போராளிகளே கவனம்
மட்ராஸ் கபே என்ற படத்தை வைத்து அரசியல் செய்யப் பலர் ஓடித்திரிகின்றனர். இப்படத்தின் பின்னணியில் உள்ள அரசியல் பற்றியும் படம் பற்றியும் பேசப்படத்தான் வேண்டும். படத்தைப் பார்த்துத்தான் மேலதிகமாக எழுதலாம். ஆனால் அதற்குள் நமது ‘முற்போக்குகள்” பல விழுந்தடிச்சு தமது வியாபாரக் கடையைத் திறந்துவிட்டதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. என்னே கேவலம் இவர்கள் அரசியல்.
தடை செய்யச் சொல்லி உணர்ச்சிவசப்பட்டு துடிப்பவர்கள் கோருவது தவறுதான். எக்கலையும் தடைக்குரியதல்ல. பாசிசத்தன்மையுள்ள மிகக்கேவலமான கட்சிகளைக்கூட தடைசெய்வதை எதிர்த்ததுதான் இடதுசாரிய வரலாறு. ஏனெனில் தடை என்ற கருவி அதிகாரத்தின் கையில் இருப்பது. அக்கருவியை பாவிக்கலாம் என நாம் அதிகாரத்தைக் கோரினால் அதே கருவியை அவர்கள் எமக்கெதிராகப் பாவிப்பதற்கும் அனுமதி கிடைத்ததாக மக்கள் இயக்கங்கள் கலைகளையும் அவர்கள் தடை செய்வர். அதனால் நாம் தடை கோருவது தவறே.
ஆனால் அதற்காக எதிர்ப்புக் காட்டாமல் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மக்களின் எதிர்ப்பு பதியப்படத்தான் வேண்டும். மோசமான சனநாயக மறுப்பு அரசுகள் இரண்டை வக்காலத்து வாங்கி ஒரு படம் உருவாக்கப்பட்டிருக்கிறதென்றால் இதைக் கண்டிக்க – அது பற்றிக் கோபம் கொள்ள – உணர்ச்சிவசப்பட அனைவருக்கும் உரிமையுண்டு. செய்யவும்தான் வேண்டும்.
அதிகாரத்தை எதிர்க்கும் போராளி இவ்விடத்தில் என்ன செய்வார்? “சக போராளிகளே இது எதிர்க்கப்படவேண்டியதே. ஆனால் அதை சரியான முறையில் எதிர்ப்புச் செய்யுங்கள். அதிகாரம் தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும்படி எதிர்க்காதீர்கள்” எனக்கூறலாம்.
ஆனால் நமது ‘தமிழின் தன்னிகரற்ற’ முற்போக்குகள் என்ன செய்கின்றன? எவ்வாறு பிரச்சினையைக் கிளப்பி அந்தச்சூட்டில் தாம் எவ்வாறு குளிர்காயலாம் என அவர்கள் மூளைகள் சென்னை வெய்யிலிலும் அதிகமான சூட்டோடு வேலை செய்கின்றன. அவர்கள் முஸ்லிம்களை எதிராக திருப்பலாம் எனக் கண்டுபிடிக்கிறார்கள்.
விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம்களிடம் இருந்து வந்த எதிர்ப்பையும் தற்போiதய எதிர்ப்பு நிலவரத்தையும் ஒப்பிடும்படி நம்மைக் கேட்டுக்கொள்கிறார் ஒருவர். ஆகா என்ன கண்டுபிடிப்பு என நாம் பூரிக்க வேண்டுமாம். அப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பேசியவர்கள்தான் இன்று தடையைக் கோருகிறார்கள் எனச் சின்னத்தனமாக நிலவரத்தை திரித்து உடைப்பது கேவலமில்லாமல் வேறென்ன?
இதற்குள் காந்தி கத்தரிக்காய் எல்லாம் ஒரு அனாக்கிச மரத்தில் முளைக்குது என்றொரு வெடிகுண்டு வேறு. இதன்மூலம் அவர் சொல்லவரும் அருட்பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்? அரசை சில சமயங்களில் ஏற்கவேண்டிய நிலை சிறுபான்மையருக்கு ஏற்படுகிறது என நியhயப்படுத்துகிறார் அவர். என்ன சிறுபான்மை பற்றிப் பேசுகிறார் என நீங்கள் கேட்கலாம். இந்திய தேசியத்துக்குள் இருக்கும் தமிழ் – காஸ்மீர் – நாகலாந்து சிறுபான்மை பற்றியோ அல்லது இலங்கைக்குள் இருக்கும் ஈழச் சிறுபான்மை பற்றியோ பேசமுடியாதல்லவா. ஆக தமக்கு வசதிக்கு வந்தபடி சிறுபான்மையைத் தெரிவு செய்துகொள்கிறார்கள். எகிப்தில் இன்று அரசால் அடிவாங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினரா? இந்தியா எங்கும் ஒடுக்கப்படும் தலித்மக்கள் சிறுபான்மையினரா? நீங்கள் எந்தச் சிறுபான்மைச் சாதியின் பக்கம் நின்று சாதியம் பேசுகிறீர்கள் என்று சொல்லிவிட்டுப் பேசலாம் அல்லவா.
சிறுபான்மைப் புத்தமதம் பற்றி நீங்கள் எமக்கு பயிற்சி எடுப்பதை பர்மாவில் வைத்துப் பிறகு பேசலாம். ‘பாவம் ராஜபக்ஷ தெற்காசியாவின் மிகவும் சிறிய சிறுபான்மை இனத்தைக் காக்கப் போராடும் போராளி அவர் ” என நீங்கள் எழுதினால் நாம் ஆச்சரியப்படப்போவதில்லை.
அம்பிட்டபடிக்கு ஏதாவது எழுதுவது. அது அறிவின் உச்சத்தில் இருந்து வருவதாக ஒரு பாவனை செய்வது. பிறகு முற்போக்கு என நீங்களாகவே முடிசூட்டிக்கொள்வது என நகரும் உங்கள் தனிப்பட்ட புலம்பல்களை முறைப்படி அம்பலப்படுத்தவேண்டிய கட்டாயம் இன்று உருவாகியிருக்கிறது.
இது இவ்வாறிருக்க காங்கிரசுக்கு அனுதாப அலையை இப்படம் ஏற்படுத்தலாம் என்ற பயத்தில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகளும் பரபரக்கின்றன. இதில் பி.ஜே.பி யும் சேரும். சிவசேனாவைச் சேர்ந்த சுரேஸ் பிரபு மற்றும் ராம் மாதவ் போன்றவர்கள் ராஜபக்ஷவோடு ‘தேத்தண்ணி குடிக்க’ இலங்கை போனதும் அங்கு போய் யாழ்ப்பாணத்தில் அரச பாதுகாப்பில் மக்களுக்கு ‘ஆசிகள்” வழங்கியதும் ஒளிச்சுமறைச்சு நடந்த விசயங்கள் இல்லை. ராஜபக்ஷ யுத்தக்குற்றவாளியல்ல என பி.ஜே.பி தொடர்ந்து அடம்பிடித்து வருவதும் எமக்கு தெரிந்த விசயம்தான். இதைத் தட்டிக்கேட்க முற்போக்குகளுக்கு ‘வசதியிருக்கவில்லை’.
தற்சமயம் பி.ஜே.பி இப்படத்தை மும்பாயில் தடை செய்யக் கோருவதை சுட்டிக்காட்டி மற்றைய எதிர்ப்பாளர்களையும் பி.ஜே.பி உடன் இணைக்கும் வேலையை முன்னெடுக்க இந்த முற்போக்குகள் முண்டியடிப்பார்கள் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. பி.ஜே.பி க்கு எதிர்ப்புச் செய்யவதாக சொல்லி காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் பழைய மார்க்சிய கட்சிகளும் ‘பேச்சுச் சுதந்திரத்தை’ காப்பாற்ற ஓடிவருவார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம். இந்து ராம் இது பற்றி ஒரு கட்டுரை எழுதி பேச்சுச் சுதந்திரத்தைக் காப்பாற்றலாம். காலச்சுவடு இது பற்றி ஒரு புத்தகமே வெளியிடலாம்!
இந்த இழுபறிக்குள் மாட்டாமல் அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்பைப் பதிவது என்பது மலையை மயிராற் கட்டி இழுக்கும் வேலையாகத்தான் இருக்கப்போகிறது. எதிர்ப்பாளர்களை நோக்கிப் பல்வேறு வலைகள் வீசப்படுகின்றன. இவற்றில் அம்பிட்டு அவர்கள் துடிக்கத் துடிக்க வலை வீசியவர்களின் ‘கிராக்கி” ஏறிக்கொண்டே செல்லும்.
போராளிகளே கவனம்.