விவாதங்களும் – அவதூறுகளும்
1
2267 முகப்புத்தக நன்பர்களில் இன்று ஓருவரை விலத்தி வைக்க வேண்டியதாயிற்று. முகப்புத்தக நன்பர்கள் அனைவரும் நமக்கு நெருக்க மானவர்களோ அல்லது எல்லாரும் தெரிந்தவர்களோ அல்ல. ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் நன்பர்களாக கேட்டிருக்கலாம் – நான் அவர்களைக் கேட்டிருக்கலாம் அல்லது முகப்புத்தக பரிந்துரையில் இணைந்தவர்களாக இருக்கலாம். அது ஒரு பொருட்டில்லை. ஏராளமானவர்களுடன் நமது அரசியல் மற்றும் இலக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் எள்ளளவும் பின்னின்றதில்லை. அதனால் பலருடனும் நட்பாக இருப்பதில் சந்தோசமே.
ஆனால் இந்த குறிப்பிட்ட மடச் சாம்பிரானியின் ஆக்கினை தாங்க முடியாத அளவுக்கு போய்விட்டது. இவர் ஒரு மிகமோசமான இடதுசாரிய செக்டேரியன் அமைப்பைச் சேர்ந்தவர். நீங்கள் மூளையைக் கனக்க பிளிந்தெடுக்க தேவையில்லை. wsws என்ற இனையத்தளத்தை சுற்றி இயங்கும் – அல்லது இணைய புரட்சி செய்யும் குறுங்குழுவே அது. இவர்கள் தமது தளத்தில் எழுதும் பொய்கள் பிரட்டுகளுக்கு அளவே கிடையாது. எதற்கெடுத்தாலும் மற்றய இடது சாரி கட்சிகயைத் தாக்குவதும் புலம்புவதும் தவிர வேறு எந்த உருப்படியான வேலை செய்த வரலாறும் இவர்களுக்கு கிடையாது.
இவர்களின் படுபொய்களையும் திரிபுகளையும் சுட்டிக்காட்டி பல தடைவ தமிழில் எழுதியுள்ளேன். ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரைக்கு மட்டும் அந்த இனைய ஆசிரியர்கள் விழுந்தடித்து ஒரு சொதப்பல் பதிலை தமது இனையத்தில் பதிப்பித்திருந்தார்கள். இவர்களுடன் கதைத்து வேலையில்லை என விட்டாச்சு.
பேந்து பார்த்தால் இந்த இனையத்தை சுத்தித் திரியும் ஒரு ‘பழய’ நன்பர் தமது இனைய லிங்குகளை எனது டைம் லைனிலும் நான் பங்குபற்றும் அமைப்புக்கள் சார்ந்த முகப்புத்தக குழுக்களிலும் தொடர்ந்து போடத் தொடங்கினார். தாங்க முடியாமல் 2011ல் இவருக்கு ஒரு நீண்ட விளக்கத்தை எழுதி அனுப்பினேன். மிகவும் பொறுமையாக விசயங்களை விளங்கப்படுத்தி – தம்பி இந்த வில்லங்கம் வேண்டாமப்பு என ஒரு கடிதம் அனுப்பினேன். நாம் விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம் – எந்த விவாதத்துக்கும் நாம் பின்னிற்கப் போவதில்லை என்பதை அதில் அழுத்திக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அனாவசிய அவதூறுகளுக்கும் பொய்கள் மிரட்டல்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது – தயவு செய்து அதை தவிர்க்கும் படியும் கேட்டிருந்தேன். தவிர அனாவசியமாக வெறும் லிங்குகளை எடுத்துப் போடுவதை தவிர்க்கும் படியும் அரசியற் கருத்தை துணிந்து வைக்கும் படியும் கேட்டிருந்தேன். முடியுமானால் ஒரு கட்டுரை வடிவில் எமது அரசியற் கருத்துக்கு எதிரான கருத்தை வைத்தால் அரசில் ரீதியான பதிலை நாம் சொல்ல முடியும் – வாசிப்பவர்கள் எது சரி என்ற முடிவுக்கு வரட்டும் என குறிப்பிட்டேன். அத்தகைய கட்டுரைகளை அவர்கள் தமது இனையத்தில் வெளியிடலாம் – தமிழ் கட்டுரைகளை வெளியிட தயங்கினால் அதை எனது இணையத்தில் வெளியிட்டு பதில் சொல்ல முடியும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் எனக்கு தெரியும் தம்பி இதுக்கு மசிய மாட்டார் என. ஏனெனில் இவர்களோடு திரிந்த கொடிய அனுபவமும் எனக்குண்டு. அவர்கள் சொந்தமாக சிந்தித்து எதையும் எழுதுவதில்லை – ஆரையும் எழுத விடுவதும் இல்லை. இணைய ஆசிரியர்கள் என இருக்கும் முக்கிய புள்ளிகள் ஒன்றிரண்டுபேர் எழுதுவதை மொழி பெயர்த்துப் போட்டு அந்த லிங்குகளை இனையத் தளத்தில் காவிக் கொண்டு திரிவதோடு முடிந்து விடும் இவர்கள் அரசியற் கடமைகள். மொழி பெயர்ப்பும் மிக மோசமாக இருக்கும். இவர்கள் வழங்கும் ‘ரிப்போர்ர்ட்’ படிக்க முடியாது. வலதுசாரிய செய்தி இணையத்தளங்களை தினமும் பார்க்காதவர்களுக்கு ஏதோ கொஞ்சம் தகவல் இருப்பதுபோல் தோண்றலாம். அவ்வளவே. எல்லாக் கட்டுரைகளும் ஒரு போர்முலாவை பின்பற்றி எழுதப்பட்டிருக்கும். ஒரு தகவலுடன் ஆரம்பித்து பின் இடது சாரிகளுக்கு இரண்டு அடி போட்டு பின் முதலாளித்துவம் பிழை என முடிஞ்சிருக்கும் கட்டுரை. இதை மிஞ்சி அவர்கள் கட்டுiரைகளின் கட்டமைப்பு மாறுவதில்லை. அவர்களின் தமிழ் இனையத்தில் இவர்கள் சொந்தமாக எழுதிய கட்டுரைகள் என்று ஒண்றும் கிடையாது.
இது தவிர சனநாயக மத்தியத்துவம் என்றால் என்ன மசிரது என்று கே;க்கிற ஆக்கள் அவர்கள். மார்க்சிய அடிப்படைகளை இயந்திர மயமாக்கி ஒப்புவிப்பார்கள். ஒரு கதை பிசகினாப் போச்சு. நீ ஒரு பூர்சுவா – குட்டி பூர்சுவா – மத்தியதர தட்டு வட்டு என திட்டித் தள்ளுவதே இவர்கள் அரசியல் விமர்சனமாக இருக்கும். இந்த லட்சனத்தில் அரசியல் மறுப்புக் கட்டுரைகளைச் சொந்தமாக எழுதுவார்கள் என எதிர்பார்த்தது என் தவறுதான். இன்று வரை ஒழுங்காக ஒரு அரசியற் கட்டுரை எழுதிய வரலாறு அவருக்கு கிடையாது.
எனது நீண்ட மடலுக்கு என்ன பதில் வந்தது தெரியுமோ? நீ என் முன்னால் நன்பன் இன்று அரசியல் எதிரி என ஒரு பதில் வந்தது. என்னையும் எனது ‘மனைவி’ யையும் தான் கனவு கண்டதாகவும் அதில் ஒரு நீண்ட குறிப்பிருந்தது. எனக்குத் தெரியாமலே எனக்கொரு மனைவியை ‘நன்பர்’ கனவு கண்டிருந்தார். எனக்கு மனமுருகிப் போச்சு. சரி சும்மா அடிபடாத – நிஜதானமாக பேசு – அரசியல் முரன்களை கருத்து ரீதியாக வாதாடு – என பதில் போட்டேன். ‘நீ குட்டி முதலாளித்துவ தட்டின் நலன்களுக்காய் பேசுகிறாய்…சந்தித்துக்கொண்டால் காய் சொல்லிக்கொள்வோம் அவ்வளவுதான்’ என எனக்கொரு பதில் படாரென வந்து விழுந்தது. ‘ஜயா தங்களின் ஆய்வுக் கட்டுரை சிறப்பாக இருந்தது. எனது மார்க்சியம் பற்றிய தேடலில் மற்றுமொரு பாடமாக இதை கருதுகிறேன். ஆளை விடும்’ என ஒரு பதிலைப் போட்டேன். அதன்பிறகு நன்பர் கொஞ்சநாட்கள் ஓய்வில் இருந்தார்.
பின் 2013 அக்டோபர் மாசம் மீண்டும் தன் கைவரிசையைக் காட்டினார். இதற்கு முதலும் இடைக்கிடை தலையைக் காட்டி அங்கு ஒரு லிங்கு இங்க ஒரு லிங்கு என போட்டு விட்டு ஓடுவார். பொறுமையாக அறிவிப்போடு நான் அவற்றை தூக்கி எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இம்முறை விடாப்பிடியாக நின்றார். மீண்டும் நான் ஒரு நீண்ட விளக்கத்தை எழுதி இதுதான் கடைசித் தடவை – இனிமேல் அவதூறுகளை அனுமதிக்க முடியாது – தயவு செய்து அரசியல் முரன்களை கட்டுரையாக எழுதும். விவாதிப்போம். எனப் பதில் போட்டேன். அவர் எனக்கொரு வியாக்கியானம் அனுப்பினார். எனது டைம் லைனில் தான் லிங்கோ அவதூறோ போடுவதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என்று ஒரு போடு போட்டார் அவர். எனது நன்பர்களும் உறவினர்களும் தான் போடுவதை படித்து பயன் பெற்றுக்கொள்வார்களாம் – நான் முரன்பட்டால் நான் தான் விளக்கம் எழுத வேண்டுமாம். இப்பிடியும் ஒரு விளையாட்டு விளையாடலாம் என எனக்கு முந்தி தெரிந்திருக்கவில்லை. அப்ப தம்பி உங்கட குறுப்பு முகப்புத்தகத்திலயும் உங்கட இனையத்திலயும் நான் எழுதிறத போடுவிங்களோ என கேட்டதற்கு மூச்சும் இல்லை பேச்சும் இல்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு சவாலை அவர் முன் வைத்தேன். அவர் எழுதும் எதையும் எனது முகப்புத்தகத்தில் அனுமதிக்க நான் தயார் – அவர் கட்டுரைகளை எனது இனையத்தில் வெளியிடத் தயார். அவரேன் லிங்குகளைப் போடுவான் – அந்த விசர் கட்டுரைகளின் லிங்குகளை நானே எனது இனையத்தில் அறிமுகப்படுத்திவிடத் தயார். ஆனால் ஒன்றே ஒன்றை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எழுதும் கட்டுரையை அவர்கள் இனையத்தில் வெளியிட வேண்டும்.
அவ்வளவும்தான். அண்ணண் பொங்கி எழும்பி விட்டார். ‘மனித குலத்தின் அனைத்து முற்போக்கு சிந்தனைகளுக்கும் நீ எதிரி. நீ ஒரு குட்டி முதலாலித்துவத்தின் பிரதிநிதி’ என ஒங்கி எனக்கொரு அடி போட்டார். அப்பாடா தப்பினோம் என்றாகிப் போச்சு எனக்கு. தப்பித் தவறி சவாலை ஏற்றுக்கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் வீனே விரயமாகியிருக்கும் என எண்ணிப் பாருங்கள். ‘நாங்கள் களத்தில் சந்தித்துக்கொள்வோம்’ என ஒரு மிரட்டலும் பின்தொடர்ந்து வந்தது. தயவு செய்து ஆளை விடும் என கேட்டுக்கொண்டேன். கொஞ்ச நாட்கள் அமைதியாக கிடந்தவர் இவ்வருட ஜனவரி மாசக் கடைசியில் இருந்து தொடங்கி விட்டார். கண்ட பாட்டுக்கு திட்டி திட்டி போட்ட கருத்துக்களை நான் தொடர்ந்து தூக்கிக் கொண்டிருந்தேன். முட்டாள்களுக்கு வழி விடுகிறோம் என்ற ஒரு பழய கதையைச் சுட்டிக்காட்டி நாம் ஒதுங்கிக் கிடக்கிறோம் விட்டு விடும் என நான் கெஞ்சாத குறை. பதிலுக்கு தம்பி என்னைத் திட்டி ஒரு கமென்ட் போட்டுவிட்டு எனக்கு என்ன பதில் அனுப்பினேர் தெரியுமோ? முட்டாள்களுக்கு பதில் சொல்ல மாட்டன் என்டு போட்டு பிறகேன் பதில் போடுறீர் கருத்தை வெடடுறீர் எனக் கேட்டிருந்தேர். எப்பிடி என்னை மடக்கி பிடிச்சிருந்தேர் பாருங்கள். என்னே அறிவு என்னே அறிவு. இனிமேல் இப்பிடிச் சேட்டை விட்டா உம்மள ஒட்டுமொத்தமா தூக்கிறத பற்றி எனக்கு வேறு வழியில்லை என்று சொல்லிப் போட்டு விட்டு விட்டேன். தம்பி ஓய்ந்த பாடில்லை. அதனாற்தான் அவரை நன்பர்கள் பட்டியிலில் இருந்து தூக்கவைத்து நானும் இத்தகைய பாவங்களைச் செய்பவனாக்கியிருக்கிறேன். தூக்குவதில் ‘கன்னி கழித்துவிட்ட’ நன்பருக்கு நன்றிகள் (இத்தகைய சொல்லாடல் எனக்கு பிடிக்காவிட்டாலும் அந்த நன்பருக்கு நல்லாப் பிடிக்கும் என அறிந்து அவருக்காக இதை இங்கு விட்டு வைத்து கடைசியாக ஒரு அன்பை செலுத்திக் கொள்கிறேன்).
ஆனால் பாருங்கோ என்னையும் ஒருத்தர் முகப்புத்தகத்தில் முற்றாக முடக்கினவர். அவ்வாறு என்னை முடக்கிய அந்த ஓரே ஒரு நபரின் கதையையும் நான் எழுத வேண்டும்
2
நட்சத்திரன் செவ்விந்தியன் @Nadchathran Chev-Inthiyan ஒரு நல்ல எழுத்தாளன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் என சொற்ப எண்ணிக்கையானவர்களையே சொல்ல முடியும். அதில் ஒரு ஆள் இவர். ஆனால் இவரது அரசியற் பலவீனம் அவரை பல இடங்களிற் கவுத்து வந்திருக்கிறது.
“முத்துலிங்கம் போன்றவரது போலிச்சிறுகதைகளைப் படிக்கும் போது கிடைப்பது விலைமாதரோடு புணருவதற்கொப்பானது. அவர்கள் தங்களுக்கு ஆர்கசம் வந்ததாக சவுண்ட் கொடுப்பார்கள். அந்த சவுண்டை ரியூண் பண்ணக்கூடிய வஸ்துகளை நீங்கள் முதலிலேயே சாப்பிட்டிருக்கவேண்டும்” என இவர் ஒரு தடைவ எழுதியிருந்தார்.
ரயாகரன் என்ற யாரும் அறியா “புனைவு” மன்னனைத் தவிர பாலியற் தொழிலாளர்களை கேவலப்படுத்தி சீரியஸ் இலக்கிய வாதிகள் யாரும் இன்று எழுதுவதில்லை. இது அரசியல் பலவீனமான எழுத்தோ? காட்டும் பார்க்கலாம் என அவர் என்மீது பாயலாம். பாய்ந்தாப் பிறகு பேசுவோம். ஆனால் மேற்சொன்ன முத்தை உதிர்த்த கட்டுரையில் முக்கியமான விசயங்களையும் அவர் வெளிக்காட்டியிருந்தார்.
ஒரு மூடன் கதை சொன்னான் என்ற தலைப்பில் தனக்கே உரிய நடையில் எவ்வாறு முத்துலிங்கம் ஜெயமோகன் ஆகிய எழுத்தாளர்கள் ஆளுக்காள் முதுகு சொறிந்து இலக்கிய ஊழல் செய்கிறார்கள் என ரசித்து எழுதியிருந்தார் நட்சத்திரன்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கதைகளுக்கும் முத்துலிங்கத்தின் கதைகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால் முத்துலிங்கத்தை ஏதோ பெரிய எழுத்தாளனாக சிலர் முதுகுசொறிவது அடிக்கடி நடக்கிறது. முத்துலிங்கம் கிரனேட் பற்றி ஒண்டும் விளங்காமல் கிரனேட் களட்டிறதப் பற்றி எழுதியிருந்ததையும் நட்சத்திரன் ஒருக்கா சுட்டிக் காட்டியிருந்தார். பின்வருமாறு முத்துலிங்கம் எழுதியதை அவர் விமர்சித்திருந்தார்.
“கிரனேட் என்றால் அவளுக்கு பைத்தியம். பந்துபோல் தூக்கிப்போட்டு பிடித்துவிளையாடுவாள். பின்னைக்கழற்றி கிரனேட்டை மேலே எறிந்து அது திரும்பிவந்துதும் பின்னைச்சொருகி இடுப்பிலே அணிந்துகொள்வாள். கிரனெட்டின் ஆயுள் 5 செக்கண்தான். “ அது ஆயுளைத்தாண்டினால் உன் ஆயுள் போய்விடும் என்று சொல்லிச்சிரிப்பாளாம்”. கிரனேட்டை கழட்டினால் வெடிக்காமல் இடுப்பில எப்படி சொருகுவது என விசாரித்திருந்தார் நட்சத்திரன்.
வந்தது பிசகு. தொப்பியை தமக்களவாக போட்டுக்கொண்டவர்கள் எல்லாரும் நட்சத்திரனுக்கெதிராக தடியெடுத்தனர். ஷோபாசக்தி என்ற எழுத்தாளரும் விழுந்து கட்டி தாக்குதலில் இறங்கினார். இந்த எழுத்தாளருடய விவாத முறைகள் பற்றி வளர்மதி @Valar Mathi போன்றோர் பல விசயங்களை எழுதியிருக்கின்றனர். எல்லாவற்றுடனும் உடன்படா விட்டாலும் பல கருத்துக்கள் நுனுக்கமான அவதானங்கள். கொஞ்ச நேரத்தில் விவாதப் பாணி போகிற போக்கு புரிந்து கொண்ட நட்சத்திரன் பின்வருமாறு எழுதினார்.
“தமிழ்படமொன்றில் விவேக் ஒரு மாட்டு வைத்திய கல்லூரி மாணவனை பின்வருமாறு பூச்சாண்டி காட்டி மிரட்டுவான். ‘அண்டவெயர் ஆறுமுகம் தெரியுமாடா உனக்கு? ஜட்டி ஜாம்பவானை பற்றித்தெரியுமாடா உனக்கு’ அதேமாதிரி நீங்கள் இப்போ ‘பென்ரலைற்’ க்கு விளக்கம் கேட்கிறீர்கள் நாங்கள் கிரனேட்டை பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும்போது”
இவ்வாறு விவாதிக்கும் பழக்கம் ஷோபாசக்திக்கு உண்டு. ஷோபாசக்திக்கு எதிராகவும் சார்பாகவும் பலதடவை விவாதித்ததுண்டு. ஆனால் இந்த விவாதங்கள் இலக்கியம் சார்ந்த விவாதங்கள் அல்ல – மாறாக அரசியற் கருத்துக்கள் சார்ந்தவை. ஆனால் என்றைக்கும் அவர் பொருத்தமான – நிலையான முறையில் அரசியல் விவாதம் செய்த வரலாறு கிடையாது. எழுந்தமான முறையில் நினைத்தபடி அரசியல் காமென்ட் அடிப்பது விவாதமல்ல. நிலையற்ற முறையில் அடிபாட்டு விவாதம் செய்து –படங்காட்டல்கள் மூலம் கைதட்டு பெற நினைப்பவர் ஷோபாசக்தி. அதற்காக அவர் எழுதிய அனைத்துடனும் எனக்கு முரன் என்று சொல்லவில்லை. சில பொதுவான கருத்துக்களை யாரும் எதிர்க்கப் போவதில்லைத்தானே. ஆனால் நுனுக்கமான அரசியல் நுன்னுனர்வு அவருக்கு வாலாயப் படாததாகவே இருந்து வந்திருக்கிறது.
2009ம் ஆண்டு யுத்தம் அதன் கோரப் பின்னனிகள் சார்ந்து பலருடன் கடுமையாக முரன்பட நேர்ந்தது. அதில் ஷோபாசக்தியும் ஒருவர். புலி எதிர்ப்பு என்ற ஒற்றைக் கடை வைத்து வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் குருட்டுத்தனமாக வாதிட்டனர். புலிகள் மக்களை விட்டால் எல்லாம் சரியாப் போய்விடும் என்ற பாணியில் எழுதியும் பேசியும் வந்தனர். கடும் யுத்த மறுப்பு செய்ய தயங்கினர். சந்தர்ப்பத்தை பாவித்து ஈழம் என்ற பெயரில் புத்தகம் போட்டு வியாபாரமும் செய்தனர். அந்தப் புத்தகத்தில் மிகக் கேவலமான கருத்துக்கள் பல முன்வைக்கப்பட்டன.
சும்மா கட்டுரை எழுதி – காமென்ட் அடித்து இவர்கள் (ஷோபாசக்தியும் அ. மார்க்சும்) முறைப்படி பதில் சொல்லப் போவதில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதே சமயம் இவர்களின் வங்கிறோத்தை முறைப்படி பதிய வேண்டும் என நினைத்து பல அரசியல் விமர்சனங்களை தொகுத்து ஒரு சிறு புத்தகமாகவே எழுத வேண்டியதாயிற்று. அதை உயிர்மை வெளியிட்டது. அதன் சிறு பகுதி உயிர்மையிலும் வெளிவந்தது. அதன் ஆரம்ப பக்கங்களில் மட்டும் ஷோபாசக்தியின் விவாதப் பின்னனி எங்கிருந்து வருகிறது என்பதை மிகச் சுருக்கமாக விளங்கப்படுத்தியிருந்தேன். இச்சிறு கட்டுரையின் முதற் பாகத்தில் குறிப்பிட்டிருக்கும் கேவலமான இடது சாரி கட்சியின் பொய்களிலும் புரட்டுகளிலும் செக்டேரியன் பழக்க வழங்களிலும் அடிபட்டு பாதிக்கப்பட்டவர் இவர் – அதனாற்தான் அவரது இடது சாரிய மற்றும் மார்க்சிய அறிதல் குறுகி நிற்கிறது என காட்ட வேண்டியது அவசியமாயிருந்தது. இந்த வகை கேவலமான நிலையில் ஒரு போது நானும் இருந்தேன் என்பதையும் ஒத்துக்கொண்டிருந்தேன்.
அந்த ஒரு சில ஆரம்ப பக்கங்கள் தவிர மிகுதி முழுக்க அரசியல் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தது. இன்றுவரை அதற்கு பதில் இல்லை. இதற்குள் தான் விவாதத்துக்கு தயங்க மாட்டேன் என்றொரு விளம்பரம் வேறு. புத்தகம் கிடைத்த கையோடு ‘ஒரு மூச்சில்’ படித்து முடித்த சோபா உடன ஓடிப்போய் முகப்புத்தகத்தில் ஒரு காமென்ட் போட்டுவிட்டு என்னையும் தனது முகப்புத்தக நன்பர்கள் பட்டியலில் இருந்து முற்றாக முடக்கினார். நான் புத்தகத்தில் வைத்த விமர்சனங்களை தொடர்ந்து முகப்புத்தகத்திலும் வைக்கலாம் என அவர் பயந்திருக்கலாம். இவ்வாறுதான் முதன் முதலாக என்னை ஒருவர் நன்பர் பட்டியலில் இருந்து முடக்கினார். இதற்கு முதலோ பிறகோ இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.
இந்த முடக்கல் நான் முகப்புத்தகத்தில் எழுதிய கருத்துக்களுக்காகவோ – அவருக்கு தொல்லை கொடுத்ததற்காகவோ நிகழவில்லை. மாறாக உயிர்மை போட்ட ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்ற புத்தகத்தால் நிகழ்ந்தது. இது புத்தகத்துக்கான அவரது முறைத் தடை. போதாக்குறைக்கு தன்னையிழுப்பதால் வியாபாரம் நடப்பதாக மனுஸ்யபுத்திரன் மேல் கேவலமான ஒரு குற்றச் சாட்டும் வைக்கப்பட்டது. வியாபாரத்துக்காக ஈழம் என்ற பெயரில் பினாத்தல் கதைகளைப் போட்டது போன்ற கேவலமான வியாபாரத்தை மனுஸ் செய்யவில்லை. இது தெனாவெட்டு இல்லாமல் வேறென்ன? பதல் சொல்லுங்கோ பதில் சொல்லுங்கோ என நட்சத்திரன் ஓடித்திரிந்த போது பாவமாக இருந்தது. இவர்களுக்கு அரசியல் ரீதியான அக்கறையோ பதில் சொல்லும் ஆற்றலோ இருந்தால் ஏனப்பா வம்பு இவ்வளவு தூரம் வளரப் போகிறது.