பிரித்தானியத் தேர்தல்

பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் பற்றிய சில விபரங்களை மட்டும் கீழ தந்துள்ளோம். தேர்தல் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்ற விபரங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறோம். தொடர் பதிவுகளைப் பெற உங்கள் ஈ மெயிலை இந்தத் தளத்தில் பதிவிடுங்கள். இந்த வார வாரந்திர ஞாயிறு நேரலையிலும் இது பற்றி உரையாட இருகிறோம். இங்கிலாந்து நேரம் 4pm மணிக்கு எம்மோடு இணைந்து கலந்து கொள்ளுங்கள்.

– எதிர்

 

1 தேர்தல் இறுதி முடிவுகள்

650 ஆசனங்கள் உள்ள பிரித்தானியப் பாராளுமன்றதில் 325 ஆசனங்களுக்கு அதிகமாக ஆசனங்களைக் கைப்பற்றுபவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும். நடந்து முடிந்த தேர்தலில் ஒரு கட்சிக்கும் அத்தகய பெரும்பான்மை இலை. இதனால் இது தொங்கு பாரளுமன்றம் என அழைக்கப் படுகிறது. தற்போது வட அயர்லாந்து யூனியனிஸ்ட் கட்சியுடன் இணைந்து சிறுபான்மை ஆட்சியை அமைத்துள்ளது கன்சவேடிவ் கட்சி.

ஒவ்வொரு கட்சிக்குமான வாக்கு விபரங்கள் வருமாறு.

பழமைவாத கட்சி – கன்சவேடிவ் – 318

தொழிலாளர் கட்சி – லேபர் – 262

ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி – 35

லிபரல் டெமோகிராட் – 12

சனநாயக யூனியனிஸ்ட் கட்சி – 10

சின் பெயின் – 7

ப்ளைட் கமரூ – 4

கிரீன் கட்சி – 1

 

வாக்குகள் & வாக்கு மாறிய வீதம்

 

வாக்களித்தோர் எண்ணிக்கை 68.7% ( 2015 இலிருந்து  2.6% அதிகரிப்பு) – வாக்களிக்கத் தகுதியான 46.9 மில்லியன் பேரில் ஏறக்குறைய 38 மில்லியன் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்

  • நன்றி பி.பி.சி

 

2 முக்கிய நிகழ்வுகள்

இளையோரின் எழுச்சி என வர்ணிக்கும் அளவில் ஏராளமான இளையோர் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். 18 இலிருந்து 25 வரை வயதுள்ளோர் மத்தியில் 72% வீதமானோர் வாக்களித்துள்ளனர்.

இரு கட்சிகளுக்கும் இறுக்கமான போட்டி இருப்பதாக கருதப்படும் – விளிம்பு ஆசனம் எனச் சொல்லப்படும் – இடங்களில் பெரும்பான்மையை தொழிலாளர் கட்சி வென்றுள்ளது. உதாரணமாக குறிப்பிடத்தக்க தமிழ் பேசும் மக்கள் வாழும் இல்போர்ட் நோர்த் ல் கன்சவேடிவ் கட்சி வேட்பாளர் லீ ஸ்காட் தோற்கடிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்களது வாக்கு வீதம் குறைந்துள்ளது. ஏறத்தாள பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 14% வீத வாக்கதிகரிப்புடன் தொழிலாளர் கட்சி வென்றுள்ளது.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் ஏறத்தாள 33 000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வாக்கை 12.7% வீதமாக அதிகரித்து 9 ஆவது தடவையாக வென்றுள்ளார். கன்சவேட்டிவ் கட்சி தலைவரான தெரசா மே தனது தொகுதியில் 26 000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த போதும் அவரது வாக்குகள் 1.1% வீதமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது தொகுதியிலேயே தொழிலாளர் கட்சி தனது வாக்குகளை 7.5% வீதமாக அதிகரித்திருந்தது. லிபரல் கட்சியின் முன்னால் தலைவரை லேபர் தோற்கடித்திருக்கிறது. தற்போதைய லிபரல் தலைவரான டிம் பாரன் 777 வாக்கு வித்தியாசத்தில் அரும்பொட்டில் வென்றுள்ளார்.

1918 ம் ஆண்டு காலத்தில் இருந்து கன்சவேட்டிவ் கட்சியின் வலதுசாரியக் கோட்டையாக இருந்த கண்டன்பரி தொகுதியை 187 வாக்குகள் வித்தியாசத்தில் லேபர் கைப்பற்றி உள்ளது. பல இடங்களில் கன்சவேடிவ் கட்சி அரும்பொட்டில்தான் தமது தொகுதிகளை தக்க வைத்துள்ளது. பலராலும் வெறுக்கப்படும் டோரி பா.உ ஆன சாக்ஸ் கோல்ட்ஸ்மித் வெறும் 45 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். இவர் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. லண்டன் மேயர் தேர்தலில் நின்று தோற்ற பிறகு கீத்ரோ விமான நிலைய தகராறு தொடர்பாக தனது தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தவர். மில்லியனர் ஆன இவரை டோரி கட்சி தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என எதிர் பார்க்கலாம். இதேபோல் டோரி தலைமைக் காரியாலயத்தில் இயங்கி வரும் முக்கிய டோரியான கவின் பர்வலும் பத்து வீத வாக்குகள் குறைந்து தோல்வியை தழுவி இருக்கிறார். நிகோலா ப்லாக்வுட், ரோப் வில்சன், பென் கம்மர் ஆகிய முக்கிய டோரிகளும் படு தோல்வியை தழுவி உள்ளனர்.

இதேபோல் உள்துறை மந்திரியாக இருக்கும் அம்பர் ரூட் வெறும்  346  வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். மான்செஸ்டர் மற்றும் லண்டன் தீவிர வாத தாக்குதலின் பின் இவரை முக்கிய தலைவராக டோரி பிரச்சாரிகள் முன் தள்ளியது தெரிந்ததே. தெரசா மேக்கு பதிலாக தொலைக்காட்சி விவாதத்தில் டோரி சார்பாக கலந்து கொண்டவரும் இவரே. இதே சமயம் நிழல் உள்துறை மந்திரியும் கோர்பின் ஆதரவாளருமான டயான் அபோட் தனது தொகுதியில் 75.1% வீத வாகுகளைப் பெற்று 35 000 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி ஈட்டி உள்ளார். இவரது வாக்கு  12.2% வீதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் இறுதி நாள் வரை இவர் மேல் துவேச வெறி கொண்ட பிரசாரங்களை கார்பொரேட் பத்திரிகைகள் செய்து வந்தது தெரிந்ததே. இதே போல் நிழல் நிதி மந்திரியான ஜோன் மக்டோனல்ட் 66.5% வீத வாக்குகளை வென்று அமோக வெற்றி ஈட்டி உள்ளார். கடுமையான எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் பொதுவாக கோர்பின் கொள்கைகளை ஆதரித்து நின்றவர்கள் இலகுவாக தேர்தலில் வென்றுள்ளனர்.

3 ப்ரக்சிட் & யு.கே.இ.பா

குடிவரவாளர்களுக்கு எதிரான துவச கருத்துக்களைக் கொண்ட  யு.கே.இ.பா (UKIP) ஒரு ஆசனம் கூட வெல்ல முடியாது தமது வாக்குகளில் 11% வீதம் குறைந்து கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் தலைவர் போல் நட்டால் வெறும்  3308 வாக்குகளைப் பெற்று கடும் தோல்வியைத் தழுவி உள்ளார். 2015ம் ஆண்டில் 12+% வீதமாக – நாலு மில்லியன் வாக்குகளாக -இருந்த இவர்கள் வாக்கு இன்று அரை மில்லியனாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரும் கட்சியின் ஷேர்மனும் ராஜினாமா செய்துள்ளனர். ஒரு வருடத்துக்குள் மூன்றாவது முறை தலைமைக்கான போட்டி இக்கட்சிக்குள் நிகழ உள்ளது. ப்ரக்சிட்க்கு பிறகு இந்த கட்சி உடைந்து சின்ன பின்னமாகி போய்க்கொண்டிருப்பது தெரிந்ததே. கோர்பின் சமூக அக்கறை உள்ள கொள்கைகளை முன் வைப்பது இதற்கு ஒரு காரணம்.

யு.கே.இ.பா வாக்குகள் உடைந்து டோரி கட்சிக்கு செல்ல இருப்பதாக முன்பு பலர் பேசி இருந்தனர். தொழிலாளர் கட்சியின் கோட்டைகளை இந்த கட்சியின் வாக்குகளை வைத்து உடைக்கப் போவதாக நம்பினர். இதனால் டோரிக்கு பெரும் வாக்கு திரளும் என நம்பினர். முதலாளித்துவ ஐரோப்பிய பாராளு மன்றம் – சேவைகள் உடைக்கப் படுத்தல் ஆகிய காரணங்களால் பல தொழிலாளர் கட்சி வாக்காளர்கள் யு.கே.இ.பா நோக்கி நகர்ந்திருந்தனர். இவர்களின் வாக்குகள்  யு.கே.இ.பா ஊடாக டோரிக்கு வந்து சேரும் என அவர்கள் போட்ட குழைந்தைப் பிள்ளை ஆய்வில் இன்று மண் அள்ளி விழுந்துள்ளது. அவர்கள் வாக்குகள் இரண்டாக உடைந்து லேபருக்கும் சென்றுள்ளதைப் பார்க்கலாம். ப்ரக்சிட் ஆதரவு பலமாக இருந்த இடங்களிலும் லேபர் வென்றுள்ளது.

கிரீன் கட்சி

அரை மில்லியன் வாகுகளை பெற்ற போதும் கிரீன் கட்சிக்கு இரண்டு வீத வாக்கு குறைந்துள்ளது. இருப்பினும் இதன் தலைவர் கரலைன் லூகாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் தற்போது யு.கே.இ.பா கட்சியை விட பெரிய கட்சியாக மாறி இருக்கிறார்கள். இருப்பினும் ஊடகங்கள் தொடர்ந்தும் வலதுசாரிய யு.கே.இ.பா கட்சியை மட்டுமே ஊக்குவித்து வருவதை அவதானிக்கலாம்.

ஸ்கொட்லாந்து

கன்சவெடி கட்சி மற்றும் லேபர் கட்சி ஆகியன வெஸ்மினிஸ்டர் கட்சிகளாக பார்க்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டிருந்தன. ஸ்கொட்லாந்து விடுதலைக்கான வாக்கெடுப்புக்குப் பிறகு சாத்தியமான 59 ஆசனங்களில்  56 ஆசனங்களை முன்பு வென்றிருந்தது ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி. தற்போது 21 ஆசனங்களை இழந்து 35 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளன. கன்சவேடிவ் 13 ஆசனங்களையும் லேபர் 7 ஆசனங்களையும் லிபரல் 4 ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளன. எஸ் ஏன் பிக்கு இது ஒரு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இலங்கைக்கு ஒரு பொது பல சேன – இந்தியாவுக்கு ஒரு சிவ சேன இருப்பதுபோல் வட அயர்லாந்துக்கு ஒரு டி. யு. பி. உண்டு.

வட அயர்லாந்தில் வசித்து வரும் புரடஸ்தான் மதத்தவருக்கும் கத்தோலிக்க மதத்தவருக்கும் இடையில் நீண்ட கால முரண் இருந்து வருவது தெரிந்ததே. இங்கிலாந்துப் புரடஸ்தான் மதத்தை ஏற்க மறுத்தும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அயர்லாந்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கத்தோலிக்க மதத்தவரிடம் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஐக்கிய அயர்லாந்துக் கோரிக்கையை வைத்து வரும் அவர்கள் மத்தியில் பலமான எதிர்ப்பு சக்திகள் உருவாகி வந்துள்ளன. பல ஆயுதப் போராட்டங்கள் பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிராக நிகழ்ந்துள்ளது. அயர்லாந்து ரிப்பப்ளிக்கன் இராணுவம் (ஐ.ஆர்.ஏ) என்ற பெயரில் நீண்ட காலமாக ஆயுதம் தங்கிய யுத்தத்தைச் செய்து வந்தவர்கள் தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அவர்கள் உருவாக்கிய சின் பெயின் என்ற கட்சி இன்று வடக்கு மற்றும் தெற்கு அயர்லாந்தில் முக்கிய கட்சியாக இயங்கி வருகிறது. கடந்த தேர்தலில் வடக்கு அயர்லாந்தில் 7 ஆசனங்களை இவர்கள் கைப்பற்றி இருக்கின்றனர்.

பிரித்தானியாவின் கட்டுப் பாட்டில் இருக்கும் வட அயர்லாந்து போலன்றி தெற்கு அயர்லாந்தில் வாழும் பெரும் பான்மையானவர்கள் கத்தோலிக்கரே. வடக்கில் பெரும்பான்மையாக இருந்த புரடஸ்தான் மதத்தினர் ஒன்றுபட்ட அயர்லாந்தில் சிறுபான்மையாகி விடும் நிலை இருந்ததும் அவர்கள் மத்தியில் ஓன்று பட்ட அயர்லாந்துக்கு எதிர்ப்பு கிளம்பியதற்குக் காரணம். ஆனால் அயர்லாந்து புரடஸ்தான் மக்களில் சிரறுபான்மையருக்கும் இங்கிலாந்து ஆளும் வர்க்கத்துக்கும் மதம் மட்டுமின்றி பல்வேறு நெருக்கமான தொடர்புகள் இருந்து வந்திருக்கிறது. அயர்லாந்தைக் கட்டுப் படுத்த புரடஸ்தான் மதத்தவரை தொடர்ந்து பாவித்து வந்தது பிரித்தானிய அரசு. இதனால் இவர்கள் மத்தியில் இருந்து எழுந்த அதிகாரம் சார் அமைப்புக்கள் பிரித்தானியாவுடன் இணைந்து இருப்பதை முதன்மைப் படுத்தி இயங்கின. இவர்களின் இணக்க அரசியலை முதன்மைப் படுத்தி எழுந்த அமைப்புக்களைச் சுருக்கமாக இணக்க வாதிகள்-அதாவது யுனியனிஸ்ட் – என அழைப்பர். இவர்கள் பிரித்தானிய அரசின் எல்லாவித வலது சாரியப் பண்புகளையும் உள்வாங்கிய அமைப்பாக இருந்தனர். முடியாட்சிக்கு கண்மூடித்தனமான ஆதரவு – முதற்கொண்டு எல்லாவித பிற்போக்குக் கொள்கைகளையும் உள்வாங்கியவர்கள் இவர்கள். உதாரணமாக சம பால் உறவுக்கு எதிர்ப்பு, கருத்தடைச் சிகிச்சைக்கு எதிர்ப்பு- முதலான மத அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்ட அமைப்புக்கள் இவை. இங்கிலாந்து வலது சாரியக் கட்சியான கன்சவேடிவ் கட்சியுடன் தொடர்பு என்பது இவர்களுக்கு இயற்கையான ஒன்றே. அதில் அவர்கள் பெருமைப் பட்டுக் கொள்வர். ஆனால் இவர்கள் போன்ற மத அடிப்படை வாதிகள் இல்லை நாம் என காட்ட முயலும் கன்சவேடிவ் கட்சி இவர்களுடன் கூட்டு வைப்பது என்பது சாத்தியமற்றதாகவே இருந்து வந்தது. இருப்பினும் தற்போது அதிகார வெறி ஏற்கனவே மங்கி இருந்த கன்சவேடிவ் கண்களை மேலும் குருடாக்கி உள்ளது.

புரடஸ்தான் மக்கள் மத்தியில் இருந்து எழுந்த அதி தீவிர வலது சாரிய மத அடிப்படை வாத அமைப்புக்களுக்குக் கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஆதரவு இருந்ததில்லை. மத அடிப்படை வாதம் – மற்றும் கத்தோலிக்கர் மேலான வெறுப்பு மற்றும் பயம் போன்ற காரணங்களைக் காட்டித் தான் புரடஸ்தான் மக்கள் மத்தியிலும் இவர்கள் ஆதரவு திரட்டக் கூடியதாக இருந்தது. ஆனால் கத்தோலிக்கர் மத்தியில் எழுந்த அதிகாரத்துக்கு எதிரான குரல் இடது சாரியத் தாக்கம் கூடியதாக இருந்தது. அங்கு எழுந்த அமைப்புக்களின் தலைவர்கள் தங்களை சோசலிஸ்டுகள் என சொல்லிக் கொண்டனர். இன்று வரை சின் பெயின் ஒரு இடது சாரியக் கட்சியாகவே இயங்கி வருகிறது. இருப்பினும் இவர்கள் தாக்கம் கத்தோலிக்க மக்களைத் தாண்டிச் செல்லவில்லை.

இதே சமயம் இந்த இரு மதத்தவரும் தனித்தனியே பிரிந்த அரசியலில் தான் ஈடு பட்டு வந்தவர்கள் எனக் சொல்லப்படுவதும் மிகத் தவறு. அயர்லாந்தில் இயங்கிய முன்னால் மிலிட்டன் அல்லது தற்போதய சோஷலிச கட்சியைச் சார்ந்தவர்கள் மத வேறுபாடைத் தாண்டி தமது அமைப்புக்களைக் கட்டி வருகின்றனர். இவர்கள் தலைமையில் அயர்லாந்தில் பலமான தொழிற்சங்கங்கள் இயங்கி வந்தன. இத்தகய அமைப்புக்களில் இரு மதத்தவரும் இணைந்து இயங்கி வருவதும் – இந்த அமைப்புக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்கை சமூகத்தில் செலுத்தி வருவதும் குறிப்பிடத் தக்கது. இத்தகய ஒரு அமைப்பான NIPSA(Northern Ireland Public Service Alliance) தமிழ் சொலிடாரிட்டி அமைப்புக்கு முழு ஆதரவு தர தமது அமைப்பு சார்பாக முடிவெடுத்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

கத்தோலிக்க மத சாயல் கொண்டவர்களாக இருந்த போதும் சின் பெயின் போன்ற அமைப்புக்கள் முற்போக்கான இடது சாரிய அமைப்புக்கள். தற்போதய சின் பெயின் தலைவரான (முன்னாள் ஆயுதம் தாங்கிய போராளி) ஜெரி ஆடம்ஸ் போன்றவர்கள் ஒரு காலத்தில் ஈழத்திலும் போராட்டக் காரர்களால் நேசிக்கப் பட்டவர்கள். இவர்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடிய காரணத்தால் தீவிர வாதிகள் என ஒதுக்கப் பட்டனர். பலர் கொன்று குவிக்கப் பட்டனர்.

இதே சமயம் புரடஸ்தான் பக்கம் அரசியல் அமைப்பு இருப்பது மட்டும் போதாது என்று சொல்லி அங்கும் ஆயுதம் தாங்கிய அமைப்பு தேவை என சில அதி தீவிர வாலதுசாரிகள் கிளம்பினர். வசதியான அழகிய பால்மினா என்ற இடத்தில் இருந்து இந்த வேலையை ஆரம்பித்து வைத்த இயன் பெய்சிலி என்பவர்தான் டி. யு. பி.  (சனநாயக யுனியனிஸ்ட் கட்சி ) () என்ற அமைப்பைத் தொடங்கியவர். இவரைப் பின் லாடனுடன் தான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அத்தகய மத அடிப்படை வாதி. இலங்கையில் எவ்வாறு இராணுவம் சார்ந்து சில ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றனவோ அது போல் இயங்கியவர்கள் இவர்கள். இங்கிலாந்து இராணுவம் மற்றும் அதிகாரத்தின் பின்னணியில் இருந்து கொண்டு ஆயுதம் தாங்கி அட்டூழியங்களை இவர்கள் செய்தனர். மக்கள் மத்தியில் குண்டு வைத்தல் மற்றும் ஈவிரக்கமின்றி சுட்ட்டுத் தள்ளுதல் ஆகியவற்றைச் செய்து வந்த பரா மிலிடரி அமைப்பில் இருந்து உருவாகியதுதான் டி. யு. பி.

சமூக சேவைகள் பற்றியோ அல்லது மக்களின் வாழ்கைத் தரம் பற்றிய அக்கறையோ இவர்களுக்கு இருந்ததில்லை. முன்பு சொன்னதுபோல் பல தளங்களில் மத அடிப்படை வாதிகளாக இயங்குபவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஒரு போதும் புரட்ஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்ததில்லை. தற்போது எப்படி இவர்கள் பத்து ஆசனங்களை வென்றார்கள்? சமூகம் பின் நோக்கிப் போய் விட்டதா? எனக் கேட்கலாம். 2015ல் எட்டு ஆசனங்களை பெற்றிருந்த இக்கட்சி அதன் வரலாற்றில் இல்லாத அளவு பத்து ஆசனங்களைப் பெற்றுள்ளது. வட அயர்லாந்தின் அமைதிப் பேச்சு வார்த்தை உடைந்து கொண்டிருப்பதே இதற்கு முதற் கரணம்.

அமைதிப் பேச்சு வார்த்தையின் படி அமைக்கப்பட்ட வட அயர்லாந்து அரசு வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் சேவை மறுப்புகளை செயற்படுத்துவதால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இது தவிர சின் பெயின் ஐக்கிய அயர்லாந்துக்கு ஆதரவை மீண்டும் பெருமளவில் திரட்டுவதும் –தெற்கு அயர்லாந்தில் அவர்கள் பலம் அதிகரித்திருப்பதும்  மேலதிகப் பயத்தைப் புரடஸ்தான் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. இதுவும் அந்த மக்கள் புரடஸ்தான் அமைப்பை நோக்கி நகர உதவுகிறது.

இது மட்டுமின்றி பிரக்சிட் வாக்கும் அங்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரித்தானியா முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியுமானால் வட அயர்லாந்து தெற்கு அயர்லாந்தில் இருந்து முற்றாகப் பிரிய வேண்டி இருக்கும். இரண்டு பகுதிக்கும் இடையில் எல்லைக் காவல் (போடர் போல்) ஏற்படுத்த வேண்டி இருக்கும். அவ்வாறு ஒரு நிலமை வருமாயின் அது வடக்கு மக்களை தெற்கு கத்தோலிக்கர்களிடம் இருந்து முற்றாக முறிப்பதாக இருக்கும். இது மேலும் கத்தோலிக்க தேசியவாதத்தையும் வடக்கு மக்களிடம் ஏராளமான பிளவையும் ஏற்படுத்தும். முன்பு எல்லைக் காவல் இருந்த காலத்தில் அங்கு நடந்த வன்முறை இன்றும் பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும் விசயம். பிரித்தானிய அதிகாரத்தின் இராணுவம் எல்லைக் காவல் பகுதியில் மக்களை மோசமாக நடத்திய வராலாறு மறக்கப் படக் கூடியதல்ல. இதனால் எல்லைக் காவலுக்கு கத்தோலிக்கர் மத்தியில் எதிர்ப்புண்டு. முக்கியமாக எல்லைப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உண்டு.

முழுமையான ப்ரக்சிட் நடக்குமாயின் எல்லைக் காவல் போடுவதை பிரித்தானிய அரசு தான் தோன்றித் தனமாக செய்ய முடியாது. அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சின் பெயின் கேட்டுள்ளது. அவ்வாறு வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப் படுமாயின் அதை புரடஸ்தான் மக்கள் தம் மேலான நேரடித் தாக்குதலாகப் பார்க்கும் அபாயம் உண்டு. இதனால் இந்த விவகாரம் கடும் மோதல்களை தூண்டிவிடும் அபாயம் உண்டு. எல்லைகான வாக்கெடுப்பு நடக்க முடியாது என வடக்கு முதல் மந்திரியும் டி.யு.பி யின் தலைவருமான ஆர்லீன் போஸ்டர் சொல்லியிருக்கிறார்.

சேவைகளுக்கான தேவை மற்றும் இணக்க அரசியலுக்கு ஆதரவு போன்ற காரணங்கள் புரடஸ்தான் மக்கள் மத்தியில் பிரக்சிட்டுக்கு ஆதரவை உருவாக்கி இருக்கிறது. இதனாலும்தான் டி. யு. பி க்கு ஆதரவு கூடியது. இது மட்டும் இன்றி தற்போது வடக்கு புரடஸ்தான் சனத்தொகை குறைந்து வருகிறது. வடக்கிலேயே இவர்கள் சிறுபான்மை ஆகும் நிலை உள்ளது. இந்தக் காரன்னகளும் டி. யு. பி யை புரடஸ்தான் மக்கள் மத்தியில் பலப் படுத்தி உள்ளது.

இதுவரை காலமும் இவர்கள் பிரித்தானிய அதிகாரத்துக்கு விசுவாசமான சேவகர்களாக தம்மை வெளிக்காட்டி வந்த போதும் கன்சவேடிவ் கட்சியுடன் நேரடி தேர்தல் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. டோரி கட்சியின் சேவை மறுப்பு மற்றும் வறிய மக்களுக்கு எதிரான நிலைப்பாடு இவர்களை மக்கள் மத்தியில் பலவீனப் படுத்தும் என்பதும் ஒரு காரணம். இதே போல் டோரி கட்சியும் இவர்களின் பிற்போக்கு தனத்தோடு தம்மை இணைத்துக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. முன்பு பலமாக இருந்த அல்டர் யுனியானிஸ்ட் கட்சி எனற கட்சி வடக்கு அயர்லாந்து கனவேடிவ் கட்சியோடு இணைந்து புதிய அமைப்பை முன்பு உருவாக்கி இருந்தது. இதன் பிறகு அவர்கள் தேர்தல் அரசியலில் தலை எடுக்க முடியாமல் போய் விட்டது. யூனியன் ராச்சியத்துக்கும் யுனியனிஸ்டுகளுக்கும் ஏற்படும் உறவு எப்போதும் கண்ணீரில் போய்தான் முடிவடைகிறது என்ற வரலாறு எலோருக்கும் தெரியும் என கிண்டலாக ஜெரி ஆடம்ஸ் சொன்னதில் ஒரு நியாயம் உண்டு. வாடா அயர்லாந்து லேபர் கட்சி தேர்தலில் போட்டி இடுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்பு இருந்தது போல் பெரும் வறுமை கத்தோலிக்கப் பகுதிகளில் மட்டும்தான் உண்டு என்ற நிலை தற்போது இல்லை. புரடஸ்தான் தொழிலாளர் வாழும் பல பகுதிகளில் இன்று வறுமை அதிகரித்து வருகிறது. இதனால் தெரசா மேயின் கொள்கைகள் அங்கு பிரபலமாயில்லை. டி. யு. பி தெரசா மேயுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும் – தொழிலாளர், மாணவர், மற்றும் வறியோருக்கு எதிராக அவர் முன் வைக்கும் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் புரடஸ்தான் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இருக்கப் போவதில்லை.

தேசிய உணர்வு என்பது வர்க்க நிலமைகளுக்கு ஏற்ப கூடிக் குறையக் கூடியது. இந்த உதாரணத்தை நாம் ஸ்காட்லாந்தில் பார்த்தோம். விடுதலைக்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து மாபெரும் வெற்றி ஈட்டிய ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி இரண்டு வருடத்துக்குள் பல ஆசனங்களை இழந்துள்ளது. பிரக்சிட்டை தொடர்ந்து ஸ்கொட்லாந்தில் ஏற்பட்ட இணக்கத்துக்கான அலை அங்கு கன்சவேடிவையும் பலப் படுத்தி உள்ளது. அதே போல் தெற்கு கிளாஸ்கோ போன்ற மிக வறிய இடத்தில் எஸ் என் பி ஏறத்தாள 14% வீத வாக்குகளை இழந்துள்ளது. வர்க்கத் தேவை இந்த தேர்தலில் மேலோங்கி இருந்தமைக்கு கோர்பினின் தேர்தல் அறிக்கை காராணம். இது தேசிய உணர்வை சற்றுப் பின்தங்க வைத்துள்ளதைப் பார்க்கலாம். ஸ்கொட்லாந்து மக்களின் தேசிய உரிமையை மதிப்பதாகவும் – அவர்கள் பிரிந்து போவதை ஆதரிப்பதாகவும் – அதற்கான வாக்கெடுப்புக்கு எதிர்காலத்தில் ஆதரவு தர முடியும் எனவும் ஒரு முடிவை லேபர் எடுத்திருந்தால் ஸ்கொட்டிஷ் தேசிய அலை வர்க்க எழுச்சியுடன் இணைந்து பொங்கி இருக்கும். எஸ் என் பி நொறுக்கப் பட்டிருக்கும் வாய்ப்புண்டு. இதனால்தான் தேசியம் பற்றிய சரியான நிலைப்பாடு எடுப்பது இடது சாரிய கட்சிகளுக்கு அத்தியாவசியமானது.

இதே நிலையின் வேறு வடிவத்தை நாம் வட அயர்லாந்தில் பார்க்கலாம். டோரி கட்சியின் மக்கள் மேலான தாக்குதலை புரடஸ்தான் தொழிலாளர் பொறுத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எண்ணிக் கொள்வது தவறு. அந்த எதிர்ப்பு  டி. யு. பி யின் ஆதரவை வெட்டிச் சரிக்கும் என எதிர் பார்க்கலாம். இது தவிர இவர்களது கூட்டு பாராளு மன்றத்தில் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கப் போவதில்லை. மிக மோசமான பிற்போக்குத் தனங்களில் பிடிவாதமாக இருக்கும் இவர்கள் எந்தக் கணத்திலும் தமது ஆதரவைப் பின் வாங்கும் நிலை உண்டு.

டோரி – டி. யு. பி கூட்டு அதிகாரத்தில் ஆசையில் ஏற்பட்ட கூட்டு. அரச அதிகாரத்தை தமது கையில் வைத்துக் கொள்வதற்கு ஏற்பட்ட இந்த கூட்டின் பின் இருக்கும் மக்கள் விரோத தன்மை உடனடியாகவே வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டது. எல்லாப் பக்கம் இருந்தும் இவர்களுக்கு எதிர்ப்பு வரப் போவது நிச்சயம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *