பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படைகள் – ட்ரொட்ஸ்கி

இயங்கியல் என்பது ஒரு புனைவோ அல்லது மர்மமான விசயமோ அல்ல. எமது தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குள் குறுங்கிவிடாமல் மிகவும் சிக்கலான இயக்கங்களை சரியானபடி புரிந்துகொள்ளும் முயற்சிக்கான சிந்தனை முறை பற்றிய விஞ்ஞானமே அது. இயங்கியலுக்கும் தர்க்கத்துக்குமான 3 வேறுபாடு அடிப்படை கணிதத்துக்கும் உயர் கணிதத்துக்கும் இருக்கும் வித்தியாசம் போன்றது. அதன் பொருளைத் திட்டவட்டமான முறையில் விளக்க இங்கு முயற்சிப்போம்.

ஒரு ‘A’ இன்னொரு ‘A’ க்கு சமன் என்பதில் இருந்து தொடங்குகிறது இலகு சிலோஜிசமான4 அரிஸ்டோட்டிலிய தர்க்கம். இவ்வகை அடிப்படையான பொதுமைப்படுத்தல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக மனிதரின் பல்வேறு செயல்களை நிர்ணயிக்கிறது. ஆனால் உண்மையில் ‘A’ என்பது இன்னுமொரு ‘A’ க்குச் சமனல்ல. இதை நிறுவுவது இலகு. பூதக்கண்ணாடிக்குள்ளால் இந்த இரண்டு எழுத்துக்களையும் பார்த்தால் அவை வெவ்வேறான எழுத்துக்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தக்கூற்றுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். எழுத்தின் வடிவமோ அல்லது அதன் அளவோ இங்கு முக்கியமில்லை. மாறாக அவை இரண்டு சமமான தொகைகளைக் குறிக்கிறது – உதாரணத்துக்கு அவை ஒரு கிலோ சீனியைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறலாம். ஆனால் ஒரு கிலோ சீனி இன்னுமொரு கிலோ சீனிக்கு என்றும் சமமாக இருந்ததில்லை. நாம் அவற்றை அளக்கும் அளவை மிகத் துல்லியமாக்கிக் கொண்டு செல்லச் செல்ல அவற்றுக்கிடையிலான வேறுபாடு வெளிப்படுவதை அவதானிக்க முடியும். ஒரு கிலோ சீனி அதே கிலோ சீனிக்கு சமமாக இருக்கும் தானே என்றும் சிலர் கூறலாம். இதுவும் உண்மையல்ல. எல்லாப் பொருட்களும் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கின்றன. நிறம், நிறை, அளவு என்று பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. எந்தப் பொருளும் தமக்கு தாமே சமமாக என்றும் நிலைத்திருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட ‘கணப்பொழுதில்’ ஒரு கிலோ சீனி அதே கிலோ சீனிக்குச் சமமாக இருக்கும் என்று சோபிஸ்டுகள் சொல்லலாம். நடைமுறைக்குச் சாத்தியமற்ற இந்த ‘விதி’யின் நம்பகத்தன்மைக்கும் அப்பால் இதை ஒரு கோட்பாட்டு விமர்சனமாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கணம் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அதை நேரத்தின் மிகச்சிறிய அளவு என்று எடுத்துக் கொள்வதாயின் அந்த குறுகிய நேர அளவிற் கூட ஒரு கிலோ சீனி பல மாற்றங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது. அல்லது இச்சிறிய ‘கணப்பொழுது’ ஒரு தூய கணிதக் குறியீடாக –அதாவது பூச்சியத்திலிருக்கும் நேரம் என்றும் வாதிடலாம். ஆனால் அனைத்தும் நேரத்தில் தான் இருத்தல் செய்கின்றன.

இருத்தல் என்பதே தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு விசயம். நேரம் இருத்தலின் ஒரு அடிப்படைக்கூறு. ‘A’ சமன் ‘A’ என்ற விதி ஒன்று தானே தனக்கு சமமான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. அதாவது அது ஒரு பொருள் மாற்றமடையாமல் இருப்பதைக் குறிக்கிறது. ஆக இது அப்பொருளின் இருத்தலின் சாத்தியமின்மையைக் குறிக்கிறது. மேலோட்டமான பார்வையில் மேற்சொன்ன நுணுக்கம் ஒன்றுக்கும் உதவாதது போற் தோன்றலாம். ஆனால் யதார்த்தத்தில் அவை மிகவும் முக்கியத்தும் வாய்ந்தவையாகும். ‘A’ சமன் ‘A’ என்பது மனிதரின் எல்லாவித அறிதலினதும் தொடக்கம் போன்று தோன்றும் அதேவேளை அது அறிதலின் எல்லாவித பிழைகளின் தொடக்கமாகவும் இருக்கிறது.

‘A’ சமன் ‘A’ என்பதைத் தவறில்லாமல் பாவிப்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே சாத்தியம். நாம் இதைப் பாவிக்கும் நோக்கத்தினைப் பொறுத்து ‘A’ யின் அளவு மாற்றம் புறக்கணிக்கக் கூடியதாக இருப்பின் ‘A’ சமன் ‘A’ என்பதை நாம் உபயோகப்படுத்தலாம். ஒரு கிலோ சீனியை விற்பவரதும் வாங்குபவரதும் நடவடிக்கையை நாம் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இதே போல் தான் சூரியனின் வெப்பத்தையும் நாம் அளக்கிறோம். அண்மைக் காலம் வரை அமெரிக்க டாலரின் ‘வாங்குசக்தி’ பற்றியும் இவ்வாறே கருதியிருந்தோம். ஆனால் அளவு மாற்றம் ஒரு குறிப்பிட்ட எல்லையின் பின்பு பண்பாக மாறுகிறது. ஒரு கிலோ சீனியில் மண்ணெண்ணையோ தண்ணீரோ சேர்க்கப்பட்டதும் சீனி தொடர்ந்த சீனியாக இருப்பதில் இருந்து பண்பு மாற்றமடைகிறது. ஜனாதிபதி கை வைத்தபின் டொலர் தொடர்ந்து அதே டொலராக இல்லை என்பதும் இவ்வாறே.

எக்கட்டத்தில் அளவு பண்பாக மாறுகிறது என்பதை நிர்ணயிப்பது சமூகவியல் உட்பட எல்லாவகை அறிவியற் துறையிலும் மிக முக்கியமானதும் மிக சிக்கலானதுமான பணியாகும்.

இரண்டு சமமான பொருட்களை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பது எல்லா ஊழியர்களுக்கும் தெரிந்த ஒன்றே. பித்தளையை உருக்கி வளைவுச்சில்5 உருவாக்கும் வேலையில் ஓரளவு பிறழ்ச்சி அனுமதிக்கப்படுவதுண்டு. இருப்பினும் அந்த பிறழ்ச்சி ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டிச் செல்ல முடியாது (அந்த எல்லை சகிப்பு எல்லை –ஒப்புரவு6- என்றழைக்கப்படுகிறது). இந்த ஒப்புரவை கடைப்பிடிப்பதன்மூலம் உருவாக்கப்படும் வளைவுச்சில்லுகள் சமமான சில்லுகளாக கருதப்படுகின்றன. (அதாவது ‘A’ சமன் ‘A’). இந்த ஒப்புரவு மீறப்படும்போது அளவு பண்பாக மாறுகிறது. இன்னொரு வகையிற் சொல்வதானால் வளைவுச்சில் பிழையானதாக அல்லது உபயோகமற்றதாக மாறுகிறது.

நாம் பொது அனுபவத்தில் உபயோகப்படுத்தும் உத்திகளை ஒட்டியே எமது விஞ்ஞான பூர்வமான சிந்தனை எழுகிறது. கோட்பாடுகளுக்கும் ஒரு ‘ஒப்புரவு’ உண்டு – அது ‘A’ சமன் ‘A’ என்ற விதியில் இருந்து நிலைநாட்டப்படாமல் எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது என்ற இயங்கியல் தர்க்கத்தில் இருந்து தோன்றுகிறது. ‘பொது அறிதல்’ என்பதும் இயங்கியல் ஒப்புரவைத் தொடர்ந்து மீறும் இயல்புடையதாக இருக்கிறது.

முதலாளித்துவம், அறம், சுதந்திரம், தொழிலாளிகள், அரசு முதலிய கருதுகோள்களை அணுகும் போது கொடிய இறுக்கமான சிந்தனை முறை இருப்பதை அவதானிக்கலாம். அதாவது முதலாளித்துவம் சமன் முதலாளித்துவம், அறம் சமன் அறம் என்று பார்க்கப்படுகிறது. ஒரு ‘A’ இன்னுமொரு ‘A’ க்கு சமமாக மாறுவதை நிர்ணயிக்கும் -அதாவது எப்போது ஒரு தொழிலாளர் அரசு தொழிலாளர் அரசாக இருப்பதில் இருந்து மாற்றமடைகிறது –போன்ற தொடர் மாற்றங்களின் புறநிலைக் காரணிகளை ஆய்வு செய்வதன் அடிப்படையில் இயங்குகிறது இயங்கியற் சிந்தனை.

நிரந்தர இயக்கத்தில் இருக்கும் யதார்த்தத்தின் இயக்கமற்ற பதிவுகளை மட்டும் உள்ளடக்கத்தில் கொண்டிருப்பது கொடிய- இறுக்கமான சிந்தனை முறையின் முக்கியமான அடிப்படைக் குறைபாடாகும். திருத்துதல், அண்ணளவான கணிப்பீடு செய்தல், உறுதிப்படுத்தல் என்பன மூலம் இயங்கியற் சிந்தனையானது கருதுகோள்களுக்குச் செழிப்பான மற்றும் நெகிழ்ச்சியான உள்ளடக்கத்தை வழங்குகிறது. இயங்கியல் அறிதல் ‘சுவைபட’ உள்ளடக்கத்தை வழங்குகிறது என்று கூடச் சொல்லலாம். இது உயிர்ப்புள்ள நிகழ்வுக்குக் குறிப்பிடத்தக்க நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பொதுப்படையான முதலாளித்துவம் பற்றிய கருத்து வைக்காமல் முதலாளித்துவம் பற்றிய குறிப்பிட்ட படிநிலை பற்றி – தொழிலாளர் அரசு பற்றிய பொதுப்படையாகவின்றி குறிப்பாக ஏகாதிபத்தியத்தால் சூழப்பட்ட பின்தங்கிய நாட்டில் தொழிலாளர் அரசு பற்றி தெளிவுகளை ஏற்படுத்துகிறது.

நிழற்படத்திற்கும் திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை போன்றது இயங்கியலுக்கும் கொடும்-இறுக்க சிந்தனை முறைக்குமான ஒற்றுமை. திரைப்படம் நிழற்படத்தை இல்லாதொழிக்கவில்லை. பல நிழற்படங்களின் தொடர் இயக்கமாக திரைப்படத்தைப் பார்க்க முடியும். இயங்கியல் சிலோஜிசத்தை மறுக்கவில்லை. மாறாக எவ்வாறு நாம் சிலோஜிசத்தை தொகுப்பதன் மூலம் எமது புரிதலை நிரந்தர இயக்கத்தில் இருக்கும் யதார்த்தத்திற்கு நெருக்கமாக்குவது என்பதைப் பயிற்றுவிக்கிறது இயங்கியல்.

கெகல் தனது தர்க்கம் முலம் பல விதிகளை நிறுவியிருக்கிறார். அளவு பண்பாக மாறுதல், முரண்களுக்கூடான வளர்ச்சி, உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்குமான முரண், தொடர்ச்சியின் இடையீடுகள், நிகழ்வின் சாத்தியப்பாடு எப்படித் தவிர்க்கமுடியாத நிகழ்வாக மாறுகிறது, போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில அடிப்படைக் கருமங்களுக்கு எவ்வாறு சிலோகிசம் உபயோகப்படுகிறதோ அதேபோல் மேற்கண்ட கோட்பாடுகளும் சிந்தனை முறையில் முக்கியமானவையே.

மார்க்சுக்கும் டார்வினுக்கும் முன் இதை எழுதினார் கெகல். பிரஞ்சுப்புரட்சி சிந்தனை முறையில் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பின் பலனாக கெகலால் விஞ்ஞானத்தின் பொது இயங்கு போக்கை முன்னனுமானிக்க முடிந்தது. கெகல் மேதைத்துவத்துடன் இந்த முன்னனுமானத்தை ஏற்படுத்தியிருப்பினும் அவரது கருத்துக்களில் கருத்தியல் தோய்ந்திருந்தது. முடிவான யதார்த்தத்தின் கருத்தியல் நிழல்களின் அடிப்படையில் இயங்கினார் கெகல். இந்த கருத்தியல் நிழல்களின் இயக்கமானது அடிப்படையில் புறப்பொருளின் இயக்கத்தையே பிரதிபலிக்கிறது என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார்.

நாமிதை இயங்கியற் பொருள்முதல்வாதம் என்று அழைக்கிறோம். இதன் அடிப்படை ‘சொர்க்கத்தில்’ நிர்ணயிக்கப்பட்டதாகவோ –அல்லது எமது ஆழ்மன ‘சுதந்திர வேட்கையின்’ ஆழத்தில் இருந்து தோன்றுவதாகவோ இல்லாமல் – இயற்கையின் புறவய யதார்த்தம் சார்ந்து நிர்ணயிக்கப்படுகிறது. பிரக்ஞை அற்ற ஒன்றிலிருந்து தான் பிரக்ஞையே தோற்றமடைகிறது. பௌதிகவியலில் இருந்துதான் உளவியல் தோன்றுகிறது. சடத்துவத்தில்7 இருந்துதான் உயிரியல் தோன்றுகிறது. நெபுளா வாயுக் கூட்டத்தில் இருந்துதான் சூரியக் குடும்பமே உருவாகிறது. இந்த வளர்ச்சியின் எல்லாப்படிகளிலும் அளவு மாற்றம் பண்பாக மாறுவதை அவதானிக்கலாம். தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கத்தின் வெளிப்பாடாகவே இயங்கியற் சிந்தனை உட்பட எமது சிந்தனைகள் அனைத்தும் எழுகின்றன.

இயங்கியற் சிந்தனை முறைக்குள் கடவுளுக்கோ- சாத்தானுக்கோ- சாவற்ற உயிருக்கோ-நிரந்தரமான விதிகள் அல்லது அறம்- ஆகியவற்றுக்கு இடமில்லை.இயங்கியற் சிந்தனை இயற்கையின் இயங்கியலில் இருந்து எழுவதால் புறப்பொருளின் பண்பு சார்ந்ததாக இருக்கிறது. இயங்கியலின் பெருமைக்குரிய வெற்றிகளில் ஒன்று டார்வினிசம் -அது அளவு பண்பாக மாறுதலின் அடிப்படையைக் கொண்டு உயிர்களின் பரிணாமத்தைக் விளக்கியது. இரசாயன மூலகங்களின் நிறைவாரி ஒழுங்குபடுத்தல் பற்றிய கண்டுபிடிப்பு – எவ்வாறு ஒரு மூலகம் இன்னொரு மூலகமாக மாறுகிறது என்ற கண்டுபிடிப்பு – இயங்கியலின் இன்னுமொரு பெருமைக்குரிய வெற்றியாகும். இந்த மாற்றங்கள் (உயிர்களின், மூலகங்களின்) பற்றிய அறிதல் வகைப்படுத்தலுடன் நெருங்கிய தொடர்புடையது.

உயிர்கள் மாற்றமடையாது என்பதை அடிப்படையாகக் கொண்டே லினியஸ் தொகுப்பு (18ம் நூற்றாண்டு) உயிர்களின் வெளிப்புறத் தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்தலைச் செய்தது. குழந்தைப்பருவ தாவரவியல் – குழந்தைப்பருவ தர்க்கவியலுக்கு நிகரானது. எமது சிந்தனையும் உயிர்களைப் போலவே பரிணமித்து வந்துள்ளது. மாறாது நிலைத்த உயிர்கள் என்ற கருத்தை திட்டவட்டமான முறையில் கேள்விக்குள்ளாக்கியது -மற்றும் எல்லாத் தாவரங்களும் வரலாற்றில் பரிணமித்து வந்திருக்கின்றன போன்ற ஆய்வுகள் தான் சரியான விஞ்ஞான முறை வகைப்படுத்தலுக்கு வழிகோலியது.

ஒரு பிரக்ஞா பூர்வ இயங்கியல்வாதி என்ற அர்த்தத்தில் மார்க்ஸ்- டார்வினில் இருந்து மாறுபட்டவர். மனித சமூகத்தை வகைப்படுத்தும் முறையை – உற்பத்திச் சக்திகள் வளர்ந்த முறையை –உடைமை பற்றிய உறவுகளை- போன்று சமூகத்தின் இயற்கூறுகளை விஞ்ஞான முறையில் வகைப்படுத்தும் முறையை மார்க்ஸ் கண்டுபிடித்தார். இன்றுவரை பல்கலைக்கழகங்களிற் பெருகும் சமூகம் மற்றும் அரசு பற்றிய புரிதல்களுக்கு மாற்றீடான பொருள்முதல்வாத இயங்கியல் வகைப்படுத்தலை மார்க்ஸ் உருவாக்கினார். மார்க்சின் வழிமுறை ஊடாக மட்டுமே தொழிலாளர் அரசு பற்றி புரிந்துகொள்வதோ அது எப்போது சாயும் என்பது பற்றி தெரிந்துகொள்வதோ சாத்தியம்.

மேற்சொன்னவை ‘புலமைசார்’ விளக்கமோ அல்லது ‘மாயத்தன்மை’ கொண்ட விளக்கங்களோ அல்ல. இயங்கு விதிகளை எமது சமகால விஞ்ஞான முறைச் சிந்தனையில் வெளிப்படுத்துகிறது இயங்கியல் தர்க்கம். பொருள்முதல்வாத இயங்கியலுக்கு எதிரான போக்கு இன்று பழைய கதை. அதற்கான உதிர்ப்பு – குட்டி முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தில் இருந்தும், சுயம்விரும்பும் பல்கலைக்கழக அன்றாட வாதிகளிடமிருந்தும், மறுபிறப்பு பற்றிய நப்பாசையில் இருந்தும் எழுகிறது.

மொழிபெயர்பாளர் குறிப்புகள்.

1. ‘The ABC of Materialist dialectics’ – இதை ‘இயங்கியற் பொருள்முதல்வாதத்தின் அகரவரிசை’ என்று மொழிபெயர்ப்பதே சரியாக இருக்கலாம். பதிலாக அடிப்படை என்ற சொல்லை இலகுவாசிப்புக்குக்காக உபயோகித்திருப்பினும் இது மூலத்தின் கருத்தை திரிக்கவில்லை என்பதை அவதானிக்க. 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விவாதத்தின் முன் அறிதல் அற்ற வாசிப்புக்கு தகுந்தபடியும் – முடிந்தளவு முலப்பிரதியின் உள்ளடக்கத்தைப் பேணிக்கொண்டும் இலகு வாசிப்புக்கு ஏற்றவகையில் இந்த மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

2. அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் 1930 களின் பின்பகுதியில் எழுந்த விவாதங்கள் முற்றி கட்சிக்குள் திட்டவட்டமான உட்பிரிவுகள் ஏற்பட்டது. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவம் முதற்கொண்டு கட்சி பற்றிய சந்தேகங்களுடன், மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்துருக்களையும் சிலர் கேள்வி கேட்டனர். மார்க்சியம் பற்றிய சரியான அறிதல் இன்மையில் இருந்து எழுந்த இந்த குட்டி-முதலாளித்துவ எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் ‘சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் குட்டி-முதலாளித்தவ எதிர்ப்பு’ என்ற கட்டுரையை 1939 டிசம்பரில் ட்ரொட்ஸ்கி எழுதினார். அது பின்னர் 1942ல் வெளியிடப்பட்ட மார்க்சியத்துக்காக – In Defence of Marxism- என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

3. Formal Logic – என்பதை ‘முறைமை ஏரணம்’ என்றும் மொழிபெயர்ப்பர் –வேறு உருப்படியான மொழிபெயர்ப்பு இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
4. Syllogism -தர்க்கத்தின் வரலாற்றில் முதலாவது ‘உய்த்தறியும்’ தர்க்கமுறையை சிலோஜிசம் என்பர். சிலோஜிசம் இரண்டு கூற்றையும் அதிலிருந்து உய்த்தறியும் முடிவையும் கொண்ட மூண்று ‘தீர்மானங்களைக்’ கொண்டது. உதாரணம்: எல்லா மனிதரும் சாகக்கூடியவர்களே கேயஸ் ஒரு மனிதன் ஆகையால் கேயஸ் சாகக்கூடியவன் – இந்த தர்க்கத்தின் போதாக்குறையை கெகல் கடுமையாக சாடியிருப்பார்.
5.Cone bearings
6.Tolerance – ஒப்புரவு. ஓப்புரவு என்ற சொல் தினசரிப் பழக்கத்தில் இல்லாத சொல். இருப்பினும் சரியான விளக்கத்தை தர ஒரு தனிச்சொல் தேவை-வேறு பொருத்தமான சொற்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
7. அசேதன- என்றும் மொழிபெயர்ப்பர்

பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படைகள்.1(1939)
(மார்க்சியத்துக்காக- என்ற தொகுப்பில் இருந்து 2 -முதற்பதிப்பு 1942)-லியோன் ட்ரொட்ஸ்கி (மொழிபெயர்பாளர் : சேனன்)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *