இறையாண்மை இல்லாத இலங்கை அரசு
இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பதோடும் சம்பந்தப்பட்டது. பிரஞ்சுப் புரட்சி வரையறுத்த இறையாண்மையின் முழுமைத் தன்மை உலகின் எந்த தேசிய அரசுக்கும் கிடையாது. பூகோளத்தை ஒன்றினைத்த முதலாளித்துவ பொருளாதார நடைமுறை தேசிய எல்லைகளை தாண்டிச் செல்ல முடியாத முரணில் சிக்கி கிடக்கிறது. இத்தகைய முரண்கள் உலக வளத்துக்கான போட்டியைக் கூர்மைப் படுத்தி உலக அரசியல் நிலவரத்தை தொடர்ந்து மறுசீரமைவுக்கு உள்ளாக்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு பிறகு எழுந்த பல்துருவ நிலைமை ஒரு குறிப்பிட்ட சக்தி நிலை கொள்ளும் தன்மையைத் தகர்த்து ஆதிக்கம் மையம் கொள்ளும் புள்ளியை அவ்வப்போது நகர்த்தி வருவதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது. தெற்காசியாவில் – குறிப்பாக இலங்கையில் இந்த இழுபறியின் வெளிப்பாட்டை தெளிவாகப் பார்க்கலாம். முதலாளித்துவ வாரலாற்றில் மிக நீண்ட நெருக்கடியாக கருதப்பட்டும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து உலகப் பொருளாதாரத்தை சீன, இந்திய வளர்ச்சி மீட்கும் என்ற இரைச்சல்கள் ஓய்ந்து விட்டன. மீண்டும் ஒரு வீழ்ச்சி மேலதிக நெருக்கடிகளை உருவாக்கும் சாத்தியம் என்ற நிலையில் பொருளாதாரங்களும் அரசியலும் தேசிய எல்லைகளை நோக்கி முடங்குவதைப் பார்க்கிறோம். இத்தகைய உலகமயமாதலின் தலைகீழ் திருப்பத்தில் பொருளாதார வலுவற்ற சிறு நாடுகளின் நவ காலனித்துவ தன்மையானது மேலும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இலங்கை போன்ற நாடுகளில் இறையாண்மை என்ற பேச்சுக்கே இடமில்லை.
சீன உற்பத்தியின் வேகம் உலக மூலப் பொருட்ககளை நோக்கிய அவர்தம் வேட்கையை ஊதிப் பெருக்கி உள்ளது. புதுமையான உற்பத்தி முறையின் ஆத்திகத்துக்கு மேற்குலகுடன் போட்டியிடும் சீனாவுக்கு போட்டியாக இந்திய உற்பத்திமுறை வளர்ச்சியடையவில்லை. இருப்பினும் தெற்காசியாவில் வரலாற்று ரீதியான ஆளுமை மற்றும் இந்திய அரசின் மேற்குலக நெருக்கம் ஆகியன தெற்காசியாவில் சீனாவின் ஆத்திகத்துக்கு பெரும் தடையாக இருந்து வருகிறது. உலக வளம் சீனாவுடன் இணைவதற்கு கடல்வழி வணிகத்தின் திறன் மற்றும் கட்டுப்பட்டை அதிகரிக்கும் கட்டாயம் சீனாவுக்கு உள்ளது. வணிகத்துகான தூரத்தைக் குறைப்பது, மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் விரைவையும் அளவையும் அதிகரிப்பது ஆகிய நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி, பல ட்ரில்லியன் டாலர்கள் செலவில் “ஒரு சாலை ஒரு பெல்ட்” என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது சீனா. தரை வழிக்குள் வணிகத்தை மட்டுப்படுத்துவது சீனாவின் வளர்ச்சியை முடக்கும் அபாயம் இருப்பது அவர்களுக்கு தெரியும். உலக பொருளாதாரத்தின் சந்தையின் பெரும்பகுதியும் பல்வேறு வளங்களும்- ஆசியாவுக்கு வெளியில் நிலை கொண்டிருப்பது, மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடிகள் போன்ற காரணிகள் சீனாவின் வணிக வழிப்பாதையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய உள் நிலப்பகுதி துறைமுகமான டுசிபெர்க் துறைமுகத்தின் பாவனை சீனாவின் வளர்ச்சியால் திணறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். 200 000 சதுர அடிக்கு மேற்பட்ட பகுதிகளை எடுத்து விரிவாக்கம் செய்தும் சீன வணிகத்தின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாத நெருக்கடியை இந்த துறை முகம் சந்தித்துள்ளது. கடல்வழி “பட்டுப் பாதை” ஒன்றை நிறுவுவதன் முக்கியத்துவம் ஊதிப் பெருத்த நிலையின் காரணத்தால் பசுபிக் மற்றும் இந்து சமுத்திர சிறு தீவுகள் மற்றும் அவர்தம் துறை முகங்கள் முக்கியம் பெற்றுள்ளன.
இந்த அடிப்படையில் நீண்ட கால திட்டமிடல்களுடன் இயங்கும் சீனா இலங்கை அரசியலில் நேரடியாக தலையிட்டு வருகிறது. இலங்கைக்குள் தமது நலன்சார் ஸ்திரத் தன்மை உருவாகுவதற்கும் இந்திய தலையீட்டை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை முடித்து வைக்கும் யுத்தத்தை முடுக்கி விடுவதற்கு பின் இலங்கை –சீன உறவு இருப்பதை இன்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கு எதிர் நிலையில் இருக்கும் இந்திய அரசு கொழும்பில் தனது செல்வாக்கை அதிகரிக்க இன்னுமொரு திசையில் இருந்து யுத்தத்துக்கு ஒத்தூதியது.
ஈழப் படுகொலையுடன் 2009ல் முடிந்த யுத்தத்தின் பின்பு நாட்டைப் பிரிக்கும் அடிபாடு ஆரம்பித்த போதுதான் சீனாவின் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. யுத்தம் முடிந்த கையுடன் எழுந்த பொருளாதார நெருக்கடியை பாவித்து தனது செல்வாக்கை நிறுவ மேற்குலக சக்திகள் வேகமாக நகர்ந்தன. ஐ.எம்.எப் உடனடியாக $1.5 மில்லியன் டாலர்களை கடன் வழங்க முன் வந்தது. இலங்கை அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததைப் பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த திசையில் இலங்கை அரசியல் நகரவில்லை. ஏற்கனவே உருவாகியிருந்த சீனாவில் செல்வாக்குப் பற்றி பலரும் அறிய முடியாதபடி வழமை போல் அவர்தம் நடவடிக்கைகள் இரகசியமாகவே இருந்தது. இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தின் இயற்கை சார் வரலாற்று முக்கியத்துவம் இன்று மிகக் குறைவு. தமது கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம் ஒன்றின் தேவைக்காக திருகோணமலைக்கான புதிய போட்டியை அவர்கள் தொடக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. மகிந்த ராஜபக்ச அரசை தமக்கு நெருக்கமாக கொண்டு வந்த சீன அரசு அவரது பிறப்பிடமான கம்பான் தோட்டையில் துறை முகமும் அதற்கு நெருக்கமாக மாத்தளையில் ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் கட்ட கடன் வழங்கியது. அவ்வாறு ஆரம்பித்த கடன் வலையில் விழுந்த இலங்கை அரசு அதில் இருந்து மீள முடியாத பள்ளத்துக்குள் இன்று இறங்கி உள்ளது.
இது மட்டுமின்றி கொழும்பில் துறைமுக நகரம் ஒன்றை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டில் கட்டும் வேலையையும் சீனா முன்னெடுத்தது. அங்கு சீனா வைக்கும் சட்டம் மட்டுமே செல்லும். இலங்கை அரசின் எந்த சட்டமும் – கட்டுப்பாடும் செல்லுபடியாகாது. ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அந்த நகரத்துக்கு வேலைக்கு என வந்து போகலாமே தவிர அந்த நகரத்தில் யார் வாழ்வது என்பதில் தொடங்கி அங்கு புழக்கத்துக்கு வரும் பணம் உட்பட அனைத்தும் சீன நிறுவனத்தின் கையிலேயே இருக்கும்.
இலங்கை சார் மேற்குலகின் நிலைப்பாடு மாற சீன நடவடிக்கைகள் காரணாமாக இருந்தன. சீனாவை தமக்கு நேரெதிரான பொருளாதார போட்டி உள்ள நாடாகவும், முதலாளித்துவ அமைப்பு நடைமுறைக்கு எதிரானதாகவும் கருதும் ஐரோப்பிய கமிசன் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வளர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஐரோப்பிய கமிசன் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை 2010ல் ரத்துச் செய்தது. ஐக்கிய நாடு சபை மனித உரிமை என்ற அச்சுறுத்தலை ஆரம்பித்தது. ஒபாமாவின் “பசுவிக் நோக்கித் திரும்புதல்” திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தின் பெரும்பகுதி பசுபிக் நோக்கித் திரும்பி இருந்த நிலையில் நேரடி போட்டி இலங்கைக்குள் முறுகல் நிலையை அடைந்தது.
மேற்குலகின் நலன்கள் அவர்களுக்கு நம்பகத்தன்மையான இந்திய அரசின் ஊடாகவும் கசிவதை நாம் பார்க்கலாம். வடக்கு மக்களின் தேசிய அபிலாசைகளை தமக்கு சாதகமாக உபயோகிக்கும் வரலாற்றைத் தொடரும் இந்திய அரசு தமது செல்வாக்கை வடக்கில் அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறது. காங்கேசன் துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியனவற்றயை தமது கட்டுப் பாட்டில் இயங்க வைப்பதற்கு ஆவன செய்து வருகிறது இந்திய அரசு. இது மட்டுமின்றி திருகோணமலை துறைமுகத்தை தமது கட்டுப் பாட்டில் கொண்டு வரும் புதிய பேச்சு வார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளது. இந்தத் துறை முகத்துக்கு அருகாமையில் சம்பூரில் ஒரு அணு மின் நிலையத்தை நிறுவும் முயற்சியை பல்வேறு போராட்டங்களையும் தாண்டி நிறைவேற்றி வருகிறது இந்திய அரசு.
இவ்வாறு இலங்கை வடக்குப் பகுதி இந்தியாவுக்கும் தெற்குப் பகுதி சீனாவுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்ட துருவ நிலையின் கடுமையான விசைகளில் இழுபட்ட நிலையில் இருக்கிறது இலங்கை அரசியல். வெவ்வேறு அரசியல் அமைப்புக்கள் இந்த விசைகளின் திசைகளை தீர்மானிக்கும் நிலை நோக்கி இழுபட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுதாக இந்திய நலனைப் பிரதி செய்யும் நிலைப்பட்டை எடுத்தது. இந்திய அரசு முதலீடு செய்ய வரவேண்டும் என அதன் தலைவர் சம்மந்தன் வெளிப்படையான ஆதரவை வழங்கி வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சி ஐ,எம்.எப் மற்றும் உலக வங்கியின் செல்வாக்கை நேரடியாக பிரதிபலிக்கிறது. ராஜபக்ச குடும்பம் சீன அரசின் பலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக முக்கியத்துவம் அடைந்துள்ளது.
இலங்கைக்குள் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்கு இலங்கை அரசுக்கு நேரெதிரான நிலைப்பட்டை இந்தியாவோ அல்லது மேற்கோ எடுக்காது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அரசுடன் ஈடுபாடை அதிகரித்து அதன் திசையை மாற்ற வேண்டும் என்பதே அவர்கள் தொடர் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்தியா எதிர் சீனா அல்லது மேற்கு எதிர் சீனா என்ற தர்க்க கணக்குகள் போட்டு அதிலிருந்து தவறான முடிவுகளுக்கு நாம் வந்து விடக்கூடாது (கே ரி கணேசலிங்கம் போல்). இலங்கை அரசுக்கூடாகத்தான் அவர்கள் தமது செல்வாக்கை நிறுவ முயற்சிக்கிறார்களே தவிர இலங்கை அரசை உடைத்து அல்ல. ஈழ மக்களின் தேசிய அபிலாசைகளை முன்னெடுப்போர் தர்க்க வலைக்குள் விழுந்துவிடக் கூடாது. மக்களின் மனித உரிமை என்பது இந்தச் சக்திகளைப் பொறுத்தவரை வெறும் அழுத்தம் தரும் ஆயுதம் மட்டுமே. சீனாவைப் போலவே இந்திய அரசும் இலங்கை அரசியலில் நேரடியாகத் தலையிட்டு அரசை தம்பக்கம் இழுக்கும் முயற்சிகளை செய்து வருகிறது.
அரசதிகாரம் 2015 தேர்தலின் போது மாறி அது ஐக்கிய தேசியக் கட்சியின் கையில் வருமாயின் அது மேற்குலகின் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அதை உறுதிப் படுத்தும் படி சீன கட்டுப்பாட்டை தான் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக இக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரம் செய்தார். இதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பணத்தை வாரி இறைத்தது சீன அரசு. கொழும்புத் துறைமுக நகருக்கு ஒதுக்கப்பட்ட பணம் எவ்வாறு ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்துக்கு வாரி இறைக்கப்பட்டது என்பதை நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகை பல்வேறு ஆதாரங்களுடன் வெளியிட்டிருகிறது. சீனாவின் தூதரகம் பிரச்சார வேலைகளில் நேரடியாக தலையிட்டது. வழமைக்கு மாறாக – சட்டத்துக்கு புறம்பாக தூதரகரே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தார். குறைந்தபட்சம் $7.6 மில்லியன் டாலர்கள் ராஜபக்சவின் பிரகுசாரத்துக்கு வழங்கப் பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன் $3.7 மில்லியன் டாலர்கள் செக்காக பலருக்கு வழங்கப் பட்டிருக்கிறது. பிரச்சார ரீசேட்டுக்களுக்கு என $678 000 டாலர்களும், ஆதரவாளர்களுக்கு பொருட்கள் வழங்க என $297 000 டாலர்களும் சீன கம்பனியிடம் இருந்து வழங்கப் பட்டிருப்பதை பத்திரிகைகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. ராஜபக்ச ஆதரவு பிக்கு ஒருவருக்கு மட்டும் $38000 டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. சனாதிபதியின் இருப்பிடத்தில் இருந்து பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு மட்டும் என $1.7 மில்லியன் டாலர்கள் வழங்கப் பட்டுள்ளது.
யுத்தக் கொடுமை மற்றும் ஊழல் ஆகியன ராஜபக்ச குடும்பத்தின் மேல் பெரும் எதிர்ப்பை வளர்த்து விட்டிருந்ததை பணத்தால் மட்டும் மாற்ற முடியவில்லை. ராஜபக்சவுக்கு எதிரான தமிழ் பேசும் மக்களுடன் ஊழலுக்கு எதிரான சிங்கள மக்களையும் இணைக்கும் சூத்திரம் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டத்தை முன் வைத்தது அவர்களுக்கான வெற்றி சந்தர்ப்பத்தை அதிகரித்தது. தவிர நூறுநாள் திட்டம் என மக்களுக்கு சில சலுகைகள் வழங்க இருப்பதாக ஒரு திட்டம் முன் வைக்கப் பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை ஒழிக்கப்படும் எனவும் தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் உறுதிகள் வழங்கப்பட்டது. இருப்பினும் இது மட்டும் அவர்களின் வெற்றியை உறுதி செய்யப் போதுமானதாக இருக்கவில்லை. ராஜபக்ச கட்சிக்குள் உடைவை ஏற்படுத்தி மைத்திரி தலைமையில் பலரைப் பிரித்தெடுக்கவும் கூட்டமைப்பின் முழு ஆதரவை வென்றெடுக்கவும் இந்திய மற்றும் மேற்குலக பணம் வாரி இறைக்கப்படதாக பேசப்படுவது நம்பக் கூடிய விசயமே. இருப்பினும் இவற்றுக்கான சரியான ஆதாரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் மைத்திரி உடைவில் இந்திய அரசின் கை உண்டு என்பதை இன்று பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவிய ராஜபக்ச அரசதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் சூழ்ச்சியில் இறங்கிய தருணம் அதை தடுப்பதற்கு இந்தியத் தலையீடு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இத்தத்ருணத்தில் சீன அணுஆயுத நீர்மூழ்கி ஒன்று கம்பான்தோட்டை வந்ததாகவும் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கத்தான் இந்திய போர் விமானங்கள் கொழும்பில் தாழ்வாக பறந்து எச்சரிக்கை விட்டதாகவும், அமெரிக்க ஆயுதக் கப்பல் இலங்கை நோக்கித் திரும்பி நகரத் தொடங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு சீன ஆதிக்கத்துக்கு எதிராக அள்ளுவேன் புடுங்குவேன் என்ற ஐ.தே கட்சியின் கதைகள் எல்லாம் விரைவிலேயே முடிவுக்கு வந்து விட்டது. சீனக் கடன் சுமையில் இருந்து மீளுவதோ அல்லது அவர்கள் நலனுக்கு எதிராக கொழும்பு துறைமுக நகர் கட்டுப்பாட்டை எடுப்பதோ சாத்தியமில்லை என்பது விரைவில் தெளிவாகி விட்டது. இருப்பினும் மேலும் தாம் கடன் வழங்கத் தயார் என்ற ஐ.எம்.எப் பல்வேறு கட்டுப்பாடுகளைத் திணித்தது. அவர்தம் திசையில் நின்ற ஐ.தே.க முன் வைத்த பட்ஜெட் அனைத்தும் ஐ.எம்.எப் கோரிக்கைகளை உள்வாங்கியதாகேவே முன் வைக்கப் பட்டது. இது தவிர வங்கி ஊழல் முதலிய பெரும் ஊழல் நடவடிக்கைகளுக்கும் துணை நின்றது அரசு. ஐக்கிய நாடுகள் தமது அழுத்தத்தைக் குறைத்து இலங்கை அரசை அனுசரிக்கும் காலக்கெடுக்களை வழங்கத் தொடங்கியது. நிறுத்தி வைக்கப் பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பி வழங்கியது.
இருப்பினும் ராஜபக்ச குடும்ப அரசியலின் அடிப்படையை உடைக்கும் அரசியல் வல்லமை இந்த அரசுக்கு இருக்கவில்லை. சிங்கள மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற பயம் – ராஜபக்ச பயம் காட்டி தமது ஆதரவுப் பலத்தை தக்க வைக்க வேண்டிய தேவை இருந்தமை – போன்ற காரணங்களால் அவர்கள் மேலான நேரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வேண்டுமென்றே தடுக்கப்பட்டது. இது மட்டுமின்றி அரச இயந்திரத்தில் வேரூன்றி விட்ட ராஜபக்ச ஆதரவை மாற்றும் திடமும் இவர்களிடம் இருக்கவில்லை. இரகசிய சேவைகள் – இராணுவம் முதற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு எங்கும் ராஜபக்ச ஆதரவாளர்களால் நிரம்பியிருந்தமை ஒருவைகை இரட்டை அதிகார நிலையை அரசதிகாரத்துக்குள் உருவாக்கி இருந்தது எனக் கூறுவது மிகையில்லை. இராஜபக்ச ஆதரவு சிங்கள பௌத்த தேசிய அஸ்திவாரத்தைக் குலைக்கும் எந்த நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக யார் உண்மையான சிங்கள பௌத்த தேசியத்தின் பிரதி நிதி என்ற பெட்டிக்குள் இவர்கள் இறங்கினர். இதனால் ராஜபக்ச பலம்தான் மேலும் வளர்ந்தது. தமக்கு மேல் தாக்குதல் நிகழாமல் விடப்பட்ட காலப்பகுதியில் அவர்கள் தமது அஸ்திவாரத்தை மேலும் பலப்படுத்தினர். ஐ.தே.க ஊழல் மற்றும் நியோ லிபரல் கொள்கைகள் அவர்களுக்கு மேலதிக பலத்தை வழங்கியது. அதே சமயம் தொடர் பிரச்சாரத்துக்கு எனச் சீனப் பணம் தொடர்ந்து வாரி இறைக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகத்தான் மாகாணசபை, நகர சபை தேர்தலிகளில் ராஜபக்சவின் புதிய கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் பலத்தை வைத்து ஒரு பாராளுமன்ற சூழ்ச்சியுடன் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் முயன்றனர். இதன்போதும் மில்லியன் கணக்கில் சீனப் பணம் தடை அற்று ஓடியது பலருக்கும் தெரிந்ததே. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூட காசுக்கு வாங்கப் பட்டார். பாராளுமன்றம் கலைக்கப் பட்டு ராஜபக்ச பிரதமராக்கப்பட்டார். புதிய பிரதமருக்கான அங்கீகாரம் சீனாவிடம் இருந்து துரித கதியில் வந்து சேர்ந்தது. சீனத் தூதுவர் வெளிப்படையாக ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க மேற்கும் இந்தியாவும் கடுமையான கண்டனகளுடன் தம்மை சனநாயக வாதிகளாக காட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கதிகலங்கிய பாராளுமன்றம் அடிபாடுத் தளமாக மாறியது. அவரவர்கள் தமது ஆதரவை திரட்டி பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அடிபாடுகளுக்கு தயாராகினர். இந்தக் கெடு பிடிக்குள்ளும் கூட்டமைப்பு நித்திரை கொண்டு கொண்டிருந்தது. அவர்கள் கால்களுக்கு கீழ் வெடித்துக் கொண்டிருந்த குண்டுச் சுவாலைகள் படர்ந்து அவர்களைச் சுடத் தொடங்கிய பிறகுதான் அவர்கள் பதறி அடித்து எழுந்தனர். ரணில் மீண்டும் பிரதமாராகி பாராளுமன்றம் கூடிய பொழுது அமெரிக்க தூதுவர் பாராளுமன்றத்துக்குள் இருந்து டுவிட்டர்களை விட்டு “தெட்டத் தெளிவான” செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். தாம் சீன நலனுக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதே அவர் செயலின் சாராம்ச செய்தி.
இதற்குப் பிறகுகூட பின் வாங்காமல் ராஜபக்ச பிரச்சாரங்கள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வருடம் நடக்க இருக்கும் சனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல்களை நோக்கி கடுமையான நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ள்ளது. இதே சமயம் அடுத்த சனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் டென்சன் உருவாக்கி இருப்பதாகவும் தெரிய வருகிறது. கோட்டபாய ராஜபக்ச தான் சனாதிபதி தேர்தலில் நிற்பதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து வருகிறார். அதற்கான வேலைகளுக்காக பல்வேறு அமைப்புக்களையும் உருவாக்கி இயங்கி வருகிறார், ரணில் வெற்றி அடைந்தி சூத்திரத்தை உடைப்பதானால் தமிழ் பேசும் மக்களின் வாக்கு வங்கி உடைய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். இதற்காக தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை பொது எதிரியாக்கி கிழக்கு மக்களின் வாக்கை உடைப்பதில் கடும் முயற்சிகள் நடந்து வருகிறது.
தொடரும்…..