்களைத் துப்பி – அல்லது நிறத்துவேஷ வார்த்தைகளில் திட்டுவது இன்று எவ்வாறு பொது வழக்கிற்குப் புறம்பானதாக மாறியிருக்கிறதோ அதேபோல் சாதிய ஒடுக்குதலும் கேவலமான செயல் என்பது பொது உண்மையாகி வருகிறது. ஆனால் நிற ஒடுக்குதலுக்கு எதிரான இந்தப் பொதுஅறிவோ – அல்லது சட்டங்களோ நிற ஒடுக்குமுறையை இல்லாமற் செய்து விட்டனவா? அதி வலதுசாரிய துவேசக் கட்சிகள் தாண்டி நிறத்துவேஷம் இல்லை என்று சொல்லிவிட முடியூமா? ஆக நிறத்துவேஷம் சமூகத்தில் எவ்வாறு தலையெடுக்கிறது – அதை முற்றாக இல்லாமற் செய்வதற்கான வழி என்ன என்ற கேள்விகள் எமக்கெழுவது நியாயமானதே. சாதிய ஒடுக்குதலும் நிறம் சார் ஒடுக்குதல் எதிர்கொள்ளும் பிரச்சினையை எதிர்கொண்டு நிற்கிறது.
மனித உரிமையைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அப்பால் மேலோங்கியிருக்கும் நலன் என்ன? ஆதிக்க சாதி இந்துக்களின் நலன் எவ்வாறு ஆதிக்க வர்க்க கட்சித் தலைமைகள் ஊடாக வெளியாகிறது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். ஒடுக்கப்படும் சாதியினர் பலர் வர்க்க ரீதியில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் வர்க்க நலன் தனிநபர்கள் மூலமாக மட்டும் இயங்குவதில்லை. வலதுசாரிய கட்சிகள் சார்ந்த இந்துக்களிற் ‘பெரும்பான்மையினர்” உயர் சாதியைச் சேர்ந்தவர்களாகவூம் இருக்கிறார்கள்.
ஆதிக்க சாதியூம் ஆதிக்க வர்க்கமும் ஒன்றிணையூம் தளத்தில் அவர்களுக்கு எதிரான தலித்துகளின் போராட்டமும் கடினமாகிறது. பெரும்பான்மை தலித்துகள் ஆதிக்க வர்க்கத்தினராக இருப்பின் விவாதம் வேறு மாதிரி இருந்திருக்கும். இருப்பினும் போராட்டத்தின் பலத்தைப் பொறுத்தே இறுதி விளைவு தீர்மானிக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டோரின் தொடர் போராட்டம் சாதியத்துக்கு எதிரான சட்டத் திருத்தத்தை விரைவில் கொண்டுவரும் என்பதில் ஜயமில்லை. ஆனால் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு ஓடுக்குதல் அழிந்துவிடும் என்ற கனவு நமக்கில்லை. சட்டம் கொண்டுவரப்படுவது குற்றத்தை மக்கள் வெளிப்படுத்த ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. சாதிய ஒடுக்குதல் நீதியற்றது என்ற பொது உண்மையை வலுப்படுத்துகிறது. இந்த அர்த்தத்தில் மட்டுமே சட்டத்துக்கு நமது ஆதரவு. பேக்ராஜின் வழக்கு எவ்வாறு திட்டமிட்ட சதி மூலம் தள்ளிப்போட வைக்கப்பட்டது என்றும் – அதற்கு எவ்வாறு காவற்துறை ஆதரவூ இருந்தது என்றும் நாம் முன்பு பார்த்தோம். இந்த வழக்கில் சாட்சி சொன்ன டாவின்டர் பிரசாத் வீட்டிற்கு கல்லெறியப்பட்டது பற்றி கேட்பார் இல்லை .
(9). அதிகார சக்திகளின் நடவடிக்கைகள் போராட்டங்கள் மூலம் மட்டுப்படுத்தப்படலாமே அன்றி அதிகாரத்தின் இயற்தன்மையில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது. மட்டுப்படுத்தல் தீர்வல்ல. நாம் தீர்வை நோக்கிச் சிந்திப்பதானால் அதிகாரத்தின் பலத்தை உடைத்தல் பற்றியும் சிந்திக்கவேண்டியது கட்டாயமாக இருக்கிறது.
வர்க்க ஒடுக்குதலை சாதிய ஒடுக்குதலாக குழப்பிக்கொள்கிறார்கள் என்ற ஓலம் ஆதிக்கசாதி இந்துக்களிடம் இருந்து வருவதை நாம் தற்போது அவதானிக்கலாம். டெல்லியில் ஏழைப் பிராமணர்கள்தான் கக்கூசு கழுவுகிறார்கள் என்று அவர்கள் எழுதுகிறார்கள். இந்திய பிராமணர்கள் மத்தியில் இருக்கும் வறுமை மற்றய சமூகங்களின் மத்தியில் இருக்கும் வறுமையிலும் 10 வீதம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு பொய்யையும் ஆதாரமில்லாமல் எழுதுகிறார்கள் ராஜ் பண்டிட் சர்மா போன்றவர்கள். இவர்களுக்கு எப்போது வந்தது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் மேலான கரிசனை என கேட்கலாம். உண்மையில் ஏழைகள் மேலான கரிசனையில் இருந்து எழுவதல்ல இந்த காரணங்கள். அவர்கள் உடனடியாக வைக்கும் அடுத்த காரணம் அவர்களின் மறைமுக நோக்கத்தை வெளிக்காட்டி விடுகிறது. இந்திய இட ஒதுக்கீட்டு முறையால் பிராமணர்கள் பின தள்ளப்படுகிறார்கள் – வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள் – வேலைவாய்பிழக்கிறார்கள் -என்று விரிகின்றன அவர்கள் கரிசனைகள். வர்க்க ஒடுக்குமுறையை தீர்க்க இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை – சட்டங்கள் இயற்றப்படுவதில்லை – ஆக சாதிய ஒடுக்குமுறைக்கு மட்டுமேன் அந்த வேலைகள் என்று வாதங்களாகவும் விரிகிறது.
அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு ‘கெட்டித்தனமான” வாதம்! உலகெங்கும் அதிகார வர்க்கங்கள் உயர்வர்க்கத்தின் சேவகர்கள். அந்த அதிகாரங்களோடு இணைந்து உயிர்ப்படைவது எல்லா மதங்களும் முன்னெடுக்கும் டெக்னிக். இந்துமதம் இந்திய அரசோடு இணைந்தியங்குவது வெற்றிகரமாக நிகழந்துகொண்டிருக்கிறது. அதன் உச்சக்கட்டத்தை மோடி அரசாட்சியில் சந்திக்கலாம் என்று பலர் எதிர்வு கூறுகின்றனர். சாதிய முறைக்கெதிரான எதிர்ப்பை வர்க்கத்துக்கெதிரான எதிர்ப்பாக திருப்பிக் காட்டுவதன் மூலம் அதிகார வர்க்க ஆதரவைத் திரட்டுவதுதான் இந்த மொத்த வாதங்களின் மூலம். இந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு அதிகார சக்திகளை மிரட்டி தமது நலனுக்கு சேவை செய்ய தூண்டுவதே இந்துத் தலைமைகளின் அவா. இதற்காக அவர்கள் இந்துத்துத்துவத்திற்கு இன்னுமொறு பிறப்புக் கொடுக்கவூம் தயாராக இருகக்கிறார்கள். எத்தனை மறுபிறவிகளைக் கண்டது இந்து மதம் – இன்னுமொரு மறுபிறவி எடுப்பது பெரிய விசயமா என்ன? இன்னுமொரு இந்துத்துவ எழுச்சி நிகழ வேண்டும் என்றால் இந்துத்துவம் மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதை இந்தியா மற்றும் உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஆதிக்கசாதி ‘கிளவர்” மூளைகள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றனர்.
ஒடுக்குதல் எடுக்கும் மறுபிறவிகள்.
பின் காலனித்துவ ஆய்வுகள் என்ற பெயாpல் இன்று ஏராளமான ஆய்வுகள் புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. காயத்திரி சக்ரவர்த்தி போன்ற ஆய்வாளர்கள் பல ஆழமான கேள்விகளை முன்வைத்துள்ளார்கள் என்பது உண்மையே. மேற்கத்தேய ‘சிந்தனை முறை” பல இருட்டடிப்புகளை செய்திருந்தமையை வெளிச்சப்படுத்த இது போன்ற முயற்சிகள் தேவைதான். மத்திய கிழக்கிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்துகொண்டிருந்த காலப்பகுதியை இருண்டகாலம் என இன்றும் வர்ணித்து வருகிறார்கள் மேற்கத்தேய வரலாற்றாசிரியர்கள். காலனித்துவ காலப்பகுதியில் நிகழ்ந்த கொடுமைகள் அழிவூகள் பல புதைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் கிண்டி எடுக்கப்படவேண்டியவையே. ஆபிரிக்க-ஆசிய சிந்தனையாளர்கள் கலைஞர்கள் இன்றும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவூம் பலமாக எதிர்க்கப்படவேண்டியதே.
ஆனால் இந்த மேற்கத்தேய இருட்டடிப்பு யாரால் முன்னெடுக்கப்பட்டது என்ற அடிப்படையின்றி நிகழ்கின்றது பல நவகாலனித்துவ ஆய்வுகள். ஏகாதிபத்தியம் என்ற பதம் அல்லது மேற்கத்தேய சிந்தனை முறை – அல்லது மேற்கு மைய வாதம் என்ற பதங்களின் மூலம் ஒட்டு மொத்த மக்கள் குழுவையும் பொதுமைப்படுத்தித் தாக்குகின்றன பல ஆய்வுகள். அதன் எதிர் நிலையாகக் கீழைத்தேய அதிகார சக்திகளை மீட்டெடுத்து புனிதப்படுத்தலும் நிகழ்கிறது. இது மறுவாசிப்பு என்ற பெயரிலும் நிகழ்கிறது. இந்து மதத்தைப் புனிதப்படுத்தலும் இவ்வாறே நிகழ்கிறது. இந்து மதம்சார் கொடுமைகளை ஏகாதிபத்திய சதி என்று சுருக்குவதன் மூலம் இந்து மத எழுச்சிக்கு வழி ஏற்படுத்துவதோடு மற்றைய மதங்களையூம் மக்களையும் எதிரிகளாகக் கட்டமைத்துக் காப்பாற்றும் யுத்தத்தை செய்ய வழி ஏற்படுத்துகிறது. இந்தியா போன்ற இடங்களில் இருந்து வரும் கோபமான வெளிப்படுத்தலுக்கு ஈடு கட்ட முடியாது மேற்கத்தேய சிந்தனையாளர்கள் பலர் கிழக்கின் அதிகார மையங்களின் நியாயத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் அநியாயமும் நிகழ்கிறது. சிசேக் போன்ற ஆய்வாளர்களில் இதன் தாக்கத்தைக் காணலாம். இந்தப்போக்கு பின்வழியாக மீண்டும் இந்தியாவுக்கு ‘ஏற்றுமதி” செய்யப்பட்டு மறுமலர்ச்சிக்கு பரந்த தளமேற்படுத்திக்கொடுக்கிறது. காந்தியைக் கண்டுபிடித்தலும் இந்த வகைப்பட்டதே. இது ஒரு புது விசயம் இல்லை. இது பற்றி இங்கு முழுமையாக பேசும் நோக்கு நமக்கில்லை. ஆனால் இந்த ஆய்வுகளை மையமாக வைத்து மேற்கத்தேய அதிகாரங்களை வளைச்சுப்போடும் ஆதிக்க சாதிய முனைப்பை மட்டும் இங்கு பேசவேண்டியிருக்கிறது. நாம் மேலே பேசிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக – இங்கிலாந்து பாராளுமன்ற ஊறுப்பினர்களுக்கு (அவர்கள் கேட்க மறுத்தால் இங்கிலாந்து மக்கள் படிக்கட்டும் என்றும்!) இந்து கவூன்சில் ஒரு ‘ஆய்வறிக்கையை” தயாரித்திருந்தது. இதை அவர்கள் தமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வருவதால் அந்த அறிக்கை பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.
இந்து கவுன்சிலின் தலைமை உறுப்பினரான டாக்டர் ராஜ் பண்டிட் சர்மாவால் எழுதப்பட்ட ‘சாதிய அமைப்பு” என்ற இந்த நீண்ட அலம்பலைப் பற்றி பேசுவதற்கு வாசிப்போரிடம் முதலில் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். இந்த அலம்பலுக்கு முன்னுரை எழுதிய அனில் பக்னோட்தான் டெல்லியில் பிராமிண்ஸ் கக்கூசு கழுவுகிறார்கள் என்று கவலைப் பட்டிருந்தவர். அனிலினதும் சர்மாவினதும் ஆழுமையின் கீழ், அவர்தம் கருத்தியலின் அடிப்படையில், இந்துக் கவுன்சில் இயங்கி வருகிறது என்பதால் அவர்கள் வாதங்களை நாம் அந்த தனிநபர்களின் வாதங்களாக அன்றி இந்து கவுன்சிலின் வாதமாக எடுத்துக் கொள்கிறோம் தாம் ஒரு மில்லியன் இந்துக்களை பிரதிநிதிப்படுத்துகிறோம்ம் என்ற இவர்களின் பம்மாத்துக் கதையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மீண்டும் பதிந்து கொண்டு அவர்களின் வாதத்தைப் பார்க்கலாம்.
இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்குமான யுத்தத்தின் பகுதியாக சாதிய ஒடுக்குதல் பற்றிய விவாதத்தை திருப்புவதன் நோக்கத்தை தெட்டத் தெளிவாக வைக்கிறார் அனில். ரோப் மாpஜ் (Rob Marris) என்ற தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினரைத் தனியாகக் கிள்ளி எடுத்துக் குறிவைத்துத் தாக்குகிறார். மாறிசுக்கும் இவாஞ்சலிக்கல் அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு காரணமாக அவரால் சாதிய ஒழிப்பு வாதம் பாராளுமன்றத்துக்குள் புகுத்தப்பட்டது என்பது அனிலின் வாதம். காஸ்ட்வாச் என்ற அமைப்பு கிறித்தவர்களும் தலித்துகளும் பற்றி ஒழுங்கமைத்திருந்த கருத்தரங்குகளில் பங்கு பற்றியவர் மாறிஸ் என்பது உண்மையே. கிறித்தவ அமைப்புக்கள் சாதியப் பிளவைப் பாவித்து மதமாற்றம் செய்ய முயல்வதும் மதத்தைப் பாவித்துத் தலித் நலனை வென்றெடுக்கும் தலித்சார் அமைப்புக்கள் முயல்வதும் உண்மையே. ஆனால் தலித்துகள் மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாறிஸ் தலித்துகளுக்காக பேச முன்வரவில்லை. முதன்முதலாகப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தவர் மாறிஸ். அதை எல்லாக் கட்சிகளும் ஏற்க மறுத்தபோது சமரசப் பரிந்துரையை முன்வைத்து ஏற்க வைத்தவர் மக்டோனால்ட். இதற்குப் பின்னால் கிறித்தவ சதி இருக்கிறது என்று கிலி பரப்பும் அணில் எந்த ‘ஆதாரங்களையும்” முன்வைக்கவில்லை. இந்து போறமும் மாறிசையூம் மற்ற இடதுசாரி உறுப்பினர்களையும் தாக்கியிருந்தது. ஊடகங்கள் ‘வலதுசாரிகள்” என்று வர்ணிக்கும் கிறித்தவ லொபி அமைப்புகளோடு தொடர்புள்ளவர்கள் இவர்கள் என்று இந்து போறம் இவர்களைத் தாக்கியிருந்தது!
(10). (வர்க்கம் இழுக்கப்படுவதை கவனிக்க). இவர்கள் தாக்கும் ஜெரமி கோபின் மற்றும் மக்டோனால்ட் போன்ற உறுப்பினர்கள் மதச் சார்பற்றவர்கள் – தங்களை மார்க்சியர் என்று அறிவித்துக்கொள்ளும் இவர்களுக்கு பிரித்தானியத் தொழிலாளர் அமைப்புகள் மத்தியில் மிக்க மரியாதை உண்டு. மக்டொனால்ட் தமிழத் தோழமை இயக்கத்தின் (தமிழ் சொலிடாரிற்றி) அமைப்பின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிவரும் என்னுடய அனுபவத்தில் இவர்கள் ஒருபோதும் மதம்சார் நோக்கோடு இயங்குபவர்கள் அல்ல என்பதை உறுதியுடன் கூற முடிம். நாம் ஒழுங்கமைத்த பல கூட்டங்களில் இவர்கள் பேசியிருக்கிறார்கள். இவர்களை மதச்சார்பு நோக்குக்காக தலித்தியத்தை கையில் எடுத்தவர்கள் என்று இந்து போறம் குறிப்புச் சொல்வது நகைப்புக்கிடமானது மட்டுமல்ல கனத்த கோபமேற்படுத்துவதாகவூம் இருக்கிறது. போறத்தின் ‘வர்க்க நலனின்” எல்லை எங்கு நிற்கிறது என்று பார்க்க இது உதவூகிறது.
‘தாம் சாதிய முறைக்கு எதிர்ப்பு –ஏனெனில் அது உண்மையான இந்துத்துவம் கிடையாது. வெளிநாட்டுப் படை எடுப்புகளால் – குறிப்பாக முஸ்லிம்களால் இந்துக்கள் பட்ட துன்பத்தின் எதிர்வினையாக எழுந்தது சாதியக் கட்டுமானம் என்பது இவர்கள் வைக்கும் இன்னுமொரு வாதம். சர்மா தனது அலம்பல் அறிக்கையில் முஸ்லிம்களால் இந்துக்கள் அனுபவித்த தொல்லைகளை வர்ணிக்கிறார். காஸ்மீரில் இந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தற்கால உதாரணமாகவும் முன்வைக்கிறார். காஷ்மீர் இந்துக்கள் முஸ்லிம் தீவிர வாதிகாளால் காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்டுள்ளார்கள் என்று அறிக்கையில் பல பகுதிகளில் அழுதிருப்பார் அவர். கிறித்தவர்கள் இந்துத்துவத்தை உடைப்பதற்குத் தடைகல்லாக உருவானதுதான் சாதிய முறை என்றும் வாதிக்கிறார் சர்மா! இந்தக் கேவலத்தில் மதங்களுக்கிடையிலான நல்லுறவைப் பேணுவது கவுன்சிலினதும் போறத்தினதும் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று எனற போலிப் பசப்பல் வேறு. என்னே கேவலம்!. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பை இந்துத்துவத்துக்கு மேலான தாக்குதலாகக் காண்பித்து – ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை அதன் நேர் நிலையில் நிறுத்தி ஒரு யுத்தத்ததை நடத்த துடிக்கும் அவர்களின் கெட்டிக்காரத்தனத்தைப் பாருங்கள். முஸ்லிம்களுக்கு எதிர்ப்புக்காட்டி இந்திய ஆதிக்க சக்திகளை பலப்படுத்தல் மற்றும் இங்கிலாந்து வலது சாரிகளை வென்றெடுத்தல் என்பதும் நிகழ்கிறது. இது ஒரு பல்முனைத் தாக்குதல். இருக்கிறது எல்லாத்தையும் வைச்சு அடிப்பது என்பார்களே – அந்த முயற்சிதான் இது. சாக்கோடு சாக்காக காஷ்மீர் முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று ஒரு சாத்துச் சாத்தி காஷமீர் மக்களின் உரிமையிலும் ஒரு போடு போட்டு இந்தியத் தேசிய ஆதரவையும் தமது பக்கம் இழுக்க முயல்கிறார்கள். இந்திய தேசியத்தைக் கட்டுவதன் மூலம் இந்துத்தவத்தை காப்பாற்றிக்கொள்வதும் அதன் கொடுமைகளை மறைக்க முயல்வதும் காந்தி காலத்துக்கு முன்பிருந்தே நடக்கும் பாரம்பரிய விடயம்தானே.
இது தவிர சர்மா இந்துத்துவத்தின் துhய்மையயையூம் சமஸ்கிருதத்தின் புனிதத்தையும் எடுத்துக்காட்ட பல பக்கங்களை விரையம் செய்துள்ளார். இதுபற்றி அலச வேண்டிய அவசியமில்லை. மனுவைக் காப்பாற்றப் புலம்பியிருப்பது ஒன்றும் புதிதில்லை. ‘காலில் இருந்து கடைகெட்டவர்கள் வந்தார்கள் என்பது தவறு – முழு உறுப்புகளும் இல்லாமல் உடம்பு இயங்க முடியாது –சமூகத்தின் பல பகுதியினரதும் செயல்பாட்டின் ஒன்றிணைப்பாக சமூகம் அசைகிறது என்பதைக் குறிப்பதே மனு சாத்திரம்” – அதான் இது- இதுதான் அது – என்று அவர் புலம்பித்தள்ளியிப்பவற்றை இந்துத்துவ குப்பை என்று அது பற்றி ஆய்வு செய்வோருக்கு சமர்ப்பித்து விட்டு நாம் இவர்களின் வாதங்களின் அடுத்து முக்கிய புள்ளிக்கு நகர்வோம்.
தீண்டாமை எப்படி ஏற்பட்டது என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதம் புதிதில்லை – இருப்பினும் அவர்கள் அதை எவ்வாறு மேலதிகமாக பலப்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்படவேண்டியது. ‘பழைய இந்திய சமூகத்தில் பல்வேறு வியாதிகள் வைரசுகள் இருந்து வந்தன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. உயிரைக் குடிக்கும் வியாதிகளில் இருந்து தப்புவதற்குப் பிராமணச் சாதி போன்ற சில சாதியினர் தமது துhய்மையைப் பாதுகாப்பதற்காக மற்றவர்களைத் தொடுவதைத் தவிர்த்தனர். எல்லாரையூம் தீண்டக்கூடாது என்று அவர்கள் பார்க்கவில்லை. மாறாக துப்பரவற்றவர்களையே அவர்கள் தீண்டவில்லை.” என்று வாதிடும் சர்மா தடாலடி மேலதிக பலம் சேர்ப்பார். ‘தீண்டாமை கூடாது என்று விமர்சிக்கும் மேற்குலகத்தினர் தங்களது நாடுகளில் நடக்கும் தீண்டாமை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. வரலாறு காணாதளவூ தொகை வீடற்றவர்கள் இன்று இங்கிலாந்தில் தெருவில் வாழ்கிறார்கள். இவர்களுக்கும் இந்திய கீழ் சாதியினருக்கும் வித்தியாசமில்லை. உயர்நிலை இங்கிலாந்து மக்கள்; இவர்களுடன் சமூக உறவூ வைப்பதில்லைத்தானே. இங்கிலாந்து உணவகங்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வேலை செய்பவர்கள் கிளவூஸ் போட்டும் உணவைத் தீண்டாமலும் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வைக்கப்படுகிறார்கள்” என்று விரிகிறது அவரது சமூக விளக்கம்! மேற்கு மையத்தின் எதிர்ப்பு என்று இதற்கும் ஒரு பின்நவீனத்துவ ஆதரவைத் திரட்ட சில ‘அறிஞர்கள்” வெளிக்கிடலாம்! இங்கிலாந்தில் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுபவர்களை ‘கீழ்” தரமாக உயர் வர்க்கத்தினர் நடத்துவதை பாதுகாத்துக்கொண்டு அதேபோல் மேல் சாதியினர் ‘கீழ்” சாதியினருடன் கலக்காமல் இருப்பதையூம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிப்பது அவர்கள் நோக்கமாக இருக்கிறது. எவ்வாறு வர்க்க வேறுபாட்டை தமது சாதிய ஓடுக்குமுறைக்கு சாதகமாக பாவிக்கும் முகமாக அவர்கள் வாதம் நகர்கிறது என்பதை மீண்டும் இங்கு கவனிக்க.
தீண்டாமையின் உருவாக்கம் பற்றி ஒரு காரணம் சொல்லி அதை எவ்வாறு சமகாலத்துக்கும் பொதுவானதாக நியாயப்படுத்தும் முயற்சி நடக்கிறது என்று பாருங்கள். கோயிலில் ஒருவர் தொட்டதற்காகப் பாத்திரம் கழுவப்படுதல் என்பது சுத்தப்படுத்தல் சம்மந்தப்பட்டது – சாதியம் சம்மந்தப்பட்டதல்ல என்று இதை விரித்துப் புரிந்துகொள்ளும்படி கேட்கிறார் அவர். உலகப் பொருளாதார சாpவின் பாதிப்பை தொழிலாளர்கள் தலையில் சுமத்த வலதுசாரிய அரசு பல்வேறு வெட்டல் கொத்தல் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்பலனாக சமூக சேவைகள் நிறுத்தப்பட்டும் வேலை இல்லாமை அதிகாpத்தும் வருகிறது. அதன் பாதிப்பால்தான் வீடற்றௌர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் வறிய இடங்களில் வாழ்ந்துவரும் ஆபிரிக்கரும் ஆசியருமே. இந்த இடத்தில் ‘ஆசியர்கள்” என்று மட்டும் குறித்து விட்டுச் செல்வது தவறு. ஆதிக்க வர்க்க ஆசியர்கள் வாழும் இடங்கள் வேறு. ஏழை ஆசியர்கள்தான் வறிய இடங்களில் கறுப்பினத்தவர்களோடும் ஏனைய வெளிநாட்டவர்களோடும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஏழை ஆசியர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். ஓடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோரும் வறிய இடங்களிற்தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்த அறிவோடு சர்மாவின் தாக்குதலை மறுவாசிப்பு செய்யூங்கள். தீண்டாமையால் பாதிக்கப்படுபவாpன் மனநிலையில் இருந்தோ – பொருளாதாரச் சாpவால் பாதிக்கப்படும் தொழிலாளர் மனநிலையில் இருந்தோ சர்மா எழுதவில்லை என்பது தௌpவானது. துhய்மை பேணுவதற்காகச் சகமனிதனைத் தொட மறுப்பது சாp என்று வாதிடும் இந்தப் பேயர்கள் எல்லாம் டாக்டர்கள் – அறிஞர்கள் – ஆய்வாளர்கள் என்று சொல்லித்திரிவது ஒட்டுமொத்த சமூகத்துக்குமே கேவலமானது. ஒருவரைச் சந்திக்கும் பொழுது வாயில் கொஞ்சி வரவேற்கும் பழக்கம் இருக்கும் பிரான்சில் தான் உணவகங்களில் உணவைக் கையாள்வதில் ‘துhய்மை” பேணப்படுகிறது. குளிருக்கு கிளவூஸ் போட்டிருந்தாலும் அதைக் கழற்றிக் கைகுலுக்கும் பண்பாடிருக்கும் இங்கிலாந்தில் தான் வைத்தியசாலைகளில் நேர்சுகள் கையூறை அணிவது கட்டாயமாக வற்புறுத்தப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் செருப்புப் போட்டு நடப்பதே குற்றம் – மேலுடை உடுப்பதே குற்றம் என்று தள்ளி வைத்த பார்ப்பனியப் பாரம்பாpயத்தில் வந்த சர்மா எமக்கு எப்படி புதினமான முறையில் தீண்டாமை போதிக்கிறார் பாருங்கள்.
இத்தகைய தீண்டாமையை எதிர்கொள்ளும் தலித்துகள் அதைத் தவிர்க்க தாம் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதை வெளியில் சொல்லாமல் நடமாடுவதற்கும் ஒரு அடி போடுகிறார் சர்மா. தலித் சொலிடாறிற்றி செய்த ஆய்வை அரசியல் நோக்கம் கொண்டது என்று விலத்தும் அவர் அவ்வறிக்கையில் இருக்கும் ஒரு உதாரணத்தைத் தூக்கி விளக்கம் கொடுத்து அனைத்து ஆதாரங்களையும் மறுப்பார். தான் என்ன சாதி என்று சொல்லாமல் இருந்த ஒருவருக்கு ஆதிக்கசாதி ஒருவர் உதவி செய்கிறார். பின்பு தாம் உதவி செய்தவர் தனது சாதியை சொன்னதும் விலத்திப் போய்விடுகிறார். இந்த விலத்தலுக்கு காரணம் சாதிய பாகுபாடு என்கிறது தலித் சொலிடாரிற்றி இணைப்புக்குழு. சர்மா அதை மறுத்து அவர்கள் விலகிப் போனதற்கு காரணம் அவர் பொய் சொன்னது என்கிறார்! 15 ஏப்ரல் பி.பி.சி நியூஸ்நைட் நிகழ்ச்சியில் சாதிய ஒடுக்குதல் பற்றிய விவரணப்படம் ஒன்று காட்டப்பட்டது. அதில் தலித் ஒருவர் – சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர் – அழுகையுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் இந்து போறத்தின் சார்பாக கலந்துகொண்டிருந்த அர்ஜன் வாக்காரியா (Arjan Vakaria) அவரைப் பொய்யன் என்று குற்றம் சாட்டியதையும் இங்கு நினைகூர வேண்டும். இதுதான் இவர்கள் சாதி மறுப்பு செய்யும் இலட்சணம். இந்துக்கள் எல்லாம் ‘பிரித்தானிய இந்து” என்ற ஒரு அடையாளத்தை மட்டும் தான் வைத்துள்ளோம் என்று கூறும் அனில் இந்துக்கள் பழங்காலத்துச் சாதிய முறையைத் தாண்டி வந்துவிட்டார்கள் என்கிறார். இருப்பினும் அனில் கடைசியாக எமக்கொரு ஆப்பு வைப்பார். ‘நாம் சாதியை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சாதிய முறையின் ஒரே ஒரு வழக்கத்தை மட்டும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மிக தாழ்மையுடன் அவர் கேட்டுக்கொள்கிறார். அந்த ஓரே ஒரு விசயம் என்ன தொpயூமா? ‘பூசகருக்கான மதிப்பு”! ‘ஆதி சாதி மறையை உருவாக்கி உலகை நவீனமயப்படுத்திய உலகின் முதலாவது மனிதன் மனுவின் புனித விழுமங்களைப் பாதுகாப்பதை சாதிய எதிர்ப்பு தடுக்கிறது” என்று அந்த தன் கோரிக்கைக்கு தௌpவான விளக்கம் ஒன்றையூம் அவர் தந்திருப்பார். என்னே போக்கிரித்தனம!;. கிறித்தவ சமுதாயத்தில் பாதிரிமாருக்கிருக்கும் மதிப்பு -இஸ்லாமிய சமூகத்தில் இமாம்களுக்கு இருக்கும் மதிப்பு போல் -இந்து பூசாரிக்கும் மதிப்பு இருக்கவேண்டும் என்ற கோரிக்கை தெற்காசிய சமூகம் பற்றிய நுணுக்கமான அறிவற்ற வலதுசாரிய இங்கிலாந்து உயர்வர்க்கத்திடம் விற்;பனையாகும் என்பது நிச்சயம். அதைக் குறிவைத்துத்தான் அனில் அடிக்கிறார். தலித்துகள் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது அவருக்குத் தொpயாததில்லை. ஆக மொத்தத்தில் அவர் நோக்கம் நிறைவேறியது. அதிகாரம் இப்போதைக்கு அவர் பக்கம்தான். இருப்பினும் எமது உரிமையை நாம் விரைவில் அடித்துப் பறித்துத்தான் ஆகவேண்டும்.
இறுதியாக
இருபது வருடங்களுக்கு முன்பு ஸ்டீபன் லாரன்ஸ் என்ற கறுப்பினச் சிறுவன் கொலை வெளிப்படுத்திய பொலிசாருக்குள் இருக்கும் நிறுவனமயப்பட்ட துவேஷம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அண்;மையில் மார்க் டக்கனின் கொலையூம் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரமும் உலகறிந்ததே. இதேபோல் விஜய் பேக் ராஜின் வழக்கு எவ்வாறு திட்டமிட்ட முறையில் தூக்கி எறியப்பட்டது எனப் பார்த்தோம். இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவு அதிகார சக்திகளும் அவர்சார் நிறுவனங்களும் யார் நலனுக்காக இயங்குகிறார்கள் என்பதை வெளிக்காட்டி வருகிறது. அரச சக்திகள் ஒருபோதும் நம் நலனுக்காக இயங்கப்போவதில்லை. மனித உரிமை பற்றிய கரிசனை அவர்களின் வர்க்க நலன்களை மீறி இயங்கப்போவதில்லை என்பதை நடந்த பாரளுமன்ற விவாதம் நன்றாக தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதய அரசு தமது நட்புச் சக்திகளான பெரும் முதலாளிகள் மற்றும் பணக்காரக் கோயில்களின் நலனைப் புண்படுத்தும் படி மனித உரிமை பற்றிப் பேசப்போலவதில்லை. இதனாற்தான் சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான போராளிகள் தமது நட்புச் சக்திகளுடன் இணைந்து தமது போராட்டத்தைப் பலப்படுத்த வேண்டும். தொழிற் சங்கங்கள், இடதுசாரிகள், சோசலிஸ்டுகள், போராளிகள் என்ற பலமான சக்திகள் ஒன்றிணையவேண்டும்.
குறிப்புகள்.
1. http://www.bbc.co.uk/news/uk-politics-22163269
http://www.guardian.co.uk/commentisfree/2013/apr/15/caste-discrimination-uk-outlawed?INTCMP=SRCH
2.http://www.bbc.co.uk/worldservice/documentaries/2009/09/090911_forum_060909.shtml
3. http://www.hinducounciluk.org/articles/409-press-release-dont-take-us-back-to-the-caste-system
4. http://www.castewatchuk.org/resources.htm
5.
6. http://www.hinducounciluk.org/
7. http://www.hinducounciluk.org/images/stories/report/the_caste_system.pdf
9. http://www.avanti.org.uk/kapsharrow/sub_section.php?section=4&sub=39
10. http://blog.rubensteinpublishing.com/caste-case-collapses-2/
11. http://www.redhotcurry.com/news/2008/hfb_caste-discrimination.htm
Thanks : உயிர்மை May 2013