காசின் கலை
பாம்பு என்ற விலங்குக்கு முதுகெலும்பு கிடையாது.
சின்ன உருண்டையான இந்த விலங்கு தன்னிலும் பலமடங்கு பெரிய விலங்குகளை அப்படியே முழுமையாக விழுங்கக்கூடியது. தனது கடும் விசத்தால் மற்ற விலங்குகளை கணத்திற் கொல்லக்கூடியது. தனது தோலைக் கழட்டிப் புதுவடிவம் எடுக்கக்கூடியது. மனித விலங்கு இன்று மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருந்தாலும் அவர்களுக்கு முள்ளந்தண்டில் குளிர்ச்சி ஏற்படுத்தும் பயக்கெடுதியை ஏற்படுத்த வல்லது முள்ளந்தண்டே இல்லாத பாம்பு.
ஆனால் இந்த மனித விலங்குகளிற் சிலருக்கு பாம்பின் பழக்கவழக்கங்கள் உண்டு. இவர்கள் அரசியலில் எந்தப்பக்கம் நிற்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது வலு கஸ்டம். போதாக்குறைக்கு அவர்கள் தமது அரசியல்-இலக்கிய சட்டைகளையும் அவ்வப்போது மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் தமது ‘இலக்கியப்’ பத்திரிகையால் கக்கும் விசம் எம்மை சிறுக சிறுகக் கொல்லத்தக்கது. அப்படி ஒரு பாம்புப்போக்கை வரலாறாகக்கொண்டதுதான் ‘இந்தியாவில்’ இருந்து வரும் காலச்சுவடும் அவர்தம் பதிப்பகமும்.
பல்லைக்கடித்துக்கொண்டு பதிப்பாளர்கள் பின்னால் திரிய வேண்டிய நிலை பல எழுத்தாளர்களின் தலைவிதியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது எல்லா நாட்டுக்கும் பொதுவான விதியாகவும் இருக்கிறது. ஆனால் இந்த நிலையிலும் பல முற்போக்கு எழுத்தாளர்கள் தாமாகவே முன்வந்து எழுத மறுக்கும் ஒரு பத்திரிகையாக இருக்கிறது காலச்சுவடு. இதற்கு காலச்சுவட்டின் ‘வியாபாரப்’ புத்தி மட்டும் காரனமல்ல. வியாபார இதழ்களில் எழுத பலரும் தயாராகத்ததான் இருக்கிறார்கள். அந்த இதழ்கள் ஏராளமான வாசகர்களுக்குப் போய்ச் சேர்வதால் தமது அரசியலை சமரசம் செய்யாது அந்த இதழ்களுடன் இயங்க அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் காலச்சுவட்டின் கதை வேறு. அதிகாரத்துக்குக் குறுக்கு வழியில் எப்படியெல்லாம் சேவகம் செய்யலாம் என்பதைக் ‘கலையாக’ செய்கிறார்கள் அவர்கள். அது மட்டுமின்றி அதிகாரத்துக்கு எதிராக வேலை செய்பவர்களைக் குறிவைத்து தாக்குவது –விலை கொடுத்து வாங்குவது போன்ற வேலைகளை திறம்படச் செய்கிறார்கள் அவர்கள். தினமலர் போன்ற பத்திரிகைகள் பச்சையாகச் செய்யும் அரசியலை இவர்கள் இலக்கிய மூலாம் பூசிச் செய்கிறார்கள். இவர்கள் தலித்துகளின் புத்தகத்தைப் போடுகிறார்கள் – ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகத்தைப் போடுகிறார்கள் – பரந்த பதிப்பகமாக வளர்ந்துள்ளார்கள் என்று சிலர் வாதிக்கிறார்கள். உண்மைதான் இன்று இதுபோன்ற விளிம்பு எழுத்தாளர்களைப் ‘பாவித்து’ கொழுத்த பணம்நிரம்பிய பதிப்பகமாக அவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள். ஆர்வக்கோளாறு காரனமாகவா இந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர்கள் போடுகிறார்கள? எதை வைத்து எப்படி காசு பார்ப்பது என்பது அவர்களுக்கு கை வந்த ‘கலை’. பதிப்பிக்க வழியற்ற எழுத்தாளர்கள் இந்த வலையிற் சிக்குகிறார்கள் என்பதற்காக பதிப்பகம் திருந்திவிட்டது என்று வாதிடுவது தவறல்லவா?
இந்திய அரசை கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராயின் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அன்மையில் இவர்கள் வெளியிட்டிருந்தது தெரியும். இதென்ன கேவலம் இவர்களிடம் போய் எப்படி அருந்ததி மாட்டிக்கொண்டார் என்ற ஏக்கத்தில் குழம்பியவர்கள் பலர். மே17 இயக்கத்தினர் அக்கூட்டத்துக்குச் சென்று தமது எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். பாவம் தமிழறியா அருந்ததிக்கு இவர்கள் அநியாயம் தெரிந்திருக்க நியாயமில்லை. இதற்குள் அருந்ததியை கொண்டுபோய் தள்ளிவிட்ட பெருமை காலச்சுவட்டின் சிலீப்பிங் ஆசிரியர் சேரனையே சாரும். இதை அருந்ததியே காட்டிக்கொடுத்துள்ளார். அப்படியிருக்க அவர்கள் அச்சம்பவத்தை எப்படித் திரித்தார்கள் என்று பாருங்கள்.
கோல்டன் வைசின் புத்தகத்தையும் காலச்சுவடு அன்று வெளியிட்டிருந்தது. அப்புத்தகத்தில் புலிகளுக்கு எதிரான கருத்திருப்பதால் கடும்புலி ஆதரவாளர்களான மே 17 இயக்கத்தினர் கூட்டத்தைக் குழப்பினார்கள் என அவர்கள் கூறினர். தன்னை புத்திஜீவி என்று நம்பிக்கொண்டிருக்கும் நமது ராஜன்குறை கூட இதை நம்பி அப்படியே ஒப்புவிக்கிறார். காலச்சுவட்டார் எப்படி சட்டையைக் கழட்டிப் போட்டார்கள் – கதையைப் பிரட்டிப்போட்டார்கள் பாருங்கள். மே17 இயக்கத்தினர் கோல்டன் வைசின் புத்தகத்தை இந்த சம்பவத்துக்கு முன்போ பின்போ எங்காவது தாக்கியிருக்கிறார்களா? அல்லது அப்புத்தகத்தை அவர்களுக்கு காலச்சுவடுதான் அறிமுகப்படுத்தியது என்று தெனாவட்டுக் கதை எடுபடுமா?
இவ்வாறு தாம் ‘புலிக்கு கடும் எதிர்ப்பு’ என்று கத்திய சட்டையை கழட்டி வைத்துவிட்டு தாம் ‘புலிக்கு ஆதரவு’ என்ற சட்டையையும் அவர்கள் போட்டுக்கொள்வார்கள். இது மட்டுமின்றி தாம் இந்தியாவில் அடுத்ததாக அரசமைக்கவிருக்கும் ‘சக்திகளுக்கு’ தொடர்புகளை ஏற்படுத்தித் தரக்கூடியவர்கள் என்று ஜரோப்பிய தேசிய மட்டங்களில் கூவி வித்ததாகவும் நமக்கொரு கதை கிடைத்தது. அது கதையா நிசமா என்பதை விட இவர்கள் மோடிக்கும் – அத்வானிக்கும் ஆட்சேர்த்து குடுப்பதில் தீவிரவாதிகள் என்பது தெரிந்ததே. ‘பச்சை பிராமனத்தனம்’; என்று இதனாற்தான் அவர்களை நோக்கி பலர் திட்டுகிறார்கள் போலிருக்கிறது.
பாம்பையும் பிராமணனையும் கண்டால் பாபை விட்டு விட்டுப் பிராமணனை அடி என்று பெரியார் கோபப்பட்ட காலம் தாண்டி எங்கயோ வந்துவிட்டோம் இன்று! பிராமணன் என்று சாதிய அடிப்படையில் இன்று முன் தீர்மானங்களுக்கு தாவுவது மகா பிழை. அதுவும் ஒருவகை சாதிவெறியாகப் பார்க்கப்படக்கூடிய நிலையுண்டு. ஆனால் பெரியார் கோவப்பட்ட அக்காலத்து அடிதடி பிராமனர்கள் சிலர் இன்று பாம்பாகவே மாறிவிட்டார்கள். பெரியார் பாவம் – அனைத்துப் பாம்புகளையும் அழி என்றா இனி சொல்வது!
சாதியம் இன்று சிக்கலான முறையில் பல தளங்களிலும் மறைந்து இயங்குகிறது. பிராமணியம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அது அரசியல் மயப்பட்டு- அமைப்பு மயப்பட்டு- வியாபார மயப்பட்டு பலமடைந்துள்ளது. அதற்கு மேற்குலக முதலாளிகளின் -அதிகாரங்களின் ஆதரவும் கிடைக்கிறது. மோடி என்றால் பிசினஸ் என்று டைம்ஸ் தலையங்கம் எழுதி அவரை அன்மையில் அட்டைப்படமாக்கியிருந்தது நாமறிவோம். இந்நிலையில் காலச்சுவடு போன்ற பத்திரிகைகள் இந்த சாதிய வியாபாரத்தைக் கெட்டித்தனமாக செய்ய முயற்சிக்கின்றன. இவர்களின் பாம்புத்தனத்தை அதனாற்தான் கடுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. அதிகாரத்தை எதிர்ப்பதும் இவர்களை எதிர்ப்பதும் ஒன்றுதான்.
‘ஏதோ எப்போதோ அக்கட்டுரை வந்தது – இந்த எழுத்தாளர்களுடன் அவர்கள் புத்தகம் போடுகிறார்கள்’ – என்று உதாரனங்களைக் காட்டி காலச்சுவட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. காலச்சுவட்டுக் கண்ணனுக்கு பேச இடமா கிடையாது? ஏன் வரிந்து கட்டி தளம் வழங்கவேண்டும். காலச்சுவட்டுக் கண்ணனை வைத்து லன்டனில் கூட்டம் போட்டுத்தான் நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வறுமைக்கு எப்படித் தள்ளப்பட்டீர்கள் ?
வியாபாரத்தை முக்கியப்படுத்தாத – அதே சமயம் பெரும்பானமை மக்களைச் சென்றடையக்கூடிய ஒரு பதிப்பகம் இன்று அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப சேர்ந்து முன்வாருங்கள். அதைவிட்டு மோடியின் வால்களை மோர்ந்துகொண்டு எழுதிப்பிழைக்க என மோசம்போகாதீர்கள்.
குறிப்பு
1. மோடி – குஜாராத்திய பாரதிய ஜனதா கட்சி –ஆயிரக்ககணக்காண முஸ்லிம் மக்களின் உயிரைக்குடித்த ரத்த வெறியன்.