ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும்

பிரான்சில் 6 வருடங்களுக்கு முன்னரே பாடசாலைகளில் மத அடையாளங்கள் அணிந்திருக்கக் கூடாது என்ற சட்டம் போடப்பட்டது. அது ஏனைய மதத்தவர்களையும் உள்ளடங்கியதாக இருந்த போதும் குறிப்பாக முஸ்லிம்களைக் குறியாகக் கொண்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.இஸ்லாமிய எழுச்சி பற்றிய பயமே அதைத் தொடர்ந்து தற்போது ஹிஜாப் அணியத் தடை போட்டுள்ளது. -பர்தா ஒரு நகரும் சிறை- என்று பிரான்சின் நாடாளுமன்ற அறிக்கை தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் மத அடையாளத்தை மறுதலிப்பது என்பதில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.காலத்தின் தேவை கருதி 2007 இல் பிரசுரமாகிய கட்டுரை மீள்பதிவிடப்படுகின்றது.

லகெங்கும் வலதுசாரி அரசுகளும் ஊடகங்களும் ஆசிய, ஆபிரிக்க மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலை ஓங்கி நடத்துகின்றன. “எங்களது கலாச்சாரத்துக்கு உட்பட்டு நடவுங்கள். அப்படி முடியாதென்றால் இங்கு வர வேண்டாம்” என்று ஏதோ தகப்பன் தனக்கு எழுதி வைத்த காணித்துண்டு போல் இங்கிலாந்து பற்றி பிரதமர் அண்மையில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஈராக்கில் அநாவசியமாக மில்லியனுக்கும் மேலான அப்பாவி மக்களின் சாவுக்கு நேரடிக்காரணமான இந்த நாய் அமெரிக்க கிறிஸ்தவ வலதுசாரி தலைவர்களின் கால்களை நக்கிக்கொண்டு முஸ்லீம்களைப் பார்த்து எங்கள் கலாச்சாரத்துக்கு அடிபணியுங்கள் என்று சொன்னது சகிக்க முடியாதது. ஏற்கனவே வெறுப்படைந்துள்ள ஏராளமான இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளும் வேலைதான் இது.

இவர் சொல்லும் காலச்சாரத்துக்கு எதிராகத் தான் மில்லியன் கணக்கான மக்கள் தெருத்தெருவாய் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இவர் குறிப்பிடும் இந்த கலாச்சாரத்துக்கும் பெரும்பான்மை இங்கிலாந்து மக்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. ஜாக் ஸ்ரோ, ஜோன் ரீட் போன்ற அமைச்சர்கள் மக்கள் நலம் என்ற பெயரில் சுயநலமாக முஸ்லீம்களை வேதனைப்படுத்துகின்றனர். ஜனநாயக முறைகளுக்காவது இவர்கள் கட்டுப்படுவார்கள் என்று நப்பாசை கொண்ட சனங்களின் முதுகில் சாட்டை வீசிக்கொண்டிருக்கிறார் ஜோன் ரீட்.

சில ஜனநாயக உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று அவர் கூறிய போது நாம் பேச்சிழந்துவிட்டோம். ஹிட்லரைப்போல முஸ்லீம்களைப் பொறுக்கி எடுத்து வதை முகாம்களில் புதைக்கும் நடைமுறை வெகுதூரத்தில் இல்லை என்று நாம் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜோன் ரீட் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கும் பாசிசத்துக்கு எதிரான போருக்கும் வேறுபாடில்லை என்று அறிவித்துத் துவேசம் துப்பினார்.

இவர்கள் அச்சப்படும் இங்கிலாந்து முஸ்லீம்களின் நிலை பற்றி நாம் கதைத்துத்தான் ஆகவேண்டும். இந்நாட்டில் மிகவும் ஒடுக்கப்படும் மக்களாகவும் மிகவும் வறுமையில் வாடுபவர்களாகவும் இருப்பவர்களின் மேல்தான் இவ்வளவு துவேசமும் காட்டப்படுகின்றது. இங்கிலாந்து முஸ்லீம்களில் 35 வீத குடும்பங்கள் எந்தவித வருவாயும் அற்று வாடுகின்றன. 73 வீதமான முஸ்லீம் சிறுவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். 28 வீதமான இளைஞர்கள் வேலையற்று இருக்கின்றனர். முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் நாட்டின் அதிகூடிய வறுமையான பகுதிகளாக இருக்கின்றது. இப்படியிருக்க உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு ஒன்றின் அரசாங்கம் இந்த வறுமையை- வேலையின்மையை போக்க முயற்சி எடுக்கும் என்று சிலர் கனவு காணலாம். ஆனால் அதற்கு எதிர்மறையாகவே எல்லாம் நடக்கின்றது.
2001ம் ஆண்டிற்குப் பிறகு ஆசியர்கள் மத்தியிலான பொலிசின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வருடத்திற்குள் ஆசியர்களை நிறுத்தி விசாரணை செய்வது மிகவும் அதிகரித்துள்ளது. இதை உள்துறை அமைச்சு பெருமையாக வெளியிடுகிறது. 47 வீத ஆசிய இளைஞர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடைமுறைகளுக்கு ஆதரவாக இமாம்கள், பல்கலைக்கழக கல்வியாளர்கள், வியாபாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்று ஒரு சிறுபான்மையைத் தன்வசம் இழுத்து வைத்துள்ளது அரசாங்கம். ஏறத்தாள 5000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மில்லியனர்கள் வாழும் இங்கு இது சாத்தியப்படுவது ஒரு புதிரில்லை. இருப்பினும் 1.6 பில்லியனுக்கும் அதிகமாக வாழும் முஸ்லீம் வறிய மக்களை இந்த ஆயிரத்துச் சொச்ச முஸ்லீம் ஆதரவாளர்களை கொண்டு கட்டி ஆளலாம் என்று நினைப்பது தான் தவறு.

இதில் அதிகூடிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லீம் பெண்கள் தான். அரச ஒடுக்கு முறைகளுக்கு மேலாக குடும்ப ஆணாதிக்க ஒடுக்குமுறைகளையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். அதற்கு உதவுமுகமாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாராளுமன்ற தலைவருமான ஜாக் ஸ்ரோ முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட சில புத்திஜீவிகள் இதைப்பற்றிப் பிடித்துக் கொண்டு பிரச்சனையைக் கிளப்புகின்றனர். ஹிஜாப் அணிவதை எப்படி நியாயப்படுத்துவது? மதமொன்றின் பெண்களின் மீதான அடிமைப்படுத்தலின் அடையாளத்துக்கு ஆதரவு கொடுக்கலாமா? என்று அவர்கள் ஓங்கிக் கத்துகின்றனர். அவர்களுக்கு முதல் தெரிய வேண்டியது ஹிஜாப் அணிவது முற்றுமுழுதாக மதம் சார்ந்த நடவடிக்கை அல்ல என்பது.

இன்று உலகெங்கும் கிறிஸ்தவர்களாலும் ஏனைய மதத்தவர்களாலும் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் கூட ஒரு மதச்சடங்கல்ல. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் புற்றீசல் போல கிளம்பிய வியாபார நடவடிக்கைகளின் மூலம் மாறிய பொருளாதார சமூக உறவுகளே அதன் தோற்றத்தின் அடிப்படை. இயேசு காலத்தில் இருந்து கொண்டாடப்படுவது போல் ஒரு பிரேமையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். உண்மையில் 18ம் நூற்றாண்டுக்கு முந்திய தலைமுறைக்கு கிறிஸ்மஸ், கிறிஸ்மஸ் தாத்தா என்றால் என்னவென்று தெரியாது. மதத்தின் செல்வாக்கு காரணமாக கிறிஸ்மஸ்க்குள் இயேசு புகுந்து மதச்சடங்காகிப் போனது. நிலப்பிரபுத்தவத்தின் கை ஒடுங்கி முதலாளித்துவ புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் இது நிகழ்ந்தது.

இதுபோல் தான் நிலப்பிரபுத்தவத்தின் கை உச்சிக்கு வந்த பொழுது மதம் சமுதாயத்தின் பல்வேறு நடவடிக்கைகளை நிர்ணயித்தது. ஹிஜாப்பின் கதையும் இது தான். சுமேரியர் காலத்தில் இருந்து ஹிஜாப் அணியப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. பல்வேறு மதத்தினரும் இதை அணிந்து வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. (இந்துமதம், கிறிஸ்தவ மதம் உட்பட) ஏறத்தாள ஒரு 600 ஆண்டுகளுக்கு முன்பு Umayyad and Abbasid Dynasties காலத்திலேயே இது மதத்துடன் இணைக்கப்படத் தொடங்கியது. பின்பு சவுதி அரேபியாவில் இஸ்லாமில் ஏற்பட்ட பிரிவான வாகாயிப் பிரிவு கொண்டு வந்த பல்வேறு ஷெரியா சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றானது.

குர்ரானில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் எழுதப்படவில்லை. நபிகளின் மனைவியார் ஹிஜாப் அணிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அக்காலத்தில் ஹிஜாப் அணிவது உயர்தரவர்க்க நடவடிக்கையாக – அதுவும் பெண்கள் இளைஞர்களை கவரும் ஒன்றாகவே நிகழ்ந்தது.

நிலப்பிரபுத்துவ வரலாறு முடிவுக்கு வந்த பொழுது இஸ்லாமிய நாடுகளில் இதற்கு எதிரான குரல் எழும்பியது. 1923ல் துருக்கியில் ஹிஜாப்புக்கு மறுப்புத் தெரிவித்தார்கள். அதே ஆண்டு லெபனான், சிரியா, துனிசியா முதலான நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் ஹிஜாப்பை துறத்தல் நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. ஈரானில் 1927ல் இருந்து 1941 வரை Reza Pahlavi கிஜாப்பை தடை செய்திருந்தார். 2006 நவம்பர் 3ல் பாகிஸ்தான் புஸ்வார் உயர் நீதிமன்றம் பெண் வழக்கறிஞர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தது. இவ்வாறு அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஒடுக்குமுறைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இருப்பினும் ஹிஜாப்பின் அரசியல் இங்கு முன்னணிக்கு வந்துள்ளமைக்கான முக்கிய காரணம் ஈராக் யுத்தமும் இவர்கள் கூறும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமுமே. இவர்கள் இதை முன்னிலைப்படுத்துவதற்கான காரணம் முஸ்லீம்களை கட்டுப்படுத்த மட்டுமே. மதத்துக்கு எதிரான அல்லது பெண்கள் உரிமைக்கான என்ற எந்த புனிதக் காரணங்களும் அவர்களுக்கு இல்லை.

மதம் பிற்போக்கானது, மதச்சடங்குகள் பல அடக்குமுறையின் வடிவங்கள் என்பது தெளிவானது. இஸ்லாம் மட்டுமன்றி கிறிஸ்தவ, இந்து, பௌத்த, யூத என்று அனைத்து மதங்களினதும் தேவை இன்று இல்லாமல் போய்விட்டது. மதங்களுக்கான வரலாற்றுத் தேவை இனிமேல் இல்லை என்று உறுதியாக கூறலாம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மதத்தை கடைப்பிடிப்பதற்கு தடையளிப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது. எந்த மதத்தை பின்பற்றவும் விரும்பிய உடை அணியவும் அனைவருக்கும் உரிமை உண்டு. இது ஒவ்வொருவரதும் அடிப்படை ஜனநாயக உரிமை. தடை செய்வது அல்லது மத, உடை அடிப்படையில் உரிமைகளை நிராகரிப்பது ஒடுக்குமுறைகளை அதிகரிக்க மட்டுமே உதவும். ஜனநாயகத்தை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது என்று ஜோன் ரீட் சொல்வது இதைத்தான். பிரான்சில் ஜாக் சிராக் செய்ததும் இதைத்தான். பிரெஞ்சு தொழிற்சங்க மற்றும் இடதுசாரி அமைப்புகள் இதற்கு ஆதரவழித்தன.

‘அரச கருமங்களில் இருந்து மதத்தை வேறுபடுத்திய வரலாறு கொண்ட பிரான்சில் பாடசாலையில் ஹிஜாப் அணிவதை தடுப்பது நியாயமானதே. அதை தடுப்பது மதம், பொதுமக்கள் நடவடிக்கைகளில் தலையிடும், வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் செயற்பாடு’ என்று பிரஞ்சு தொழிற் சங்கங்கள் வாதிட்டன. ஹிஜாப் போட்டு வந்ததற்காக ஒரு மாணவி பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் விதண்டா வாதங்கள் ஒரு முடிவுக்கு வந்தன.

பாடசாலைக்காகவும் அரசாங்கத்திற்காகவும் கதைப்பதா அல்லது வெளியேற்றப்பட்ட மாணவிக்காக போராடுவதா என்ற கேள்வியில் வேற்றுக்கருத்து ஏற்பட முடியாது. தொழிற்சங்கங்களுக்கு அவர்கள் அரசாங்கம் சார்ந்து எடுத்த முடிவு இந்த மாணவிக்காக போராட்டத்தை நடத்த முட்டுக்கட்டையாக இருந்தது. இத்தருணத்தில் ‘புரட்சிகர இடதுசாரிகள்’ என்ற கட்சி மட்டும் அந்த மாணவியின் உரிமைக்காக போராட உடனடியாக முன்வந்தது. அவர்கள் மட்டுமே அரசாங்க தடைக்கெதிரான சரியான வாதத்தை தொடர்ந்து வைத்து வந்தார்கள்.

அரச நடவடிக்கை – தடை முஸ்லிம் மக்களுக்கெதிரான திட்டமிட்ட நடவடிக்ககை அன்றி அவர்களுக்கு பெண்ணுரிமை பற்றி எந்த கவலையுமில்லை என்பதை ஆதாரத்துடன் தோலுரித்து காட்டினார்கள் புரட்சிகர இடதுசாரிகள். இந்தத் தடை வென்றெடுத்த பெண்ணுரிமை எது? என்று கேட்டார்கள். இதன்பின் இவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை ஆதரிக்க ஏனைய இடதுசாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக முன் வந்து தாமும் புரட்சிச் சாயம் பூச முற்பட்ட வெக்கக்கேடு நிகழ்ந்தது.

இதே தடை இங்கிலாந்தில் நடந்த பொழுது இங்குள்ள தொழிற்சங்கங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தன. கேள்வியின்றி ஹிஜாப்புக்கு ஆதரவாக தங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். ஹிஜாப் அணிந்த ஆசிரியை பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த பிரச்சனை விவாத மேடைக்கு தள்ளப்பட்டது.

வலதுசாரி மற்றும் மதம்சார் ஒடுக்குமுறைகளில் இருந்து விலகி ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் இருந்து தெளிவை ஏற்படுத்துவதன் தேவை இவர்கள் கவனிக்க தவறிய ஒரு முக்கியமான விடயம். கண்மூடி ஆதரவளிப்பது பிற்போக்கான மதசார்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயலாக மாறிப்போகும் அபாயத்தை பற்றி இவர்கள் அக்கறை எடுக்கவில்லை. ஜனநாயக உரிமை என்று சுருக்கமாக குறித்தல் ஒரு பெரும் கதையாடல். அந்த கதைக்குள் பல்வேறுபட்ட உரிமைகள் மோதிக்கொண்டிருக்கின்றன. எந்த உரிமையை முன்னிலைப்படுத்துவது என்ற முடிவை இவர்கள் கண்மூடி எடுப்பது கண்டிக்கப்பட வேண்டியதே. இருப்பினும் பிரெஞ்சு தொழிற் சங்கங்கள் போல அல்லாது பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க உடனடியாக முன்வந்த நடவடிக்கையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கல்வித்துறையில் ஹிஜாப் அணிவது பல்வேறு சிக்கல்களை எழுப்புகின்றது. முகத்தை மூடிமறைத்த ஆசிரியையிடம் இருந்து மாணவர்கள் கற்றுக் கொள்வதால் அவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? என்ற முக்கிய கேள்வி எழும்புகிறது. மனிதர்களுக்கிடையிலான உரையாடலில் முகத்திற்கான பங்கு ஆசிரிய – மாணவர்களின் நெருக்கம் எவ்வளவு தூரம் கல்வி வளர்ச்சிக்கு உந்துதலாய் இருக்கின்றது போன்ற பல்வேறு சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றது. இதற்கு சுருக்கமான விடை கிடையாது. ஹிஜாப் அணிவது பல்வேறு தொழில்களை (பெரும் லொறிகள் ஓ ட்டுவது, வழக்கறிஞர் தொழில் உட்பட) செய்வதற்கு தடங்கலாக இருக்கும் என்று பொதுவாக சொல்லலாம். ஆனால் அது ஒரு முழுமையான வரைவு அல்ல. கைகள் இல்லாத ஓவியக் கலைஞர்களையும் கண் தெரியாத பாடகர்களையும் இசைஞர்களையும் உடலின் ஒரு பாகமும் உபயோகமற்று முளை மட்டும் வேலை செய்யும் விஞ்ஞானிகளையும் என்று எத்தனையோ சாதனைகளை சாதித்த மனித குலத்திற்கு சேவை செய்ய ஹிஜாப் பெரும் தடை அல்ல. இருப்பினும் ஒப்பீட்டளவில் ஹிஜாப் அணிவதை முன்னிலைப்படுத்த முடியாது.

எவ்வளவு தூரம் ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறோமோ அதே அளவு ஹிஜாப் அணியாமல் இருக்கும் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தான் பல இங்கிலாந்து தொழிற்சங்கங்கள் தவறு செய்கின்றன. பல குடும்பங்களில் வற்புறுத்தலாலேயே ஹிஜாப் அணிகின்றனர். அதற்கு எதிராக கல்வி புகட்ட வேண்டியதும் தொழிற்சங்கங்களின் கடமை தான். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

எனவே எவ்வளவு தூரம் ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறோமோ அதே அளவு ஹிஜாப் அணியாமல் இருக்கும் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *