நீலவான ஓடை
2008
(இதயக்கோயில் படப்பாடல் ‘வானுயர்ந்த சோலையிலே’ யின் முன்னிசை பின்னனியில் இதை படிக்கவும்- நன்றி இளையராஜா)
பின்புலம் கண்டு குதூகலித்தது சோபலீனா மலையும் மலைசார் கனவும் கடலும்
:-என்னே!
இளகிய இலக்கங்கள் விகிதாச்சார கணக்கில் விடைகள் தந்தன.
சிமினிக்குள் சிக்கிய சூரியன்
நீலக்கடல் இழுத்து சிவக்கடிக்க
பாவம் – பசுமை இழந்து சுவாசிக்கும்…
எங்கும் கரிபூசி நிறம்மாறிய ஆகாசத்தில் சுருங்கமுதல்
மடக் மடக் கென்று ரியோகா வயிறிறங்கும்.
எந்த விடியலும் கசக்கும் சுமை.
உட்கிடக்கை அறுத்து உயிர்ப்பது எவ்வாறு
கணவாய்ப் பொரியலுக்கு அலைந்த நாக்கு இன்றுபோல் இருக்கு.
மரத்தடியில் உண் மடிகனக்க முகம்புதைத்து
நீலம் தெறித்த மழைத்துளியில் பிரடி கனத்தது
– இன்றுபோல் இருக்கு.
‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வென்னிலா’ நீபாட
நாக்கறுந்து சா என்று நான் சபிக்க-
பழம்பாடல் புத்தகத்தை பரிசளித்தாய்.
‘வாழ்வே மாயமல்ல’ – மோகன் காலமது.
அவர் பாட்டுக்கு வாயசைக்க ‘நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகிறேன்’ என
கடவாயில் ஜொள்ளதிர மோகன் காதல்கள் மனங்கிளர்ந்த காலமது.
இப்பாடலின் முன்னிசை, உயிரை பிசைந்து ஈரலை தொடுகிறது என்று
ஈரக்கண்ணில் சொல்வாய்.
நல்ல காலமடி…!…-நிஜக்குரலை கேட்க கொடுத்து வைக்காத
கெட்ட காலமடி உண்கதை.
பேய்க்கனவும்
புறம்போக்கு பாடல்களும்
பறட்டை படர் தலை பறக்க மரஞ்சுத்தி ஓடி நாயகியை மடக்கிய நாயகரின்
புளித்த திரைக்கதையும்
கழிந்து போச்சு.
ஆனாலும் இன்றுபோல் இருக்கு
கவச வாகனத்தின் கழுத்தில் தலைவிட்டு
அமைதிப்படை அங்கிள் நீலவான ஓடையில் பாடியதும் இன்றுபோல் இருக்கு.
-‘பாழான நாளிதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை’-
அங்கிள் அடிச்ச நெருப்பில்
உண் நீலவானம் நிரந்தரத்தில் கறுத்தது.
மேற்சட்டை கிழித்து தெருத்தெருவாய் ஓடினாய் பாடினாய்.
மோகன் வாயசைத்த ‘முத்துக்கள்’ ஒன்றும் உன் மனப்பிரள்வில் சிக்கவில்லை.
ஊரை உறைய வைத்தன உன் பாடல்கள்-
ஜயோவென்று இசைபிளந்து
நீ திசைகாட்டி கால் உதைத்து மண் அலம்பி
சுழன்று டேய் என்று விரல்சுட்டி
மூச்சுவாங்க போச்சு போச்சு என் ஊர் போச்சென்று நீபாட
ஸ்தம்பிதம் – கனத்த நெஞ்சில் தேற்ற வழியற்று ஊர் தூர நின்றது.
என்தோழி – இன்றுபோல் இருக்கடி.
உன் சமன் விரல்கள் தலைகோதி
முகில் விலத்தும் ஒளி இழுத்து
மயிர் பறந்த ‘இன்று’ முகிலுக்குள் இரைதேடும்.
இன்றுபோல் இருக்கு
ஜயோ
இன்றுபோல் இருக்கு
கண் மிதக்கும் உண் மின்னல்கள்…-
பெரும் அலை தடவி படுத்திருந்து
சூரியச்சுடர் உண் தோலுரிக்க விடமுதல்
உயிர் உலுப்பி நிரந்தரமாய்
உண் கனவுரித்து விட்டார்கள்.
இனிமேலும் நீ இருந்தென்ன –நினைவுகளிற் கரைத்தாயிற்று செத்துப்போ.
ஆம்
இரனியன்தான் -உணக்குமட்டுமல்ல- எனக்கும் எல்லாத்திற்கும்.
துடிதுடித்து கண்சுருக்கி தொண்டை கனக்க ;சீ இருக்காது…இவனா’ என
வாய் மறுக்க மூளை கனம் தரும் ‘சுயம்’ சுமக்கும் இரனியன்.
என்னளவு தப்பித்தல் யாருக்குமில்லை.
ஆனால்…ஆனால்…
நான் கசிய ஒரு வாய்க்காலைக் கண்டுபிடித்தேன்.
வாய்கால் என்றுதான் எண்ணினேன்
ஆனால் அது அருவிமயப்பட்டு என்னை கடலிற் சேர்த்தது.
இந்த கடலைப்பற்றி உணக்கு கடைசியாக சொல்வேன்.
உன் அப்பன் எதிர்காத்தில் வலையிழுத்த கடலல்ல இது.
நாம் முளங்கால் நீரில் கணவாய் கடன்வாங்கிய கடலல்ல இது.
செங்கதிர் மோதி வானத்தில் பட்டாசு வெடித்து பகல் முடியும் பொழுதில்
புதுக்கதைகள் விசிறி மாரிக்காலத்தில் மயக்கும்
உன் பேருப்பு கடலல்ல இது.
உண் உயிர்தொட்ட வடுவை பகிரும்
வடுக்கள் இனைக்கும் எதிர்க் கடலிது.
சுனாமிகள் நிறைந்த இந்த புயற்கடலுக்குள் புகுந்துவிட்டேன்.
உணக்காக எனக்காக இது ஒன்றே நிம்மதி.
நினைவுகளுக்காய் ஒளிகாட்டி துளி சிந்தும் மயக்கத்திலும் இது மகா நிம்மதி.
‘தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும் வீனாக போச்சென்ற’
விசர்கதைகள் இனியில்லை.
இதோ –சொல்லிவிட்டேன் உணக்கு என் இரகசியத்தை.
சுனாமிக்கு மேலிருந்துகொண்டுதான் நீலக்கடல் கதைக்கிறேன்.
பகல் மங்கும்போது கதிர்சேர்த்து வரைதல் அறிதல்
சாத்தியமற்ற பயனமது.
இன்னுமொருவனுக்கும் இன்னுமொருத்திக்கும்….
-அந்த இன்னுமொருத்தி….
கனவிலும் நினைக்காத சாத்தியத்தை எண்ணி அழுதால்.
சுனாமி நுனியில் ஒற்றை காலின் ஒருவிரல் தொட
உணக்காகவும் பயனம் வரும் அவள் –
நினைவிளந்து அழுதாள்.
நன்றி – அனைத்து சாத்தியங்களுக்கும்
நன்றி.
அனைவருக்குமான சாத்தியங்களுக்கும் மீண்டும் கடல் கரையும்
வடுக்கள் அள்ளிப்போக வருவேன்.
சுனாமியில் இருந்து பார்த்தால்
கடல்நுனி எப்படியிருக்கும் என்பது எனக்கு தெரியும்.
‘ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மனற்பரப்பு
வேதனையை தூண்டுதென்று’
உண் பாடல் உயிர் துளைக்கும் அர்த்தமான எல்லை தாண்டிய
நீண்ட பார்த்தலை தருதடி சுனாமி நுணி.
கரும் வடுக்கள் விழுங்கும் ‘நீலவான ஓடை’ மத்தியில்
சிவப்பு மட்டுமே தெறிக்கும்.
நூள் இளையில் தடுமாறும் அந்த நுணி நடந்து விளைவேன் – அது சத்தியம்.
சாத்தியமற்ற சத்தியமென்று
உப்புக்காற்றில் பட்டம் விடுபவர்கள் படபடப்பார்கள்.
அதை என் கடற் துளிகள் துளைத்தெறிவதை பார்.
உண் கடல் என் கடலில் கரையும் வரை அது தொடரும்.
ஒற்றை காலின் ஒருவிரல்நுணி தொட்ட பயனம் அதுதான்.