உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்

உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது? நீ ஆசைப் பட்ட உச்சக் கட்ட போராட்டங்கள் இனித்தான் வரப்போகிறது. அங்கு உன் நினைவுகள் வாழும். அவசர அவசரமாய் முடிந்து போய் விட்ட உன் இழப்பை தாங்க முடியாது தவிக்கும் தோழர்கள் சாட்சி உன் போராட்ட வாழ்வின் முழு இருத்தலுக்கு.

இங்கிலாந்தில் படிக்கும் காலத்தில் சோஷலிசக் கட்சி உறுப்பினர்களை ஒரு கூட்டத்தில் சந்தித்த கணத்தில் இருந்து சஜித் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறி விட்டது. எந்த தயக்கமும் இன்றி அதுவரை காத்திருந்தவன் போல் சோசலிச கட்சியில் இணைந்து கொண்டான் சஜித். அத்தருணம் –பத்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்- சஜித்தை சந்தித்த பொழுது சமூக போராட்டத்துக்கு சரியான ஆள் ஒருத்தன் கிடைத்திருக்கிறான் என மனம் பூரித்தது அப்படியே பச்சையாக இருக்கிறது. வாட்பாட் கிளையில் தன்னை இணைத்துக் கொண்ட தருணத்தில் இருந்து சஜித் புதிய உயிர்ப்புடன் தலை கீழாக மாறி விட்டான். எல்லா போராட்டங்களிலும் ஈடுபடுவது, மிதவாதிகளுடன் மோதுவது என வாட்பட் கிளை விரிவடைவதில் முக்கிய பங்காற்றி பின் இரண்டு கிளைகளைப் பொறுப்பாக முன் நடத்தி அயராது உழைத்தவன் சஜித். இருக்க நிற்க விடாமல் தோழர்களோடு உரையாடுவது – போகிற  வருகிற எல்லோரையும் அமைப்புக்கு வென்று எடுக்க வேண்டும் என துடிப்பது – சஜித் பற்றி தோழர்களால்  மறக்க முடியா நினைவுகள்.

சோசலிச கட்சியும் ரயில் தொழிலாளர் தொழிற்சங்கமும் இணைந்து ஆரம்பித்த தொழிற் சங்க – சோசலிஸ்ட் தேர்தல் கூட்டை கட்டி நிமிர்த்தி விட வேண்டும் என துடியாய் துடித்தவர்களில் அவனும் ஒருவன். தேர்தலில் நின்ற பொழுது அந்த பகுதியில் சஜித்தின் ஆக்கினைக்கு உட்படாத தோழர்கள் கிடையாது. சோஷலிச கட்சி தோழர்கள் மட்டுமின்றி ஆதரவான எல்லோரையும் கூட வருத்தி எடுத்தவன், இழுத்து வந்து தேர்தலில் நிறுத்த முயன்றான். தொழிலாளர்களுக்கான தேர்தல் பிரதி நிதித்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதில் கடுமையான ஆர்வம் சஜித்துக்கு இருந்தது. படித்துக் கொண்டும் அதன் செலவு மற்றும் இதர செலவுகளை பார்க்க வேலை செய்து கொண்டும் இருந்த அதே சமயம் தான் இத்தனை வேலைகளையும் செய்தான். இத்தகைய தோழர்களின் அர்ப்பணிப்பால் தான் புரட்சிகர கட்சி தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது. சோசலிச கட்சியின் முழு நேர பணியாளனாக இயங்க வேண்டும் என்பது அவனது நோக்கமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஒரு புரட்சிகர சக்தியை நிமிர்த்தி விட வேண்டும் என்ற வேட்கை அதை விட அதிகமாக இருந்தது.

கட்சி வேலை என்பது வெறுமனே பேப்பர் விற்பது அல்லது கட்சி கூட்டங்களில் – கட்சி ஒழுங்கமைக்கும் போராட்டங்களில் கலந்துகொள்வது மட்டுமல்ல. ஒடுக்கப்படும் மக்களை – தொழிலாளர்களை எவ்வாறு ஒன்று படுத்துவது – எவ்வாறு எமது பலத்தை திரட்டுவது என்ற வேலை சம்மந்தப்பட்டது. கட்சியின் முன்னோக்கு – செயற்திட்டம் ஆகியவற்றில் நேரடியாக இணைந்து அதனை வளர்ப்பது – மாற்றுவது – செயற்படுத்துவது என அதன் உயிர்நாடியில் இணைவதுதான் கட்சி வேலை என்பதை தெளிவாக தெரிந்து இயங்கிய தோழன் சஜித்.

இதன் பின் செயற்குழு கூட்டங்களில் பங்கு பற்றுவது – கட்சியின் செயற்பாட்டு நடவடிக்கைகளை எவ்வாறு வடிவமைப்பது பற்றிய அடிபாடுகள் என அவனது பங்களிப்பு துரித கதியில் வளர்ச்சி அடைந்து விட்டது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திய சோஷலிச கட்சி உறுப்பினர்களில் சஜித்தும் ஒருவர். சஜித் இருக்கும் இடத்தில் இருந்து லண்டன் வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். நிறைய பணம் செலவாகும். அப்படி இருந்தும் முடிந்தளவு எல்லா கூட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் கலந்து கொள்வான். தமிழ் சொலிடாரிட்டியின் தலைமை உறுப்பினராக அவன் இயங்கிய காலத்தில் அவன் தமிழ் நாட்டுப் பையன் என்பது இங்கு பலருக்கும் தெரியாது. எந்த நாடு என்ற ஒரு சொட்டு மாறுபாடுகளும் தோழர்கள் மத்தியில் கிடையாது. ஈழத்து – தமிழ் நாட்டு தோழர்கள் மத்தியில் இருக்கும் தோழமையை பார்த்து அதிர்ந்தவர்கள் பலர். சஜித் அதன் ஒரு சின்னம்தான். தமிழ் நாட்டு புரட்சியை நடத்த தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம் என தோழர்கள் இவரை விளையாட்டாக அறிமுகப்படுத்துவர். ஆனால் சஜித் தமிழ் நாடு திரும்பிச் செல்வதில் ஆரம்பத்தில் எமக்கு எந்த உடன்பாடும் இருக்கவில்லை. தமிழ் நாட்டில் ட்ரொட்ஸ்கிஸம் பற்றி கண்ட கண்ட கட்டுக் கதைகள் தான் உண்டு. அங்கு போனாய் என்றால் சரியாக கஷ்டப்படப் போகிறாய் என அவனோடு போட்ட சண்டைகள்தான் அதிகம். மார்க்சிய விஞ்ஞானம் மங்கி இருக்கும் சூழலில் உன் தோற்றத்தையும் பேச்சையும் வைத்து உன்னை ஒதுக்கி விடுவார்கள் என ஒருமுறை சொன்னதும், தோற்றத்தை மாற்றுவது எப்படி என பேசத் தொடங்கி விட்டான். சமூகச் செயற்பாடு தாண்டி சிந்திக்க முடியாத கேடு அவனையும் பற்றி பிடித்துக் கொண்டு விட்டது. இறுதியில் அவன் தமிழ் நாடு திரும்புவது என முடிவாகிய பின் ஒரு சில மாதங்களாவது சோஷலிச கட்சி தலைமையகத்தில் இணைந்து வேலை செய்யவேண்டும் என குடுத்த அழுத்தத்தின் பின் சில மாதங்கள் தங்கிய காலத்தில் லண்டன் தோழர்கள் பலருடன் இரண்டற கலந்து விட்டான். இவன் என்ன இவ்வாறு பேப்பர் விற்கிறான் என ஒரு தோழர் வியந்து கேட்டார். துண்டு பிரசுரம் கொடுக்கும் நமது தோழர்கள் மேல் காறித் துப்பி விட்டு செல்லும் வில்லங்கங்கள் நிறைந்த இந்தியாவில் புரட்சிகர வேலை செய்வதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த இவனுக்கு அது அல்வா சாப்பிடும் வேலை என விளக்கிச் சிரிப்போம்.

எத்தனை சிரிப்புகள். எத்தனை அடிபாடுகள். மாலைகள் கழிவது தெரியாமல் கழியும். இரவிரவாகவும் நடக்கும் கார சார உரையாடல்கள். காலையும்தான். எனது வீட்டை சத்திரம் ஆக்கியதில் சஜித்துக்கு முதற் பங்குண்டு. அங்கு தங்கித்தான் தோழர்கள் அடிபாடுகளை நிகழ்த்துவர். ஒருமுறை அத்தகைய இரவு உரையாடல் முடித்து வீடு திரும்ப நடந்து கொண்டிருத்த தோழர்கள் இருவர் வழியில் அதிர்ந்து நின்று விட்டனர். அங்கிருந்த ஒதுக்கு புறம் ஒன்றில் அந்த அதிகாலை நாலு மணிக்கு கடும் குளிருக்குள் நின்றபடி நானும் சஜித்தும் கார சாரமான உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தோம். நின்ற தோழர்களையும் உரையாடலுக்கு இழுக்க முயல ஓடித் தப்பி விட்டார்கள். மாட்டினால் அதோ கெதி தான் என்ற தெளிவு அந்த நித்திரை தூக்கத்திலும் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

தமிழ் நாடு திரும்பியதும் சாதிக்க வேண்டிய வேகம் சஜித்தை இயந்திர கதியில் இயங்கும் செயற்பாட்டளனாக்கியது. உதிரியாக நின்ற தோழர்கள் ஒன்று பட்டனர். புதிய சோசலிச இயக்கத்தின் தலைமை உறுப்பினராக அவன் சுழற்சியை ஆரம்பித்த தருணத்தில் இருந்து பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. அவதூறுகளை எதிர் கொள்ளவும் மார்க்சிய அடிப்படைகளை பாதுகாக்கவும் தயார்ப்படுத்திய அதே வேளை பல்வேறு சக்திகளை அமைப்பாக திரட்டும் வேலையையும் செய்ய வேண்டி இருந்தது. குறிப்பாக டிராட்ஸ்கிஸம் பற்றி பலர் மத்தியில் இருந்த சிறுபிள்ளை கருத்துக்களை கடுமையாக எதிர் கொள்ள வேண்டி இருந்ததது. மிக பிற்போக்கு தமிழ் தேசிய உணர்வுகளையும் எதிர் கொள்ள வேண்டி இருந்தது. தமிழ் நாட்டில் – இந்தியாவில் இருக்கும் ‘புரட்சிகர’ அமைப்புக்கள் மத்தியில் பரவி வேரூன்றிக் கிடக்கும் அமைப்பு கட்டும் முறைககளை மீறி நின்று இயங்குவது, மலையைப் பிரட்டும் வேலை. கட்சி சனநாயகத்தை பாதுகாப்பது- முன்னோக்கை வரைவதில் சர்வதேச பார்வையின் அவசியம் என தோழர்கள் தமிழ் நாட்டுக்குள் முடங்க கூடாது என்ற உரையாடல் பல முரண்களையும் ஏற்படுத்தியது. அந்த அடிபாட்டிலும் தோளில் கை போட்டபடி பேசும் தோழன் அவன்.

அவனிடம் இருந்த மனிதாப உணர்வை குறிப்பிடாமல் இந்த சிறு நினைவில் தோய்வதை முடிக்க முடியாது. அவனைப் பல முறை நண்பர்கள் தோழர்கள் கலாய்ப்பார்கள். பல சிரமத்தின் மத்தியில் அவனை தேத்தண்ணி போட வைப்பார்கள். ஆனால் ஒரு தோழருக்கு ஒன்று என்றால் அவன் எப்படி துடிப்பான் – என்ன என்ன எல்லாம் செய்வான் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அந்த அன்பையும் பரிவையும் உள்வாங்கிய உள்ளங்கள் உன் மறைவால் அதிர்ந்து உலுக்கப்பட்டு விட்டது தோழர். உனது போராட்ட கனவுகள் தொடரும். அங்கு உன் நினைவு வாழுதலும் தொடரும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *