வடக்கு மாகாண சபைத் தேர்தல் -2013

thanks -Uyrmai nov 2013

இலங்கையில் வடக்கில் நடந்து முடிந்திருக்கும் மாகாணசபைத் தேர்தல் ஒரு முக்கிய நிகழ்வு. சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைத் தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து தீர்மானித்துக்கொள்ள முடியாது. இருப்பினும் வடக்கின் நிகழ்வுகள் சில போக்குகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட 78.48 வீத வாக்குகளைப் பெற்று தமிழத்; தேசியக் கூட்டமைப்பு வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றியை ஈட்டியுள்ளது. தெற்கில் இருந்து வடக்குப் போகும் பஸ்களில் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் சனம் நிரம்பி வழிந்தது. தேர்தல் நாள் அதிகாலையிலேயே மக்கள் வாக்களிப்பதற்கு வரிசையில் நிற்கத் தொடங்கி விட்டனர். அதிகாலையில் சனம் அள்ளுப் பட்டு வருவதைப் பார்த்த இராணுவம் அவர்களைத் துரத்திவிட எடுத்த முயற்சிகளையும் தாண்டிச் சனம் கூடத்தொடங்கிவிட்டது. நடக்க முடியாத வயோதிபர்கள் கூட உறவினர்களால் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டு வாக்களிக்கச் செய்தனர். கிளிநொச்சியில் வாக்களித்த வயோதிபர் நடராசா வீடு திரும்பிய கையோடு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். வாக்களிக்கும் ஒரு சமூகக் கடமையை நிறைவேற்றியது அவரது வாழ்வின் இறுதி நிகழ்வாக இருந்தது. 68 வீத மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.

இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) அட்டகாசத்துடன் 1988ல் முதன் முதலாக இந்த வட மாகாண சபைத் தேர்தல் நிகழ்ந்திருந்தது. அத் தேர்தலில் வாக்களித்தோர் வீதத்தைப் பகிரங்கமாகச் சொல்ல வேட்பாளர்கள் வெட்;கப்பட்டு மறைக்குமளவுக்கு அந்தத் தேர்தல் முடிவுகள் கேவலமாக இருந்ததை அறிவோம். இதன்பின்பு 25 வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் இந்தத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

சனநாயகத்தின் தோல்வி

தற்போது நிகழ்நதிருக்கும் இத்தேர்தல் ‘இலங்கைக்குள் சனநாயகம் இருப்பதற்கான சான்று’ என அரச தரப்புகள் பிரச்சாரிக்கின்றன. தேர்தலை நடத்துவதே தமக்கு கிடைத்த ஒரு ‘வெற்றி’ என பசில் ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டார். ஆனால் தேர்தல் காலத்தில் நடந்த வன்முறைகள் இவர்களின் பிரச்சாரங்கள் அனைத்தையும் பொய்யாக்குகின்றன. தேர்தலை வடக்கில் வெல்லும் கனவு அரசுக்கிருக்கவில்லை. ‘யார் வெல்லப் போகினம் என எமக்குத் தெரியும். ஆவை வெண்டா தமிழ் மக்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும்’ என ராஜபக்ச முன்கூட்டியே மிரட்டியிருந்தார். சனநாயகத்தை மதிக்கவேண்டும் என்பதற்காக அரசு தேர்தலை நடத்தவில்லை. கூட்டமைப்பு உட்பட நாட்டுக்குள் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் – மற்றும் முற்போக்குச் சக்திகள் – உலகெங்கும் இருக்கும் மனித உரிமை அமைப்புகள் ஆகியன குறைந்தபட்சம் 13ம் திருத்தச்சட்டத்தையாவது வடக்கில் நிறைவேற்ற வேண்டுமெனத் தமது அழுத்தங்களை உக்கிரப்படுத்தி வந்தன. தவிர வரும் நவம்பரில் கொழும்பில் நடக்கவிருக்கும் காமென்வெல்த் மாநாட்டுக்கு முன் ஒரு ;வித்தை’ காட்டித் தமிழ் மக்களின் எழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு அவசியம் இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டிருந்தது. இந்த நிலமையிற்தான் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பறித்த பின்பு தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் நடத்தியதன் பின்னணியில் அரசுக்குக் குறிப்பாக இரண்டு நோக்கங்கள் இருந்தன. சுனநாயக முறையில் தேர்தல் நடந்தது எனச் சொல்லி இலங்கையில் சனநாயகம் இருக்கிறது எனப் பறைசாற்றும் நோக்கம் ஒன்று. கூட்டமைப்புக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தவிர்ப்பதன் மூலம் தமக்கும் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என நிரூபிப்பது இரண்டு. இவ்வாறு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த அவர்கள் போட்ட திட்டம் பாழாய்ப் போனது. மக்களின் எழுச்சி அவர்கள் கண்ணில் மண்ணள்ளிப் போட்டது. கூட்டமைப்புத்தான் வெல்லும் என்பது ‘சனாதிபதியில்’ இருந்து குஞ்சு குருமான்கள் வரை எல்லோருக்கும் தெரிந்தேயிருந்தது. அது எப்படி வெல்லும?; அதன்மூலம் எத்தகைய அலை கிளம்பும்? என்பது பற்றிப் பலரும் அறிந்திருக்கவில்லை.

இந்த -வாக்களிப்பு அலை- எழுச்சிக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தொடரும் தேசிய ஒடுக்குதல் – மொழிவாரி ஒடுக்குதல் – காணிப் பறிப்பு – கடன் அதிகரிப்பு – என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருப்பினும் இதைவிட இரண்டு காரணங்கள் முக்கியமாக அவதானிக்கப்படவேண்டியவை.

ஈ.பி.டி.பி க்கு மறுப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) என்ற அரசுசார் ஆயுதக் குழுவும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் இதுவரை செய்துவரும் அநியாயங்கள் சொல்லி மாளாதவை. ‘தம்பி நாங்கள் குசு விடுறதெண்டாலும் அவங்களிட்ட சொல்லிப்போட்டுத்தான் விடோணுமாம்’ என அருவருப்புடன் சொன்னார் ஒரு கடைக்காரர். வேலை எடுப்பதாக இருந்தாலென்ன – ஒரு சிறு வியாபாரம் ஆரம்பிப்பதாக இருந்தாலென்ன – எல்லாக் காரியங்களுக்கும் டக்ளசை அண்டி நிற்கவேண்டியிருந்தமையால் பலரும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

ராஜபக்ஷவின் மகனின் ‘நெருங்கிய நண்பன்’ என அழைக்கப்படும் அங்கஜன் ராமநாதன் -ஆளும் கட்சியின்(இலங்கை சுதந்திரக் கட்சி) யாழ் மாவட்டப் பொறுப்பாளராகக் களம் இறங்கிய பிறகு அவருக்கும் டக்ளசுக்கும் ஏற்பட்ட போட்டியால் டக்ளஸ் ஆதிக்கம் பலவீனப்படத் தொடங்கிவிட்டது. இந்த இரு ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே நிகழும் போட்டிகள் சண்டைகள் அவர்கள் பலவீனத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நடந்த வாக்களிப்பை டக்ளசுக்கு எதிராக நிகழ்ந்த ஒருவகை ‘அரசியற் கிளர்ச்சி’ என்று வர்ணித்தாலும் பிழையில்லை. ஆயுத முனையில் தீவுப்பகுதி மக்களை இவ்வளவு காலமும் வெருட்டிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டக்ளசின் ஆட்களை மக்கள் தூக்கியெறிந்துள்ளனர். இவரின் கோட்டை எனச் சொல்லப்பட்ட தீவுப்பகுதியிற் கூட தோல்வி கிட்டியது பெரும் அடி. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்தநாட் காலை 26க்கும் மேற்பட்ட கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தீவுப்பகுதி எங்கும் டக்ளசின் ஆட்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

‘இவைகளின்ர ஆட்டத்த இந்த எலக்சனோட முடிக்கோணும்’ என வேலணை வங்களாவடிச் சந்தியில் வைத்து தீவுப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தேர்தலுக்கு முன் சொன்னார். ‘இவங்கள் பிறகு உங்களுக்கு ஆக்கினை தரமாட்டாங்களா?’ என நான் திருப்பிக் கேட்டேன். ‘தம்பி அங்க பார் அவற்ற ஆள் ஒண்டு வருது’; என தூரத்தில் வந்த சின்ன டிராக்டர் ஒன்றை அவர் சுட்டிக் காட்டினார். வுpற்பதற்கு மரங்களை வெட்டி எடுத்துச் சென்று கொண்டிருந்தது ட்ராக்டர். ‘கேட்பாரில்லத் தம்பி’. ‘கிடந்த வீடுகள் எல்லாம் கழட்டி வித்துப்போட்டான்கள்’. ‘மண்ணை வித்து முடிச்சுப் போட்டான்கள்’. ‘நாங்கள் எவ்வளவு நாளைக்குத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறது?’. என்றாரவர். அவர் வங்களாவடிச் சந்தியில் இருந்த கடையில் சீனி கடனுக்கு வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். இழப்பதற்கு எதுவுமற்ற அவர்கள் ஒரு விதத்தில் பயத்தையும் தாண்டிக்கொண்டிருந்தனர்.

கோயிற் திருவிழாவில் யாரோ ஒருவருக்குக் கோப்பையில் சாப்பாடு கொடுக்காமல் ஏற்பட்ட சண்டை பற்றி விசாரித்தேன். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் டக்ளசுக்கு ‘உண்மையான’ ஆதரவு இருப்பதாகச் சில பிரச்சாரங்களை நான் முன்பு கேள்விப்பட்டிருந்தேன். அதன் போலித்தன்மையை நேரடியாகப் பார்;க்கக்கூடியதாக இருந்தது. என்னோடு பேசிக்கொண்டிருந்த முதியவரும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். எங்களை அண்டிப்பிழைக்க வைச்சுப்போட்டாங்கள் என அவர் டக்ளசைக் குற்றஞ்சாட்டினாரவர். பொடியள் அவரிட்ட அடிமைச் சேவகம் செய்துதான் வீட்டில தேத்தண்ணிக்குச் சீனி வாங்கவேண்டியிருக்கு என்றார். -அவரோட நிற்காட்டி ஒண்டும் கிடைக்காது- என்றார். -இப்ப கன பொடியள் அவர விட்டுப்போட்டு வந்திட்டாங்கள்- என்றார். அவர் சாதிப்பிரச்சனை பற்றி வெளிப்படையாகவும் துணிவாகவும் பேசினார். முன்னில்லாத அளவு தற்போது சாதிய திமிர் வளர்வதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் கோயிலில் நடந்த பிரச்சனையை முழுமையாக விபரிக்க மறுத்த அவர் வேணுமெண்டுதான் இதக் கிண்டுறாங்கள் என்றார். அவருடன் பல விசயங்களில் முரண்பட்டுப் பேச வேண்டியிருந்தது. நாம் சொல்லும் கருத்தை அவர் கேட்கத் தயாரில்லை – யார் சொல்லும் கருத்தையும் அவர் கேட்கத் தயாராக இல்லை. ‘என்ர வோட்டு வீட்டுக்குத்தான்’ என அவர் வங்களாவடிச் சந்தியில் வைத்து உரத்துச் சொல்ல எனக்கு குலை நடுங்கிப் போய்விட்டது. வந்த அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு நான் ‘மாறிட்டன்’. (வீடு கூட்டமைப்பினரின் தேர்தல் சின்னம்). சற்றுமுன் தான் இராணுவத்தின் ‘இன்டலிஜன்டில்’ இருக்கும் ஒருவர் அங்கு மோட்டர் சைக்கிளில் வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போயிருந்தார். ‘நாங்க இருக்கிறம் ஒருத்தரும் பயப்பிடவேண்டாம்’ என்றுவேறு உரத்துச் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அவர் புலிகள் இயக்கத்தில் முன்பு முக்கிய பொறுப்பில் இருந்ததாக எனக்கு முதியவர் விளக்கியிருந்தார்.

‘சர்வதேசத்தில்’ போலி நம்பிக்கை

கூட்டமைப்பின் கடும் பிரச்சாரங்கள் வாக்களிப்பின் எழுச்சிக்கு இன்னுமொரு முக்கிய காரணமாக இருந்தது. தாங்கள் ‘ராஜதந்திர’ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ‘சர்வதேச சமூகங்களுடன்’ நேரடியாகப் பேசிக்கொண்டிருப்பதாகவும் சுமந்திரன் பேசாத மேடையில்லை. கூட்டமைப்பு ஒரு போராட்ட இயக்கமாகவும் அரசியற் கூட்டணியாகவும் இருப்பதால் உங்களுக்கு இப்ப எல்லாத்தையும் சொல்ல முடியாது என்று கூட ஒரு வண்டில் விட்டிருந்தாரவர். ‘வெளிநாடும் இந்தியாவும் எங்களோட இருக்கு என்ற பிரமையை மக்களிடம் ஏற்படுத்துவதில் கூட்டமைப்பு ஓரளவு வெற்றி கண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையிற்தான் நவி பிள்ளையின் விஜயம் நிகழ்ந்தது. தேர்தல் தருணத்தில் அவருக்கு ஒரு உலாத்துக் காட்டிச் சர்வதேச அரசியலில் ஒரு ‘கோல்’ போடலாம் என ராஜபக்ஷக்கள் கண்ட கனவை நாட்டை விட்டு வெளியேறியதும் கவிழ்த்துப் போட்டார் பிள்ளை. -இலங்கை சர்வதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது – என்று அவர் விட்ட சின்னக் கதைக்கே இனவாத சக்திகள் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டன. ‘எனக்கெண்டா விளங்கேல்ல- எனக்கெண்டா விளங்கேல்ல’ என ராஜபக்ஷ ‘அப்பாவியாய்’ பேட்டி கொடுத்ததைப் பார்த்திருப்பீர்கள்.

நவநீதம்பிள்ளை விஜயம் செய்தபோது அவருக்குப் படம் காட்ட ஓமந்தை செக் பொயின்ட் தூக்கப் பட்டிருந்தது. ஏனைய இராணுவ முகாம்களிலும் இராணுவம் உள்வாங்கப்பட்டிருந்தது. வெளியில் நடமாடிய இராணுவத்தினரும் சீருடையின்றி நடமாடினர். வடக்கெங்கும் நடந்த இந்தப் புதினம் மக்களின் மனத்துக்குள் மெல்லிய புன்னகையை முகிழ்;த்து விட்டிருந்தது. சனாதிபதி ஐயாவுக்கு ‘சர்வதேசத்தில்’ கொஞ்சம் பயம் கிடக்கு என மக்கள் நினைத்துக்கொள்ள இது உதவியது. கூட்டமைப்பின் பிரச்சாரம் இதைப் பலப்படுத்தியது. இதெல்லாம் இணைந்து பயத்தின் மூடியைச் சற்றே தூக்க கிடைத்த இடைவெளியில் கூட்டமைப்புக்கு வாக்குகள் பொங்கிப் பிரசவித்தன.

ஆக அரசுக்கெதிரான இந்த வாக்களிப்பை கூட்டமைப்புக்கு ஆதரவான வாக்கு என்றோ அல்லது கூட்டமைப்புச் சொல்வதுபோல் ‘மூன்றாங்கட்ட ஈழப்போருக்கான’ வாக்களிப்பு என்றோ அளவிடுவது தவறு. யுத்தத்துக்கு மக்கள் மத்தியில் எவ்வித ஆதரவுமில்லை. கூட்டமைப்பின் மேல் நம்பிக்கையில்லாமல் பலர் வாக்களிக்கச் செல்லவில்லை. வன்னியில் ஒரு பெரியவர் இரவோடிரவாகப் படலையை இறுக்கிக்கட்டி பூட்டுப் போட்டு பூட்டிவிட்டார். -ஒருத்தரும் ஒருத்தருக்கும் வாக்களிக்கக்கூடாது- என அவர் குடும்பத்துக்கு கூறிவிட்டார். ஆனால் அடுத்தநாட் காலை விடிய முதல் எழுந்துவிட்ட குடும்பம் வேலி பாய்ந்து வீட்டுக்கு வாக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள். சிலர் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் அல்லல்பட்டு வந்தவர்கள். ‘தம்பி இன்னும் ரெண்டு கம்பம் தான் கிடக்கு என சொன்னார் ஒரு அம்மா. அந்தப் பகுதிக்கு மின்சாரம் கொஞ்சங்கொஞ்சமாகக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு மின்சாரக் கம்பங்களைப் போட்டுவிட்டால் தமது கொட்டிலுக்கும் கரன்ட் வந்துவிடும் என்பதையே அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இடம்பெயர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்த அவர் ‘தம்பி இன்னும் ரெண்டு கம்பம்தான் கிடக்கு. அந்த ரெண்டையும் போட்டுட்டாங்கள் என்றால் கரண்ட் வந்திடும். அதுக்குள்ள பிரச்சினை கிரச்சினை ஒண்டும் வராதுதானே’ எனச் சந்தேகக் கண்களுடன் கேட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எதுக்கு இப்பிடிக் கேக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு ‘பிரபாகரன் திரும்பி வரப்போறேர் என்று கதைக்கினம். உண்மையே?’ எனக் காதுக்குள் குசுகுசுத்தார். திருப்பி யுத்தம் வராது என அவருக்கு தைரியம் வழங்கப் படாதபாடு படவேண்டியிருந்தது.

தேசியத்தை பாவித்து வாக்குப் பறித்தல்.

பல மக்கள் இன்றும் யுத்த பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பு அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. கூட்டமைப்பு இந்த தேர்தலின் போது செய்த பிரச்சாரம் துணிந்த பிரச்சாரம் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. அவர்களுக்கெதிரான பல தாக்குதல்கள் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக அவர்கள் தமது வேலைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது. வடக்கில் இருந்து வரும் உதயன் பத்திரிகை ஏறத்தாழ கூட்டமைப்பின் ‘கட்சிப் பத்திரிகை’ போன்றே பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இதற்கு ஈடு கொடுக்க முடியாமற் திணறினர் அரச ஆதரவாளர்கள். தேர்தலுக்கு முதல் நாள் ஒரு -போலிஉதயன-; பத்திரிகையை அவர்கள் மக்கள் மத்தியில் பரப்பினர். புலிகளின் முன்னாள் தலைமைப் போராளியின் துணைவியாரும் – கூட்டமைப்பின் முன்னணி வேட்பாளருமான அனந்தி சசிதரன் அரச தரப்புக்குத் தாவிவிட்டார் என்ற தலையங்கத்துடன் அப் போலிப் பத்திரிகை பரப்பப்பட்டது. இது மட்டுமின்றி ஏராளமான தேர்தல் வன்முறைகள் அவர்களுக்கெதிராக நிகழ்ந்தன. அனந்தியின் வீடு தாக்கப்பட்டது. தவிர பல இடங்களில் வெளிப்படையாக துண்டுப்பிரசுரம் கொடுப்பது அவர்களுக்கு முடியாமலிருந்தது.

சாவகச்சேரி சந்தியில் அங்கஜன் குழுவுக்கும் டக்ளஸ் குழுவுக்கும் இடையில் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது உட்பட பண்ணைப் பாலத்தில் ஆட்டோவை எரித்தது வரை பல்வேறு வன்முறைகள் மூலம் அரச ஆதரவாளர்கள் பயக்கெடுதியை ஏற்படுத்தியிருந்தனர். டக்ளசின் ஆதரவாளர்கள் பலர் பணத்துக்காக அங்கஜன் பக்கம் தாவி விட்டதாகக் கூறப்பட்டது. மாணவர் குழுக்கள்; சிலவற்றுக்குத் தலா இரண்டு லட்சம் அங்கஜன் வழங்கி தனக்குப் பிரச்சாரம் செய்யச் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார். வாங்கின காசுக்கு அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு இரவிரவாகத் தண்ணியடித்து – பின் அடுத்தநாள் அதே சுவரொட்டிகளின் மேல் கூட்டமைப்புச் சுவரொட்டிகளை ஒட்டி அவர்களுக்கு இலவச சேவை செய்ததாகச் சொல்லிச் சிரித்தனர் மாணவர்கள். அங்கஜனிடம் காசு வாங்கி துண்டுப் பிரசுரம் கொடுத்தவர்கள் தாம் காசு வாங்கித்தான் துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதாக மக்களுக்கு நேரடியாகச் சொல்லி விரும்பினால் நீங்கள் வீட்டுக்கு போடுங்கள் என்றும் சொல்லியுள்ளனர்.

அரச வேட்பாளர்கள் மேடைகளிற் புலம்பிய புலம்பல்களைக் காது கொடுத்துக் கேட்கமுடியாமல் இருந்தது. ‘அபிவிருத்தி. அபிவிருத்தி. அபிவிருத்தி’ என்ற மந்திரத்தை மட்டும் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்தனர். யுத்தத்தின் பின் சில ‘அபிவிருத்திகள்’ நிகழ்ந்திருப்பது உண்மையே. ஏ9 ரோட்டு புதிதாகப் போடப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணம் நோக்கி இரயில் பாதை போடப்பட்டு வருகிறது. பழைய கட்டிடங்கள் பல திருத்தப்பட்டுள்ளன – புதிய கட்டிடங்கள் சில எழும்பியுள்ளன. ஆனால் ரோட்டுப் போட்டது சீனா – இரயில் பாதை போடுவது இந்தியா என மக்கள் மத்தியில் அடித்து அடித்து விளங்கப் படுத்திக்கொண்டிருந்தது உதயன் பத்திரிகை. ஆக அபிவிருத்தி என அரசு ஊளையிட்டுக்கொண்டிருந்தது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. கூட்டமைப்பு வென்றால் ‘வடக்கின் வசந்தத்தை’ நிறுத்திவிடுவேன் என பிசில் ராஜபக்ஷ ஒரு மிரட்டு மிரட்டியிருந்தார். வடக்கில் கடன் காசில் நடக்கும் சில வேலைகளுக்கு அரசு ‘வடக்கின் வசந்தம்’ என பெயரிட்டிருப்பது தெரிந்ததே. ஏதோ ராஜபக்ஷ குடும்பச் சொத்தைக் கரைத்து வடக்கை வளர்ப்பதுபோல் பசில் அந்தரப்பட்டதும் மக்களிடம் எடுபடவில்லை.

வெளிநாட்டுக் காசை வைத்து தாம் அபிவிருத்தி செய்வோம் எனப் பிரச்சாரம் செய்கிறது கூட்டமைப்பு. அபிவிருத்தியாவது மண்ணாங்கட்டியாவது –எங்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ விட்டால் போதும் என்கின்றனர் சிலர். கொழும்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணித்தவர்களுக்குச் சில்லறை அபிவிருத்தியை அரசு ஊதிப்பெருப்பிக்கும் அரசியல் வெறுப்பைக் கொடுத்திருக்கிறது. சிலர் கூட்டமைப்பு இதை விடத் திறமையாக அபிவிருத்தியைச் செய்யும் என அவர்கள் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்துப் பேசுகின்றனர். எவருக்கும் அபிவிருத்தி போதவில்லை. இலங்கை அரசை விடத் தமிழர் கையில் வடக்கு கிழக்கு அதிகாரம் இருந்தால் கூடிய பலனை அனுபவிக்கலாம் என்பது பொதுக் கருத்தாக இருக்கிறது. இதனால் அரசின் அபிவிருத்தி பிரச்சாரத்துக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை செய்யவேண்டிய தேவை கூட்டமைப்புக்கிருக்கவில்லை.

தேர்தல் நெருங்கிய தருணத்தில் கூட்டமைப்பை நோக்கிச் சனம் படையெடுக்கப்போகுதென்று தெளிவாயிற்று. அரசுசார் வேட்பாளர்கள் எல்லாம் பதறித்துடித்து மும்முரப்பட்டனர். என்ர வோட்டும் வீட்டுக்குத்தான் என ஒரு அரச வேட்பாளர் தனக்குச் சொன்னதாக ஒருவர் தெரிவித்தார். அபிவிருத்தி பற்றிய பிரச்சாரம் செல்லாததால் அதைக் கடைசி நிமிசத்தில் திரிக்க முனைந்த அங்கஜன் ஒரு புதுத் தடாலடி செய்து கடைசி நேரத்தில் வாக்குகளை அள்ளலாம் எனப் பார்த்தார். ‘பாலங்கள் கட்டுவதையும் வீதிகளைப் போடுவதையும் அபிவிருத்தியாகக் காட்ட முனைகிறார்கள். உண்மை அதுவல்ல. நான் பேசுகிற அபிவிருத்தி தனிமனித அபிவிருத்தி’ என சனத்தைக் குழப்பிப் பார்த்தார். ஓவ்வொரு இளையோரும் சுயநிர்ணயம் பற்றி சிந்திக்கும் முறையில் ஒரு அபிவிருத்தியை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும் ஒரு போடு போட்டார் அவர்.

கூட்டமைப்பால் ஓரங்கட்டப் பட்ட இந்த அரச வேட்பாளர்கள் இறுதிக் கட்டத்தில் தாமும் ‘தமிழ்த் தேசியத்துக்குத்’ தாவினர். எங்களுக்கு வாக்களியுங்கள் – எங்களுக்கூடாக நீங்கள் சுயநிர்ணயத்தை அடையலாம் -ஏன் தமிழ் ஈழத்தைக் கூட அடையலாம் என்று கூறி மக்கள் வாயடைத்து வியப்படைய வைத்தார் ஒரு அரச வேட்பாளர். ஆனால் இந்த விசயத்தில் அவர்களால் கூட்டமைப்புடன் போட்டி போடமுடியவில்லை! பிரபாகரன் படத்தோடு நல்லூரில் நோட்டீஸ் விட்டுத் தமது ‘பச்சைத் துணிச்சலைப்’ பறை சாற்றியிருந்தனர் கூட்டமைப்பு ஆதரவாளர்கள். மக்களின் பிரச்சினையைப் பேசினால் எங்களைப் புலி என்று கூறுகிறீர்கள் – அப்படியாயின் நாம் புலிகளாயிருக்கத் தயார் என்று அறிவித்தார் சுரேஸ் பிரேமச்சந்திரன். அடுத்தநாள் அதைத் தலையங்கமாகத் தாங்கி வெளிவந்தது உதயன். இதே நாள் தெற்கில் வெளிவந்த சிங்களப் பத்திரிகைகள் தேர்தலை நிறுத்த துவேசச் கட்சிகள் வழக்குப் போட்டிருப்பதை தலையங்கம் எழுதியிருந்தன. தெற்கிலும் வடக்கிலும் வௌ;வேறு திசைகளில் தேசிய உணர்வு வளர்வதை தேர்தல் காலத்தில் இருமொழிகளிலும் வந்த பத்திரிகைகள் பிரதிபலித்தன.

மற்றைய மாகாணங்களிலும் அரசிற்கு பின்னடைவு

கூட்டமைப்பின் அமோக வெற்றி ராஜபக்ஷ அரசுக்கு ஒரு அடி என்று கூறுவது மிiகியல்லை. வடக்கில் தேர்தல் நடந்த அதே நேரம் மத்திய மாகாணத்திலும் வடமேற்கு மாகாணத்திலும் தேர்தல்கள் நிகழ்ந்தன. அவ்வாறு தேர்தலை நிகழ்தியதன் மூலம் மற்ற இரு மாகாணங்களிலும் பெரும் வாக்குகளைப் பெறலாம் என அரசு கணக்குப் போட்டிருந்தது. வடக்கில் மட்டும் தேர்தலை நடத்தி அது படுதோல்வியில் முடிந்திருந்தால் அரசின் பலவீனம் அம்பலப்பட்டிருக்கும். அது தெற்கின் எதிர்ப்புச் சக்திகளுக்கு மேலதிக உந்துதலையும் கொடுத்திருக்கும். ஆனால் வடக்கின் ‘பயங்கரவாத’ பயம் காட்டி மற்ற மாகாணங்களில் வாக்கைத் திரட்டுவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க அரசு திட்டமிட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. வடமேற்கு மாகாணத்தில் பிரச்சாரம் செய்தபோது பசில் இதைப் பச்சையாகப் போட்டுடைத்திருந்தார். ‘வடக்கில் தேர்தல் மூலம் துவேசமான பேரினவாதத்தைக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. அதன்மூலம் நாட்டைப் பிரிக்க தமக்கு உரிமையிருக்கிறது எனச் சர்வதேசத்துக்கு காட்ட அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதனால் அதை முறியடிக்க இந்த மாகானத்தில் எமக்கு பெரும்பான்மை வாக்குகளை நீங்கள் தரவேண்டும்’ என அதட்டியிருந்தார் அவர்.

அவர்களின் எந்த உத்தியும் பலனளிக்கவில்லை என்பதே உண்மை. 55.6 வீத வாக்குகளுடன் ஒட்டுமொத்தமாக 77 ஆசனங்களை வென்ற அரசு தனது வாக்குகளை முன்பை விட அதிகரிக்க முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கரைத்திருந்தார்கள். அரச கருவிகள் மற்றும் அதிகாரம் அனைத்தையும் தமது பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தினார்கள். ‘நாம் யுத்தத்தில் வென்றதன் மூலம் கிடைக்கும் பலனை கெடுக்கச் சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன’ எனச் சொல்லி – ஏகாதிபத்திய எதிர்ப்பு போர்வையில் வறிய மக்களின் வாக்குகளைத் திரட்ட முயன்றார்கள். மற்றய மாகாணங்களிலும் அபிவிருத்தி – அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மேலோங்கியிருந்தது.

அரச கட்சியை எதிர்ப்பதற்கு வக்கற்றதாக இருந்தது முக்கிய எதிர்க் கட்சியான ஐ.தே.க (ஐக்கிய தேசியக் கட்சி). 21.86 வீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்த பெரும் பின்னடைவை இத்தேர்தலில் சந்தித்திருந்தனர். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் விடாது கத்தித்தான் பார்த்தார். ‘துறைமுகம் ஒன்று உண்டு. ஆனால் அங்கு கப்பல்கள் வருவதில்லை. திறந்தவெளி விளையாட்டு மைதானம் ஒன்றுண்டு. ஆனால் விளையாட்டுகள் அங்கு நடைபெறுவதில்லை. மாத்தளையில் விமான நிலையம் ஒன்றுண்டு. ஆனால் அங்கு விமானம் வருவதில்லை. நுரைச்சோலையில் மின் நிலையம் ஒன்றுண்டு. ஆனால் அங்கு மின் உற்பத்தி இல்லை. இதுதான் அரசின் அபிவிருத்தி’ எனப் பேசி ரணில் மோதித்தான் பார்த்தார். ஆனால் அவர் கட்சி இயங்கும் அளவுக்கு விட்டு வைக்கவில்லை ராஜபக்ஷக்கள். ஐ.தே.க யின் இதுவரை கால வரலாற்றில் ஐ.தே.க இவ்வளவு பலவீனமாக இருந்திருக்காது என்றே சொல்லத் தோன்றுகிறது. இலங்கையில் இன்று ராஜபக்ஷவுக்கு வெளியே இன்னுமொரு பூர்சுவா கட்சி இல்லை என்று சொல்லுமளவுக்கு நிலமை மாறிவிட்டிருக்கிறது.

அரசு மற்ற மாகாணங்களில் தமக்கு பெரு வெற்றி கிடைத்ததாக தம்பட்டம் அடித்தாலும் அந்த வெற்றியின் பின்னணியை நாம் அவதானிக்க வேண்டும். ராஜபக்ஷக்கள் ஐ.தே.க யின் பல டே;பாளர்களை தொடர்ந்து காசுக்கு வாங்கி தமது மேடைகளை அலங்கரித்து வந்தனர். குறிப்பாக படுடுவான்ருவர மாவட்ட முன்னணி ஐ.தே.க உறுப்பினரான தயாசிறி ஜெயசேகரவை அரச கட்சி விலைக்கு வாங்கியது அவர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்திருந்தது. 84.43 வீத வாக்குகளுடன் வரலாறு காணாத வெற்றியீட்டியுள்ளார் கட்சி தாவிய தயாசிறி. தயாசிறி கட்சி மாற்றத் தாக்கம் மற்றைய இடங்களிலும் எதிரொலித்திருந்தமையைப் பார்க்கலாம். இனவாதத்தை முன்னெடுக்கும் தயாசிறி போன்றவர்களுக்கு கட்சி தாவுவதில் பிரச்சினையில்லை. அதன் கூலம் எதிர்கட்சி வாக்களையும் அவர்கள் அரச பக்கம் அபகரித்துச் செல்லக்கூடியதாக இருந்தது.

மத்திய மாகாணத்திலும் அரச கட்சிக்கு நேரடியான வாக்குகள் கிடைக்கவில்லை. அங்கு வாழும் மலையக மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க) மற்றும் தேசிய தொழிலாளர் சங்கம் (தே.தொ.ச) மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கூடாகவே அரச கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை அள்ளிக்கொண்டது. மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லும் இக்கட்சிகள் இன்றும் ஆட்சியில் இருக்கும் கூட்டணியுடனேயே இணைந்து வேலை செய்கின்றன. இதில் இ.தொ.கா கட்சியின் ‘தலைவர்’ ஆறுமுகம் தொண்டைமான் மந்திரியாக வேறு இருக்கிறார். தொண்டைமானுக்கும் திகாம்கரத்துக்கும் இடையில் நடந்த தேர்தல் வன்முறைகளால் மலையகம் ஆடிப்போயிருந்தது. வடக்கில் அங்கஜனும் டக்ளசும் அடிபட்டது துச்சம் என்று சொல்லுமளவுக்கு இவர்களுக்கிடையிலான அடிபாடு உச்சமாக இருந்தது. தொண்டைமானுக்கு காசு கொடுத்தாலும் மலையத்திலிருக்கும் இ.தொ.க வின் இறுக்குப்பிடியை விழுத்தவேண்டிய தேவை ராஜபக்ஷவுக்கு இருந்தது. அதனால் திகாம்பரத்துக்கும் காசைக் கொடுத்து மோத விட்டுக் கூத்துப் பார்த்ததாக மக்கள் பேசிக்கொண்டார்கள். ஒரு நாள் நல்ல வெறியில் தொண்டைமான் ஒரு பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தமக்கவர்கள் வேலை செய்ய வேண்டும் எனவும் திகாம்பரத்தை கைது செய்ய வேணடும் எனவும் மிரட்டிய சம்பவங்கள் போல் பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. தொண்டைமானுக்கு ஒரு பாடம் புகட்டாமல் விட மாட்டன் என திகாம்பரமும் சாராயத்தை வாரி வாரி இறைத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலான குடும்பங்களுக்கு தலா 5000 ருபா சாராயத்துக்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களின் அடிபாட்டுக்குள் நொருக்கப்பட்டு ஐ.தே.கட்சியினர் கூட -மனோ கணேசன் கட்சியினர் கூட தேர்தல் வேலைகள் செய்ய முடியாமலிருந்தது. ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளர் ஒருவரை வாங்க மில்லியன் ரூபாய்கள் பேரம் பேசப்பட்டது. இந்த மாதிரி ஆக்கினைகளால் அவர்கள் தமது பிரச்சாரங்களை மட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. நாலாயிரத்துக்கு உட்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மட்டும் கொடுத்து ஒரு குறிப்பிட்ட சிறு இடத்தில் மட்டும் வேலை செய்தபோதும் அவர்களுக்கு 500க்கும் ஐ.சோ.கட்சிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அரச கட்சி வன்முறையாளர்கள் தங்களைத் தவிர வேறு யாரும் பிரச்சாரம் செய்ய முடியாத நிலமையை உருவாக்கியிருந்தனர். நுவரெலியாவில் 6 ஆசனங்களை இ.தொ.கா பெற்றுக்கொண்டது. ( இது தவிர கண்டியில் தன்னிச்சையாக போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டனர்). மூன்று ஆசனங்களை தே.தொ.ச மும் ஒரு ஆசனத்தை ம.ம.மு வும் கைப்பற்றிக்கொண்டனர். முன்பு சிங்கள வேட்பாளர்கள் வென்றதுண்டு – இம்முறை பெரும்பான்மை ஆசனங்களையும் தமிழ் வேட்பார்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். முலையகத்திலும் ‘தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு’ மக்கள் வாக்களித்துள்ளனர் என்ற பிரச்சாரத்துக்கு இது துணை செய்கிறது. இந்த வாக்குகள் ராஜபக்ச அரசுக்கு ஆதரவான வாக்குகள் என்று சொல்லிவிட முடியாது. அரசுக்கு நேரடி ஆதரவு இனவாத சக்திகளிடம் இருந்து மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதும் மிகையில்லை.

தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பிளவு பலப்பட்டுவரும் அதே வேளை முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் அரசியல் நோக்கிச் சாய்வதையும் பார்க்கலாம். அரசைக் கடுமையாக எதிர்க்கும் அசாத் அலி அமோக வெற்றி பெற்றுள்ளார். அரசு சார்ந்து நிற்கும் முஸ்லிம் ‘தலைவர்கள்’ ஓரங்கட்டப்பட்டு வருவதை அவதானிக்கலாம். இருப்பினும் ‘முஸ்லிம் கட்சிகளுக்கூடா’ அரசு தனக்கு வாக்குகளைக் களவெடுத்துக்கொண்டிருப்பது தொடர்கிறது.

வடக்கைத் தொடர்ந்து கிழக்கிலும் மக்கள் தேர்தலுக்குள்ளால் தமது எழுச்சியைக் காட்ட முயற்சித்தால் அரசு மேலதிக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும். சிறப்பு ஆசனத்தை ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட்டமைப்பு வயங்கும் என்ற செய்தி மாணவர்கள் மத்தயில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. பலர் இதைப் பெருமையுடன் பகிந்து கொண்டார்கள். முதன் முறையாக ஒரு கட்சி வடக்கு – கிழக்கு – மலையகம் என பல இடங்களில் வெற்றி பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. கூடவே தெற்கின் முற்போக்கு சக்திகளையும் இணைக்கும் வல்லமை கூட்டமைப்புக்கிருக்குமாயின் ராஜபக்ச குடும்பத்தை சம்பல் போட்டு சாப்பிட்டு விட முடியும். ஆதற்கான முன்னோக்கு கூட்டமைப்புக்கிருபதாக தெரியவில்லை.

அரசு இனவாதத்தை தனது ஆதரவு குகையான வென்றெடுத்துக்கொண்டிருப்பதன் பகுதியாகவே ஜ.தே. கட்சியின் சரிவையும்; நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த இடைவெளியில் சரத் பொன்சேகாவின் சனநாயகக் கட்சி 3.5 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நாட்டின் மூண்றாவது சக்தியாக தான் வளர்ந்துள்ளதாக பொன்சேகா பெருமைப்பட்டுக்கொள்வதற்கு இது உதவுகிறது. ஆரசால் ஓரங்கட்டப்பட்டாலும் ‘தேசிய அபிமானி’- ‘தேசப்பற்றாளர்’ என்ற அவரது ‘கீர்த்தி;’யும் அவரது கணிசமான வெற்றிக்கு காரணம். ஜ.தே.க யி;ன குறிப்பிடத்தக்க வாக்குகள் பொன்சேகாவுக்கு போய்ச் சேர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாபெரும் தோழ்வியின் தொடக்கத்தை அனுபவித்திருக்கிறது ஜே.வி.பி. 1.25 வீத வாக்குகளை மட்டும் பெற்று ஒரு ஆசனத்தை தக்கவைத்துள்ளது ஜே.வி.பி. ஆட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாம் இனவாதத்தை எதிர்ப்பதாக ஜே.வி.பி பாசாங்கு காட்டுகிறது. இதனால் இனவாத வாக்குகளை இழந்த ஜே.வி.பி பாளாங்குழியிற் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் சிலர் தம்மை ‘முற்போக்காக’ காட்ட ஜே.வி.பி யை தூக்கிப்பிடித்ததை அறிவோம். அவர்களை ‘சேகுவேரா’ கட்சி என்றெல்லாம் தூக்கிப் பிடித்த ‘மூளை கூடியவர்கள்’ இன்று வாய் மூடிக் கிடக்கிறார்கள். அதன் மூலம் தமது ‘கீர்த்தியைக்’ அவர்கள் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அரசாங்கத்தை விட்டு வரமாட்டேன் என அடம்பிடித்தபடி அரச ஊழியம் செய்வதெ தன்கடமன் என ராஜபக்ச காலில் படுத்துக் கிடக்கிறார் விமல் வீரவன்ச. அவர் தொடர்ந்து கடும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறார். அக்கட்சிக்குள் பெரும் வாதங்களைச் செய்துவரும் பல இளையோர் கட்சியில் இருந்து வெயியேறி விட்டனர். இது பற்றி நமது பழய ‘அறிவாளர் மத்தியில் மௌனச் ‘சூது’ கவ்வும். ஜே.வி.பி யின் சிவு வெறும் தேர்தல் சார்ந்தது மட்டுமல்ல. பழய சமசமாஜ கட்சியின் சரிவு போல் இது ஒரு சரித்திரச் சரிவின் தொடக்கம்.

தற்போதய சர்வாதிகார அரசு விழுத்தப்படக்கூடியதே என்பதை நடந்து முடிந்த தேர்தல் திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் அது இலகுவான விசயமில்லை. இந்த சர்வாதிகார அரசை ‘தேர்தலில்’ பங்கெடுப்பதால் மட்டும் விழுத்திவிடுவது இலகுவல்ல. காமென் வெல்த் மாநாடு முடிந்ததும் கோத்தபய வீட்டுக் காப்பெட்டுக்கடியில் இருந்து என்னென்ன பூதங்கள் கிளம்பும் என்பது எமக்குத் தெரியாது. தேர்தல் காலத்தில் கூட்டமைப்பினர் மேடைகளில் விளாசித் தள்ளியவைகளை வைத்தே அவர்களுக்கு ‘நீதி மன்றம்’ மூலம் சமாதி கட்டி விட முடியும். முன்னாள் நீதியரசரை முடக்கி நீதித்துறையைத் தனது கைப்பாவை ஆக்கியுள்ளது அரசு. முன்னாள் நீதியரசர் ஷிரானிக்கு நாட்டை விட்டுச் செல்லத் தடையும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு முன்புபோல் ‘வெள்ளை வான்’ தேவையில்லை – நீதிமன்றமே போதும். நீதியரசரை முடக்குகிற அரசுக்கு – வடக்கின் முதலமைச்சர் முன்னாள் நீதிபதியை முடக்குவது ஒன்றும் பெரிய வேலையில்லை.

கூட்டமைப்பு தான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதில்லை. சர்வதேசம் பற்றி அவர்கள் கண்டபாட்டுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை வழங்கி பயத்தைப் போக்க உதவியிது உண்மையே. ஆனால் இந்தப் பிரமைகள் எல்லாம் விரைவில் சின்னாபின்னாக உடைக்கப்படப்போவது உறுதி. வேளிநாட்டு நிதி இவர்களுக்கூடாக நேரடியாக வடக்குக்கு வரும் என அவர்கள் பேசியதன் உண்மை விரைவில் வெளித்தெரிந்துவிடும். தவிர அரசை எதிர்கொள்ளும் எந்த பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இவர்கள் தேர்தல் அறிக்கை பேசவில்லை. சுய நிர்ணயம் என்ற பதத்தைப் பாவித்ததற்காக பலமாக விவாதிக்கப்பட்ட அவர்கள் தேர்தல் அறிக்கையில் அவர்கள் சாடை மாடையாக குறித்திருக்கும் பொருளாதார கொள்கை ஐ.தே.க யின் கொள்கைகளில் இருந்து – அரச கொள்கைகளில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. வெளிநாட்டு வியாபாரிகளைக் கொண்டுவந்து சுரண்டி மேய விடுவதன் மூலம் மக்களுக்கு சுதந்திரந்தைக் கொண்டு வந்துவிட முடியும் என கூட்டமைப்பு நம்புகிறது.

புறக்கணிக்கப்பட்ட அடிப்படைக் கேள்விகள்

தேர்தலின் போது இது பற்றி யாரும் பேசவில்லை. கூட்டமைப்பின் தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் வேட்பாளர்களின் மரண அறிவித்தல்கள் போல் இருந்தன. ‘அன்னார் இத்தனையாம் ஆண்டு பிறந்தார். இங்கே இங்கே கல்வி கற்றார். அவரது உற்றார் உறவினர் இவர் இவர்’ என விரிந்த துண்டுப் பிரசுரங்கள் மக்களின் தேவைகள் பற்றிப் பேசவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரரின் துண்டுப் பிரசுரமும் அத்தயை ஒரு ‘துன்பியற் சம்பவமே’. ‘படிச்ச – கெட்டிக்காரர்தான் தேர்தலில நிக்கினம்’ என ஒரு இமேஜை உருவாக்க அவர்கள் படாதபாடு பட்டிருந்தனர்.

தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள தூக்குக் கயிறு பற்றி ஒரு குறிப்பும் அவர்கள் பிரச்சாரங்களில் இல்லை. ஒட்டுமொத்த இலங்கையுமே பெரும் பொருளாதாரச் சரிவை எதிர் நோக்கி நிற்கிறது. பொருட்களின் விலைகள் விண் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றன. ரூபாயின் பெறுமதி விழுந்துகொண்டேயிருக்கிறது. வங்கிகள் சிறு தொழில்களுக்குக் கடன் வழங்குவதை நிறுத்தத்தொடங்கிவிட்டன. பல சிறு தொழில்கள் நாடெங்கும் மூடப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பல சிறுதொழில் வியாபாரிகள் ரோட்டுக்கு வந்துள்ளனர். பணத்தை இழந்து நிர்க்கதியானவர்கள் பலர் தற்கொலை செய்யத் தொடங்கியுள்ளனர். அண்மைக் காலத்தில் மட்டும் 26 பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். கை;ரோ பைனான்ஸ் மூலம் வங்கிகள் – குறிப்பாக இந்திய வங்கி – மக்களைக் குடைந்தெடுத்துக்கொண்டிருக்கிறது. வட்டி தராதவர்கள் பாலியல் ரீதியிற் துன்புறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. சிறு தையல் தொழில் வைத்திருந்த வயதான பெண் ஒருவர் எல்லாம் இழந்து நிர்க்கதியாகி – வங்கித் தொல்லை தாங்க முடியாமல் இந்திய வங்கி முன் வந்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். இதைப் பத்திரிகைகள் மூடி மறைத்திருக்கின்றன. கூட்டமைப்பும் கண்டுகொள்ளவில்லை.

இந்திய அரசு காப்பாற்ற வரும் என்று பிரச்சாரிப்பதில் கூட்டமைப்புக்குப் பங்குண்டு. இது தெற்கு இனவாதிகளின் பிரச்சாரத்துக்கு உதவுகிறது. தேசியத் தொலைக்காட்சி ஒன்று இந்தியத் தேசியக் கொடியைப் பறக்கவிட்டபின்தான் வடக்கு தேர்தல் முடிவுகளை அறிவித்தது. வடக்கின் சிறு எழுச்சியை உபயோகித்து தெற்கின் இனவாதம் மேலும் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. -ஜாதிக கெல உருமய- என்ற பச்சை துவேசக் கட்சியின் தலைவர் சம்பிக ரணவக்க ‘கூட்டமைப்பு வெள்ளவத்தையை நந்திக்கடல் ஆக்க முயற்சிக்கிறது’ என மிரட்டியுள்ளார். கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தையில் இருக்கும் வியாபாரத் தலங்களையும் வீடுகளையும் துவேசிகள் தாக்கத் தூண்டும் பேச்சிது. வெள்ளவத்தை மருதானை போன்ற இடங்களில் ஏராளமான முஸ்லிம் மக்களின் வியாபாரங்களும் வீடுகளும் இருப்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள பௌத்த இனவாதம் தமிழ் முஸ்லிம் வியாபாரத் தலங்களைக் குறிவைத்து இயங்கும் தன்மையையும் நாம் அவதானிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் போராட்ட அரசியலை நாம் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்போமானால் ஏமாந்துதான் போவோம். ஈழத்துக்குள்ளும் – அகில இலங்கைக்குள்ளும் ஒரு மாற்றுப் போராட்ட அரசியலைக் கட்டி எழுப்புவது இன்றைய சமூகத்தின் தலையாய கடமை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *