நாம் மறக்க மாட்டோம்.

தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசால் இனபடுகொலை செய்யப்பட்டு அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவுவடையப்போகின்றது. முடிவடைந்த 14 ஆண்டுகளில் எமது அரசியல் நிலைப்பாடு எதை நோக்கி நகர்ந்திருக்கின்றது, மக்கள் விடுதலை அரசியல் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டில் கட்டுரை தொடராக பிரதி வியாழக்கிழமையில்  வெளியிடுகின்றோம். 

ethir -Aug 2 -2023

நாம் மறக்க மாட்டோம்.

மக்களுக்காகவும், மனித மேம்பாட்டுக்காகவும் போராட முன்வந்த ஒவ்வொரு உயிர்களும் சமூகத்தின் நினைவில் ஊறிக்கிடப்பது இயல்பே.  ஆனால் மே 17 நினைவு நாள் மட்டுமல்ல. இரத்தம் தோய்ந்த யுத்த முடிவு நாளாக கருதப்படும் இந்த நாள் பெரும் படுகொலை நினவு நாளாகவும் இருக்கிறது. இலங்கை அரசு இதை வெற்றிப்பெருமித நாளாக கொண்டாடி வருகிறது. அரச அடக்குமுறையை தொடர்ந்து எதிர்க்கும் நாம் இந்த நாளை எழுச்சி நாளாகவும் முன்வைக்க வேண்டி இருக்கிறது.

கோர யுத்த முடிவு மக்களின் எந்த கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கவில்லை. யுத்த வெற்றிப் பெருமிதம் கொண்டாடிய ராஜபக்ச குடும்பத்தினர் தமது சொத்துக்க்களை வளர்த்தனரே தவிர வேறு யாருக்கும் எந்த பயனும் இருக்கவில்லை. மக்களுக்கு மேலதிக நெருக்கடிகளும் சனநாயக மறுப்பும்தான் அதிகரித்தது.

யுத்தம் முடிந்த கையோடு மக்களின் நியாயம் கேட்கும் குரல் உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பலமாக எழுந்தது. இலங்கை அரசிடம் இருந்து நீதி பெறுவது சாத்தியம் இல்லை என்ற புரிதலில் மேற்குலக அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்கள் நோக்கி கோரிக்கைகள் பலப்பட்டன. இந்த அரசுகள் மற்றும் இலங்கை அரசுடன் ‘நல்லிணக்கம்’ பாதுகாக்க விரும்பிய பல மிதவாத மற்றும் வலதுசாரிய அமைப்புக்களும் தனி நபர்களும் இம்முறையில் நீதி கிடைக்கும் என்ற பொய்யை மக்கள் மத்தியில் பரப்பினர் – தொடர்ந்து பரப்பி வருகின்றனர். பதின்னான்கு வருட கால உரையாடல்களும் நல்லிணக்கங்களும் இன்றுவரை ஏன் ஒரு பலனையும் மக்களுக்கு பெற்றுத்தரவில்லை என்ற எந்த ஒரு விளக்கத்தையும் இந்த மிதவாதிகள் மக்கள் முன் வைக்கப்போவதில்லை.

 மக்கள் விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டு விடவில்லை. அதேசமயம், 2009 மாதத்தின் பின், விடுதலையை முன்னிலைப்படுத்தியோ அதை முன் நிபந்தனையாக வைத்தோ மக்கள் கோரிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இலங்கை அரசின் அடக்குமுறை நெருக்கடியும் அதற்கு ஒரு காரணம். இருபினும் மக்கள் மத்தியில் முதன்மைப்பட்டிருந்த விசயங்கள் அடிப்படையான அத்தியாவசியக் கோரிக்கைகளாக இருந்தன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியற் கைதிகளை விடுதலை செய்தல், கொடூரமான பயங்கரவாத சட்டத்தை இல்லாமல் செய்தல், முதற்கொண்டு இலகுவில் நிறைவேற்றப் படக்கூடிய சனநாயக கோரிக்கைகளைத்தான் கடந்த 14 ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். இவற்றோடு போர் குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்த மிகச் சாதாரண கோரிக்கைகள் கூட ஏன் நிறைவேற்றப்படவில்லை? இது பற்றி இனியாவது நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.மக்கள் விரோத சக்திகளான ராஜபக்ச குடும்பத்தை மக்கள்தான் விரட்டி அடித்தனர். அதற்குமுன் அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த சக்தியும் அதற்கு முன்வரவில்லை? இது ஏன்?

இலங்கை அரசுடன் நேரடியாக் முரண்பட்டு அந்த அரசு சனநாயக உரிமைகளை வழங்க வேண்டும் என வற்புறுத்த எந்த சக்தியும் இனியும் முன்வரப் போவதில்லை. இலங்கை அரசுடன் உறவாடி அழுத்தம் கொடுப்பது மூலம் மாற்றத்தைகே கொண்டு வந்து விட முடியும் என கருதுவதும் தவறு. ‘அழுத்தம்’ கொடுப்பது எந்த அடிப்படையில், எந்த நலனுக்காக நிகழ்கிறது என நாம் பார்க்க வேண்டும்.

சீனா, இந்தியா, மேற்கு நாட்டு அரசுகள் முதற்கொண்டு இலங்கையுடன் உறவாடும் எந்த அரசும் அங்கு சனநாயகம் வரவேண்டும் என்பதை முதன்மையாக கொண்டு இயங்குவதில்லை. மாறாக தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் நோக்கை மட்டுமே முதன்மைப் படுத்தி இயங்குகிறார்கள். அவர்கள் ஒருபோதும் இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதில்லை. ‘ஆக்கபூர்வமான உறவாடுதல்’ என்ற தொடர்பாடல் பின் இலங்கை அரசை தமது நலன் நோக்கி எவ்வாறு சரிய வைப்பது என்ற நோக்கம் மட்டுமே உண்டு. மனித உரிமை அல்லது தமிழ் பேசும் மக்களின் உரிமை என்பவைகள் இரண்டாம் பட்சம். அவர்களின் திட்டமிடலில் இதுவும் ஒரு ஆயுதம் மட்டுமே.

உரிமை கோரிக்கையை தத்தமது நலனக்கு ‘பாவித்தல்’ என்பதை தவிர அதை நிறைவேற்றும் நோக்கு என்பது கிடையாது.

நலன்களுக்காக மோதிக் கொள்ளும் சக்திகளுக்கிடையில் நெளிந்தோடி ஒரு சில உரிமைகளையாவது பெற்றுவிடலாம் என சிலர் கருதுகிறார்கள். இதற்காக அவர்கள் நூற்றாண்டுகள் காத்திருக்க தயாராக இருக்கிறார்கள். என்றோ ஒருநாள் தமது திசையில் காற்று திரும்பும் அன்று எமது படகு பறக்கும் என அவர்கள் காத்திருக்கிறார்கள். அந்த ஒரு நாள் ஒருபோவதும் வரப்போவதில்லை. மக்களுக்கு போலி நம்பிக்கையை வழங்கி தமது மிதவாத அரசியலை நிறுவி செல்வது மட்டுமே இதன் பக்க விளைவு.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது இன்று சிதறிக் கிடக்கிறது. மத ரீதியான பிராந்திய ரீதியான பிளவுகள் மட்டுமல்ல, வர்க்க ரீதியான, சாதிய ரீதியான பிளவுகளும் கூர்மையடைந்து வருகின்றன. இதற்கான காரணங்களை மக்கள் மேல் மட்டும் திணித்து விட்டு தப்பி விட முடியாது. தமிழ் தலைமைகள் என சொல்லிக் கொள்வோர் – தமிழ் கட்சிகள் சரியான அரசிலை முன்னெடுக்காமையும் இதற்கு காரணம். இதே சமயம் மக்கள் மத்தியிலும் அரசியற் பிரக்ஞை குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

மக்களை அரசியற் படுத்துவதற்குப் பதில் அவர்களை அடிமைத்தனமான அரசியல் நடவடிக்கைக்குள் முடக்குவது மிதவாத அரசியல் வாதிகளுக்கு தேவையாக இருக்கிறது. மக்கள் கேள்வி கேட்கும், அரசியற் தெளிவோடு இயங்கும் சூழ்நிலை இவர்களுக்கு உடன்பாடான ஒன்றல்ல. இதனால் பாராளுமன்ற அரசியலை தாண்டிய எந்த அரசியலும் இல்லை என இவர்கள் நிறுவுகிறார்கள். பாராளுமற்ற அரசியலும் அதன் முழுமையான முறையில் இல்லாது குறுகிய சுய லாப – ஊழல் அடிபடையிலும் – வாக்கு வங்கியை கட்டுவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறது. இதைத் தாண்டிய அரசியல் இல்லை என நிறுவுவது சுய லாப நோக்கில் இயங்குபவர்களுக்கு அவசியமாக இருக்கிறது.

இதனால் இவர்கள் போராட்டம் என்ற சொல்லையே வெறுக்கிறார்கள். முடிவற்ற பேச்சுவார்த்தைக்குள் மக்களின் எதிர்காலத்தை புதைக்க விரும்புகிறார்கள். உலகெங்கும் இதுதான் நிலவரம் எனச் சொல்லி பொது சன ஆதரவை கோரி நிற்கிறார்கள். வேறு வழியின்றி இவர்களையும் நம்பி காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் படுகிறார்கள் மக்கள். இந்த நிலை மாற வேண்டும்.

மக்கள் பலம்தான் சர்வாதிகாரிகளை தூக்கி எறிகிறது – உரிமைகளை வென்றேடுக்கிறது என்ற வரலாறு திரும்ப திரும்ப உறுதிப்படுத்தப் பட்டு வருவதை நாம் உலகெங்கும் பார்க்க முடிகிறதுஅப்படி இருக்க இந்த பலத்தை திரட்டுவது நோக்கி ஏன் நாம் திரும்ப முடியாது? அதற்கான சரியான திட்டமிடலை நாம் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இலங்கை பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் மிகப்பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சிக்கும் இலங்கையில் ஓட்டுமொத்த மக்களினதும் ஆதரவைப் பெறச் சக்தியில்லை. அனைத்து அரசியற் தலைமைகளும் மக்களின் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறார்கள். ரணில் மட்டுமின்றி 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைதான் நாட்டில் பலப்பட்டு இருக்கிறது.

மிகப்பெரும் அரசியல் நெருக்கடியை உருவாகிய பொருளாதார நெருக்கடி விரைவில் தீர்ந்து விடப்போவதில்லை. மக்கள் 25 வருட காலத்திற்கு ‘இனிங்க்ஸ்’ விளையாடுவது போல பொறுமையாக இருக்க வேண்டும் – அதன் பிறகு எல்லாம் நல்லபடியாக முன்னேறும் என்கிறார் ரணில். ஒரு தலைமுறை மக்கள் நல்ல வாழ்க்கை வாழ முடியாது என்ற சாவாலை அவர் மக்கள் முன் வைத்துள்ளார்.

ஐ எம் எப் இடம் கடன் வாங்கியது எல்லாவற்றிற்கும் தீர்வு என்பதுபோல் அனைத்து அரசியல் வாதிகளும் உண்மை மறைத்து பதுங்கி இருக்கிறார்கள். கடனை திரும்ப வழங்க வேண்டும் என்ற பெயரில் மக்களின் வயிற்றில் அடிப்பது பற்றி யாரும் பேசத் தயாரில்லை. கல்வி சுகாதாரம் உட்பட பல மக்கள் சேவைகள் உடைக்கப்படுகின்றன –மேலதிக வரி திணிக்கப்படுகிறது. அனைத்து உரிமைகளும் முடக்கப்படுகின்றன. வேலை அற்றோர் நிர்கதியாக்கப்படுகிறார்கள். தொழிலாளர்கள் உரிமைகள் பறிக்கப்படுகிறது – அவர்களை மேலதிக சுரண்டலுக்கு உட்படுத்த வசதிகள் ஏற்படுத்தப் படுகிறது. இந்தக் காலப் பகுதியில் நெருக்கடிக்குக் காரணாமாக இருந்த எந்த ஒரு பெரும் முதலாளிகளும் தமது லாபத்தை இழக்கவில்லை என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். எந்த ஊழல் அரசியல் வாதியும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படவில்லை. இப்படியிருக்க மக்கள் தொடர் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளும் அதன் தலைமகைளும் எதிர்பார்ப்பது அவர்தம் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.

எமது அரசியற் போராட்டம் முன்னோக்கி நகர வேண்டுமாயின் சில அரசியல் பாடங்களை நாம் உள்வாங்க வேண்டும்.

 

லொபி அரசியலின் போதாமை

– லொபி செய்வதும் இணக்க அரசியல்தான். தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பலப்படாமல் எந்த ஒரு பலத்தைம் எமது பக்கம் திருப்ப முடியாது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை (PTA)  இல்லாமல் செய்வதை முக்கிய நிபந்தனையாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுகளும் இதை முன்வைத்திருந்தன. ஆனால் அந்த சட்டத்தை விட மோசமான முறையில் சனநாயக உரிமைகளை கொண்டுவரும் சட்டத்தை (ATA) ரனில் அரசு அமுல்படுத்த முயலும் பொழுது இவர்கள் என்ன செய்கிறார்கள். இதைக் கூட நிறுத்த முடியாது என்றால் எதற்கு லொபி. ஐ. எம் எப் சனாயாக உரிமைகளை மதிக்கும் அடிப்படையிலா  உதவி வழங்குகிறது. நாம் பல தடவை சுட்டிக் காட்டியது போல் லொபி அரசியல் இந்த சக்திகளின் ஆதரவை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கட்ட உதவி இருக்கிறதே தவிர மக்களின் உரிமைகளை முன்னோக்கி நகர்த்தவில்லை. தொடர்ந்து லொபி செய்யும் அமைப்புக்கள் தமது அரசியற் திட்டமிடலை தெளிவாக முன்வைக்கும்படி நாம் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறோம். ‘இதைத் தவிர வேறு வழியில்லை’ என்ற முறையில் மக்கள் இயங்கி வருகிறார்கள். பலமான சக்திகளை எதிர்க்க முடியாது. அனுசரித்துத்தான் போக வேண்டும் எனச் சொல்லி வருகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை என்பதை நாம் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. நாம் விட்டு விட்டால் நடுவில் இலங்கை அரச சக்திகள் புகுந்து விடுவார்கள் எனச் சொல்லி லொபி அரசியலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அரசியற் போதாமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய தர்க்கத்தின் தொடர்ச்சியாக இவர்கள் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெறுவதை முடக்க உதவுகிறார்கள். மக்களுக்கு இதனால் விடிவில்லை.

லொபியால் உரிமைகளை வென்று விட முடியம் என்ற பொய்யை நிறுத்த வேண்டும். இது பற்றிய பொது வெளியில் ஒரு திறந்த உரையாடல் நிகழ்வது மிக அவசியம்.

முந்திய PTA –பிந்திய ATA ஆகிய சட்டங்கள் முற்றாக நீக்கப் படவேண்டும்.

குறைந்த பட்சம் இதையாவது முதன்மைப்படுத்தி – இந்த விசயத்தில் எந்த சமஅரசும் இல்லை என்பதை அமைப்புக்கள் முன்னெடுக்க முடியாதா? இதையும் மீறி ‘நல்லுறவு’ பாதுகாக்க வேண்டி இருப்பதன் அவசியம் என்ன ?

*

மக்கள் போராட்டமும் – அதற்கான ஆதரவும் எதிர்ப்பும்

பெரும்பான்மை அமைப்புக்களும் – அதன் தலைமைகளும் மக்கள் போராட்டத்தை வெறுக்கின்றான. இதை இவர்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. போராட்ட நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கும் பொழுது அதற்கு தடையாக நின்றபடி ஏதாவது சாக்கு போக்கு சொல்வர். சமீபத்தில் தென்னிலங்கையில் நடந்த போராட்டம்  மிக மோசமான அரசியல் வாதிகள் அனைவருக்கும் எதிராக எழுந்த பொழுது இவர்கள் என்ன செய்தார்கள் என பார்ப்பது இதை விளங்கி கொள்ள போதுமாக இருக்கும். இது எமது பிரச்சினை இல்லை என இவர்கள் தட்டிக் கழித்தார்கள். எது உங்கள் பிரச்சினை? தெற்கு ஊழல் அரசியல் வாதிகளுக்கு தமிழ் மக்கள் வாக்கை திரட்டுவது உங்கள் பிரச்சினையாக இருந்திருக்கிறது. படுகொலைக்கு காரணமான ஜெனெரல் மேல் நம்பிக்கை வளர்ப்பது உங்கள் பிரச்சினையாக இருந்திரிக்கிறது. பாராளுமன்றத்தில் கூட்டு போடுவதும் சேர்ந்து புக்கை, இடியப்பம், வடை சாப்பிடுவதும் உங்கள் பிரச்சினையாக இருந்திறுக்கிறது. மக்கள் தெருவில் நின்று போராடுவது மட்டும் ஒருபோதும் உங்கள் பிரச்சினையாக மாற்றியதில்லை. ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் வயிறு எரிய வேலை செய்த ராஜபக்ச குடும்பம் ஒதுக்கப்படுவதை உங்களால் ஏன் கொண்டாட முடியவில்லை. அதற்கான ஆதரவை ஏன் நீங்கள் திரட்டி காட்டவில்லை.

இது வெறும் அரசியல் அறிவீனம் மட்டுமல்ல. இது யாவர்தம் அரசியல் நிலைப்பாடு பற்றிய விளக்கத்தை காட்டி நிற்கிறது. அவர்கள் எந்த வர்க்கத்துடன் உடன்பட்டு நிற்கிறார்கள் – யார் நலன்களை முதன்மைப்படுத்தி இயங்குகிறார்கள் என்ற நிலைப்பாட்டை இது வெளிகாட்டி நிற்கிறது. போராட்டத்தை கட்ட வேண்டும் என முன்வருபவர்கள் இதை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

போராட்ட அரசியலுக்கு எதிரான சக்திகள் இவர்கள். இதை அவர்கள் தொடர்ந்து நிருபித்து வருகிறார்கள்.

போராட்டஅரசியலுக்கு வருபவர்கள் இந்த போக்குக்கு எதிராக ஓன்று திரள வேண்டும். ஒற்றுமை என்பது போராட அரசியல் நிலைப்பாடு சார்ந்து கட்டி எழுப்பப்பட வேண்டும்.

தமிழர் ஒருங்கிணைப்புப் குழு (TCC) செய்வது போராட்ட அரசியலா ?

தம்மை போராட அரசியல் செய்பவர்களாக காட்டிக் கொள்ளும் சில அமைப்புக்களும் ‘வித்தைகள்’ செய்து வருகிறார்கள். தமது நடவடிக்களைகள் மற்றும் நிலைப்பாடு பற்றி மக்கள் முன் வெளிப்படையாக வைக்க தயங்கும் – உரையாட தயங்கும் எல்லா அமைப்புக்களும் மக்கள் முன் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பை இங்கு உதாரணமாக சுட்ட முடியம். தாம் விடுதலை புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி என காட்டிக் கொள்ள முயலும் இவர்கள் – தமக்கு மிஞ்சி எந்த அமைப்பும் இயங்க முடியாது என்ற போக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். புலிகள் இயக்க கொடி பிடிப்பதும் எமது தலைவர் பிரபாகரன் என கோசம் வைப்பதும் தாண்டி இவர்கள் என்ன அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள்? புலிகளின் பெயரை பாவித்துக் கொண்டு புலிகளின் போராட்ட ஆரசியலுக்கு எதிர் அரசியல் நிலைப்பட்டை எடுப்பது அனைத்து போராளிகளுக்கும் செய்யும் அவமானம் அல்லவா? கொடி பிடிக்கும் விவாரத்தை தவிர இவர்களிடம் எந்த அரசியல் ஆயுதமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உங்கள் அரசியல் நிலைப்பாடு – செயற்திட்டம் என்ன என நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவவப்போடு தெருவில் நின்று எமக்கு எதிராக கூச்சல் போடுவது – எமது உறுப்பினர்கள் பற்றி அவதூறு செய்வது- விடுதலிப் புலிகளின் கொடி பிடிக்காதவர்கள் அனைவரும் தமிழ் ஈழத்துக்கு எதிரானவர்கள என பிரச்சாரிப்பது போன்ற கீழ்மையான நடவடிக்கை தவிர இவர்கள் நிதானமான அரசியல் உரையாடல் நிகழ்த்த முன்வந்ததில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள்.

தாம் போராட்ட அரசியல் ஆதரவு என இவர்கள் சொன்னால் – அந்த போராட்ட அரசியல் என்ன என நாம் கேட்பது நியாயம்தனே. ஆயுத போராட்டமா? அரசியல் போராட்டம் என்றால் அது என்ன ? இவை பற்றி பூசி மெழுகாது தெளிவாகப் பேச முன்வரவேண்டும்.

இவ்வாறு போராட்ட அரசியல் பூச்சாண்டி காட்டும் TCCயும் மற்ற மிதவாத அமைப்புக்கள் போலத்தான் லொபி அரசியலை தாண்டிய அரசியல் இல்லை என நினைக்கிறார்கள். அனைத்து மக்கள் விரோத சக்திகளின் பின்னாலும் தாம் எவ்வாறு ஓடித் திரிகிறோம் என்ற உண்மையை இவர்கள் மக்களுக்கு மறைத்து வருகிறார்கள். மற்றய லொபி அரசியல் அமைப்புக்களோடு இவர்களுக்கு அரசியல் ரீதியாக பெரும் முரண் இல்லை – யார் கட்டுப்பாடில் இது நிகள்வது என்பதுதான் இவர்தம் ‘பெரும்’ பிரச்சினை.   TCC மக்கள் மத்தியில் செய்யும் வேலை பணம் திரட்டும் வேலை மட்டுமே. மக்களை அரசியல் படுத்தும் எந்த வேலையும் நிகழ்வதில்லை. மாவீரர் நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் நாள் போன்ற நிகழ்வுகளை தாம் மட்டுமே நடத்த வேண்டும் என்று அடிபடுவதுதான் இவர்தம் அரசியல் முதன்மை செயற்பாடு. இதன்மூலம் மக்கள் மத்தியில் ஆதரவை தக்க வைக்க வேண்டும் என இவர்கள் கருதுகிறார்களே தவிர மக்களை அரசியல் படுத்துவதன் மூலம் திரட்ட வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அதற்கான அரசியல் வலிமை இல்லை.

சக போராட்ட அமைப்புகள் மேல் வெற்று அவதூறு செய்வதை இவர்கள் நிறுத்த வேண்டும். இணைந்து வேலை செய்வதானால் எத்தகைய போராட்ட அரசியல் நிலைப்பாடை முன்னெடுக்கிறார்கள் என்பதை மக்கள் முன் தெளிவுபடுத்த வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *