பறவை வக்கேசனுக்கு போனகதை

2006

பறந்து திரிந்து
பட்டினி தவிர்க்கப்
பொரியெடுத்துத் திரிந்த
பறவை கண்டு
பொறாமைப் பட்டனர்

உன் சிறகை புசுக்கென்று நீவிரித்தால்
காற்றுக் கலைந்து அடிவானம் வரை
உன் ஆட்சி விழும் – என
ஆடையின்றி வாடையின் மெலிந்து
பேளையில் இருந்த பெட்டிப்பாம்புகள்
புலம்பித் தள்ளின.

பொந்துக்குள் தலையை விட்டுக்கொண்டிருந்த பறவை
மரச் சிதிலங்களில் உதடு சிராய்கத்
தலையைத் திருப்பிக் கொண்டது

எந்த நிலை வந்து சேருமோ – எனக்கு
எப்ப வந்து சாவு கூடுமோ என
பனம் படு பனையின் கிளங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாயிற் பாடியது

பொட்டன் மாடன் காடன் என்று
வேடன்கள் எத்தனை வகை

காடும் காடு சார் நிலமும் துறந்து
நீலக்கரை தொடும்
நெடுங்கேனி வயலுக்கு மேலால் பறந்து
நெல்பொறுக்கி நலிந்து
கிளிதுரத்தும் ஆச்சியின்
மிளகாய்த் தோட்டத்தின் சயிட்டால் பறந்து திரிந்து
வெட்டி வெட்டி பாத்தி கட்டி விளையாடும்
வேலன் கொட்டில் கூரையில் இளைப்பாற
பறவைக்கும் ஒருகனா பகல்பகலாய் வந்தது

அதற்கு ஒரே ஒரு வழிதான்
பட்டப் பகலில்
நட்ட நடுவானில்
பறந்து கொண்டிருந்த விமானத்தை
கையாக் பண்னியது பறவை

;அமெரிக்க ஜனாதிபதி இத்தால் அறிவதாவது
இந்தப் பறவை வக்கேசன் போகிறது;
செய்தி பறந்த சில நிமிடங்களில்
வெடித்துச் சிதறியது விமானம்.
புகை கக்கியபடி இளைப்பாறியது
ஓரு இஸ்ரேலிய கலிபர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *